பசுவைப் பாசமுடன் வளர்த்து வருபவர்கள், அதை ஒரு பிராணியாகவே கருதுவதில்லை. பசுவைக் குடும்ப உறுப்பினராகவே கருதுகிறார்கள். பசு, வீட்டின் ஐஸ்வர்யத்தைப் பெருக்குகிறது. மாடு கழனியின் செல்வத்தை விருத்தி செய்கிறது. பசுவும் மாடும் கிராமப் பொருளாதாரத்தில் இன்றியமையாதவை. தமிழில், மாடு என்றால் செல்வம் என்றே பொருள். வேறு எந்தப் பிராணிக்கும் இத்தகைய மதிப்பும் மவுசும் மரியாதையும் கிடையாது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
உழவர்களின் உற்ற தோழனான மாட்டுக்கு என பிரத்தியேகமாக பொங்கல் விழா நடத்துவது, நமது பாரம்பரியத்தில் இடம்பெற்றுள்ளது. ‘ஜல்லிக்கட்டு’ என்று குறிப்பிடப்படுவது மாட்டுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான சண்டை அல்ல. சங்ககாலத்தில், இந்நிகழ்வு, ‘ஏறு தழுவுதல்’ என்றே பதிவுசெய்யப்பட்டுள்ளது. எனவே, மாட்டுக்கும் மனிதனுக்கும் இடையிலான மோதலைச் சுட்டிக்காட்டுவதல்ல ஜல்லிக்கட்டு. மாறாக, மனிதனுக்கும் மாட்டுக்கும் இடையிலான பாசப் பிணைப்பை பிரதிபலிப்பதே ‘ஏறுதழுவுதல்’.
பாரம்பரியம் சார்ந்த விழுமியங்களைப் பிஞ்சு நெஞ்சங்களில் பதிவுசெய்யவேண்டிய கடமை நமக்கு உண்டு. இந்தக் கடமையை ராஜஸ்தான் அரசு வெகு சிறப்பாக நிறைவேற்றி உள்ளது, பாராட்டுக்குரியது. ராஜஸ்தானில் வசுந்தரா தலைமையில், பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர், பசுக்கள் பாதுகாப்புக்காகத் தனி வாரியம் அமைத்து அதைச் செம்மையான முறையில் இயக்கி வருகிறார். கோமாதாவைக் குலமாதாவாகக் கொண்டாடும் நிகழ்வு ராஜஸ்தானில் அமலாகி வருகிறது.
தொடக்கக் கல்வி பயிலும் மாணவர்களிடையே பசுவின் முக்கியத்துவத்தை, உறுதியாகவும் பதியவைக்க வேண்டும் என்ற அடிப்படையில், ராஜஸ்தான் மாநில அரசு நற்காரியம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது.
ஐந்தாம் வகுப்பு பள்ளிப் பாடத்தில், பசுவின் அருமைகளையும் பெருமைகளையும் புகழ்ந்துரைக்கும் பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், பசுவின் உடலில் ஹிந்துக் கடவுள்கள் இருப்பதைப் போல அருமையான படமும் இத்துடன் மிளிர்கிறது.
கடிதம் வாயிலாக, மாணவர்களிடம் கனிவுடன் பசு உரைப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எழிலார்ந்த எண்ணச் சித்திரம், ஈர்ப்பு மிக்கதாக உள்ளது.
என் மகன்களே, மகள்களே! நான் உங்களுக்கு உறுதி, அறிவு, ஆரோக்கியம், நீண்ட வாழ்வு, மட்டற்ற மகிழ்ச்சி உள்ளிட்டவற்றை வாரி வழங்கி வருகிறேன். என் பெருமையை என்னை அன்னையாக ஏற்றுப் போற்றுகிறார்கள். நானும் என்னைப் போற்றும் அனைவரையும் பாவிக்கிறேன்.
நான் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் போன்ற வடிவங்களில் அமுதத்தை உங்களுக்கு அளித்து வருகிறேன். என் கழிவுகள் என்று கருதப்படுகின்ற கோமியமும் சாணமும் கூடச் சிறந்த மருந்துகளே; கிருமி நாசினியாக இவை பயன்படுத்தப்படுகின்றன. சாணத்தால் தரையை மெழுகினால், அந்த இடம் மாசற்றதாகத் திகழ்கிறது. என் சகாவான எருதும், உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக உள்ளது. எனது சுவாசம் கூட சுற்றுச்சூழலைத் தூய்மைப்படுத்துகிறது” – என்று மாணவர்களுக்குப் பிரியமுடன் பசு மடல் எழுதியுள்ளது.
பசு கடிதம் எழுதுமா என்றெல்லாம் அதிகப்பிரசங்கித்தனம் செய்யக்கூடாது. சிறு பிராயத்திலிருந்தே மாணவர்களிடமும் மாணவிகளிடமும் நல்லெண்ணத்தை ஊன்றி வளர்க்கும் வகையில் இப்பாடம் அமைந்துள்ளது. இத்தகைய பாடங்கள், எல்லா மாநிலங்களிலும் இடம்பெற வேண்டும்” என்பதே நல்லோரின் விருப்பம்.