1.முருகன் தனது தந்தைக்கே பிரணவ உபதேசம் செய்தார் என்பதற்கு ஆதார நூல்
எது? – வே.கந்தசாமி,பழனி
கந்த புராணம்தான் ஆதாரம். இந்த சம்பவம் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் நடந்தது என்று கூறப்படுகிறது.
2. சுகங்களில் முதன்மையானது எது? – வ. அர்ஜுன்குமார், தென்காசி
இதே கேள்வியை மகாபாரதத்தில் யட்சன் தருமரிடம் கேட்கிறார் (யட்ச பிரச்சனம்). அதற்கு தருமரின் பதில்- : ‘திருப்தி’
3. சத்ரபதி சிவாஜி என்று குறிப்பிடுகிறோம். ‘சத்ரபதி’ என்பதற்கு என்ன பொருள்?-எம். பிரபுகுமார், பவானி
சத்திரம் என்றால் குடை. அரசனுடைய அடையாளங்களில் அதுவும் ஒன்று. தனது ஆளுகைக்கு உட்பட்ட மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்கான சின்னம். அதனால்தான் மன்னர்களைக் குறிப்பிடும்போது ‘‘ஒரு குடையின் கீழ் ஆளும்… என்று குறிப்பிடுகிறோம்.
4. தூத்துக்குடியில் தமிழிசை – கனிமொழி போட்டி பற்றி? – இ. அமித்ராஜ், தூத்துக்குடி
‘‘திருப்பதி கோயில் உண்டியலுக்கே போலீஸ் பாதுகாப்பா? ஏன் அந்த சாமிக்கு தனது உடமைகளை பாதுகாக்கும் திறன் இல்லையா?” – இது திருச்சி நாத்திகர் மாநாட்டில் கனிமொழி பேசியது. இதற்கு ஒவ்வொரு வாக்காளரும் கனிமொழியிடம் விளக்கம் கேட்க வேண்டும்.
5. கோலத்தில் தாமரைப்பூ இருந்தால் அது தேர்தல் விதிமுறை மீறலா? – வே. செந்தாமரை, திருவண்ணாமலை
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் உள்ளே திருவிழாவிற்காக கோலம் வரைந்திருந்தார்கள். அதில் தாமரை பூ இடம் பெற்றிருந்தது என்பதற்காக அந்த கோலத்தை போலீஸ் அதிகாரிகள் அழித்திருக்கிறார்கள். சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் சரியான கோமாளிகள்.
6. திமுகவின் தேர்தல் அறிக்கை பற்றி? – சி. புஸ்பராஜ், செங்கம்
அதை வெளியிடும்முன்பு கருணாநிதி சமாதியில் வைத்து வணங்கிவந்தார். ஸ்டாலின். கோயிலில் வைத்து வணங்கினால் மூடநம்பிக்கை. சமாதியில் வைத்து வணங்கிவந்தால் அது பகுத்தறிவாம்!
7. சபரிமலை ஐயப்பன் கோயில் பிரச்சனை தேர்தலில் எதிரொலிக்குமா? – தி. குருசாமி, கோயம்புத்தூர்
‘‘எங்கள் வீட்டில் அனைவரும் ஐயப்ப பக்தர்கள். சபரிமலை கோயில் பாரம்பரியத்தை சீர்குலைத்த கம்யூனிஸ்டுகள் எங்கள் வீட்டிற்கு ஓட்டு கேட்டு வரவேண்டாம்” என்று கம்யூனிஸ்டு போட்டியிடும் மதுரை தொகுதியில் வீடுகளில் வாசலில் எழுதி ஒட்டி வைத்துள்ளதாக தினமலரில் செய்தி வெளிவந்துள்ளது. சபாஷ். இது கம்யூனிஸ்டுகள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளையும் எதிரொலிக்கும் என்றே தோன்றுகிறது.