சமீபத்தில் மதுரை மாவட்டம், எழுமலையில் உள்ள பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி பற்றி விஜயபாரதம் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்:
வழக்கமாகப் பள்ளியில் நடைபெறும் இதர விழாக்களைப்போல அல்லாமல், இது மிகவும் வித்தியாசமாக இருந்தது” தாத்தா பாட்டிகளுடன் வரும் மாணவர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி. நிகழ்ச்சிக்கு வந்த ஒவ்வொரு தாத்தா பாட்டியரையும் பள்ளி ஆசிரியர்கள் வரவேற்று பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். இது அனைவரையும் நெகிழச் செதது. பல பெற்றோர்களும் தாத்தா பாட்டிகளும் எங்களுக்கு உணர்ச்சிப் பெருக்குடன் நன்றி தெரிவித்தனர்” என்கிறார் பள்ளியின் துணை முதல்வர் திருமதி ஷோபா.
நிகழ்ச்சிக்காக நாங்கள் முன்கூட்டியே கவனத்துடன் திட்டமிட்டோம். கலைநிகழ்ச்சிகள் நமது பண்பாட்டைப் பிரதிபலிக்கும் விதத்தில் இருக்க வேண்டும் என்பதில் கூடுதல் அக்கறை செலுத்தினோம். கிராமிய மணத்துடன் உள்ள பாரம்பரியப் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. திரைப்பாடல்கள் அறவே புறக்கணிக்கப்பட்டன. குடும்ப உறவுகள், முதியவர்களுக்கு ஏற்படும் தனிமை உணர்வு, பாதுகாப்பின்மை, புறக்கணிப்புகளால் ஏற்படும் விரக்தி முதலிய மனோதத்துவக் கருத்துகள் ஆங்காங்கே இடம்பெறும் விதத்தில் நாடகங்கள் நடத்தப்பட்டன.
பின்னர் ஒருசில மாணவர்களை அழைத்து விழாவின் பின்னூட்டம் பற்றி விசாரித்தோம். இந்த நிகழ்ச்சிகளின் தாக்கம் பல குடும்பங்களில் பிரதிபலித்ததை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. அந்த மாணவர்களில் சிலர் பள்ளியின் காலை பிரார்த்தனையின் போது பின்னூட்டம் அளித்தனர்” என்று குறிப்பிட்டார் பள்ளி முதல்வர் ஆறுமுக சுந்தரி.
புறக்கணிக்கப்படுவது முதியவர்கள் மட்டுமல்ல, தங்களது பிள்ளைகளும்தான் என்பதைப் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய சூழலில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்கிறார்கள். இதனால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் செலவிடும் நேரம் பெரிதும் குறைந்து விட்டது. இந்நிலையில் தாத்தா பாட்டிகளின் அரவணைப்பும் கிடைக்காத சூழ்நிலை தோன்றினால், அந்தக் குழந்தைகள் சோந்தக் குடும்பத்துக்குள்ளேயே அனாதைகளைப் போல் வளரும் நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இத்தகைய சூழலில் பள்ளிகளின் பொறுப்பு பல மடங்கு அதிகரிக்கிறது. இதுபோன்ற உணர்வு பூர்வமான நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்துவதன் மூலம் குடும்ப உறவுகளை வலுப்படுத்த வேண்டியது பள்ளிகளின் கடமை என்று நான் நினைக்கிறேன். இவற்றால் குடும்பங்களில் ஆக்கபூர்வமான மாற்றங்கள் ஏற்பட முடியும்” என்று குறிப்பிட்டார். பள்ளியின் தாளாளர் பொன். கருணாநிதி.