பரதன் பதில்கள்

ராமாயணம் போன்ற பழைய கதைகள் இன்றைய வாழ்க்கைக்கு எப்படிப்  பயன்பட  முடியும்?

– வி. குணசீலன், நெய்வேலி,

இந்தியன் வங்கி சேர்மனாக இருந்த டி.எஸ். ராகவன் குமுதம் வார இதழில் ‘ராமாயணத்தில் மேனேஜ்மெண்ட்’ என்று எழுதிய கட்டுரைகளை வானதி பதிப்பகம் ‘உன்னால் மட்டும்தான் முடியும்’ என்று வெளியிட்டுள்ளது. உங்கள் கேள்விக்கு அந்தப் புத்தகமே பதில்.

 

தினசரி  நெற்றியில்  குங்குமம்  வைத்தால்  தழும்பு  ஏற்படுகிறதே?

– சாருமதி சந்திரசேகர், பெங்களூரு

அதுபோன்ற குங்குமம் கலப்படமானது. அது கெமிக்கலில் தயாரிக்கப்படுகிறது. அவைகளை பயன்படுத்துவது ஆபத்தானது. உண்மையான மஞ்சள் குங்குமம் தேடிக் கண்டுபிடித்து வாங்கிப் பயன்படுத்துங்கள்.

 

காமராஜர் போன்ற எளிமையான தலைவர்கள் இனி தமிழகத்துக்குக் கிடைப்பார்களா?

– பெ. சதீஷ், செங்கம்

காமராஜர் போன்ற எளிமையாக இருக்கும் எவரும் இனி தமிழக காங்கிரஸ் தலைவராக முடியாதே!

இது கார்த்திக் சிதம்பரத்தின் காலம். கோடி, கோடியாய் வெளிநாடுகளில்…

 

ராம், ரஹீம் என்று அழைத்தாலும் ஆண்டவன் ஒருவரே என்ற என் கருத்து சரிதானா?

– கி. சம்பத்குமார், தண்டலம்

இது தான் ‘ஹிந்துத்வம்’! ஆனாலும் இயேசு ஒருவரே கடவுள், அல்லா ஒருவரே கடவுள் என்று கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் பேசி வரும்போது நீங்கள் மட்டும் எம்மதமும் சம்மதம் என்று சொல்வது சரிதானா?

 

தூங்குவதற்கு  தலையணை  அவசியம்தானா?

– விஜயா சம்பத், காரைக்குடி

தலையணை வைத்து உறங்குவது சுகமானதாக இருக்கும். ஆனால் அது உடல்நலனுக்குத் தீங்கானது. சமமான தரையில் படுத்து உறங்குவது நல்ல

து. கழுத்து வலி உள்ளவர்கள் தலையணையைத் தவிர்ப்பது நல்லது.

 

தாங்கள்  சமீபத்தில்  கேட்டதில்  பிடித்தது?

– திருமதி. சாவித்ரி, அமைந்தகரை

நாம் தவறு செய்தால் நாம் வக்கீலாக மாறிவிடுகிறோம். மற்றவர்கள் தவறு செய்தால் நாம் நீதிபதியாகி விடுகிறோம். – பொற்றாமரைக் கூட்டத்தில் ஒரு சிறப்புரையாளர்.

 

அத்வானியை  குடியரசுத்  தலைவர்  வேட்பாளராக  அறிவிக்காதது  ஏன்?

– பழ. சுப்பையா, விழுப்பரம்

அத்வானிக்கு நிகர் அத்வானிதான். ஆனால் அவரை அறிவித்திருந்தால் அவர் மீது ராம ஜென்மபூமி வழக்கு உள்ளதே என்று அலறியிருப்பார்கள். இப்போது வாயடைத்துப்போய் இருக்கிறார்கள்.