பரதன் பதில்கள்

கோயிலில் தரிசனம் முடிந்தபிறகு சிறிதுநேரம் உட்கார்ந்து வரவேண்டும்  என்பது  நியதியா?       

– ஏ. ஹரிணி, புதுக்கோட்டை 

வயிறு நிறையப் புல்லைத் தின்ற பசு, ஒரு இடத்தில் அமைதியாக படுத்துக் கொண்டு அசை போடுகிறது. அதுபோல சாமி கும்பிட்டபிறகு சிறிதுநேரம் உட்கார்ந்து நமது மனசாட்சி நமக்கு என்ன கூறுகிறது என்பதை சிந்திக்க ஒரு வாய்ப்பு. மனசாட்சி என்பது தெய்வத்தின் குரல்தான்.

 

திருமணத்திற்கு  ஜாதகப்   பொருத்தம்  அவசியம்தானா?      

– க. வெற்றிவேல், சேலம்

நமது ஹிந்து மதத்தில் ஜாதகம் பார்ப்பது என்பது பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. இதெல்லாம் ஒரு நம்பிக்கைதான். உங்களுக்கு வேண்டுமா, வேண்டாமா என்பது உங்கள் விருப்பம்.

 

ஹரியும் சிவனும் ஒண்ணு. இதை அறியாதவர் வாயில் மண்ணு – விளக்கம் தருக?       

-ம. சுவேதா, திருத்தணி

ஹரியும், சிவனும் மட்டுமல்ல, எல்லா கடவுளும் ஒண்ணுதான். என்னென்ன கடவுள் பெயர்கள் உண்டோ அத்தனையும் ஒரே கடவுள்தான். இதற்கு மாறாக எங்க கடவுள் மட்டுமே ‘உசத்தி’ என்று சொல்லுகிறவர்கள்  முட்டாள்கள்.

 

நண்பர்கள்  புத்தகங்களை  இரவல்  கேட்டால்  கொடுக்கலாமா?      

– மு. கார்த்தி, திருச்சி 

எனது நண்பர் ஒருவர் வீட்டில் ஒரு நூல் நிலையமே வைத்திருந்தார். அவரிடம் ஒரு புத்தகத்தை படித்துவிட்டுத் தருகிறேன் தாருங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் படித்துவிட்டுத் தருகிறேன் என்று மட்டும் சொல்லாதீர்கள். ஏன் என்றால் இங்குள்ள புத்தகங்கள் அனைத்துமே நான் அப்படி வாங்கி வந்ததுதான் என்றார். இப்போது சொல்லுங்கள்…  கொடுக்கலாமா?

 

‘மெர்சல்’  படத்திற்கு  பாஜக  எதிர்ப்பு  ஏன்?        

– த. கிருஷ்ணன், சென்னை 

கோயிலைக் கட்டுவதற்குப் பதிலாக மருத்துவமனைகளைக் கட்டுங்கள் என்று வசனம் பேசும் விஜய் சர்ச் கட்டுவதற்குப் பதிலாக மருத்துவமனைகளை கட்டுங்கள் என்று சொல்லுவாரா? சொல்லமாட்டார். ஏன் என்றால் அவர் ஜோசப் விஜய்.

 

தலைக்கு ‘டை’ அடிக்கலாமா?       

– பு. கந்தசாமி, மயிலாடுதுறை 

இதெல்லாம் அவரவர் சௌகரியம். இயற்கை மூலிகை மூலம் தயாரித்தது என்றால் ஆபத்தில்லாதது. கெமிக்கல் தயாரிப்பு என்றால் ஆபத்தானது. பரதனாருக்கு இந்தப் பிரச்சனையே இல்லை.

 

தமிழ் ‘தி இந்து’ ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ என கருணாநிதி வரலாற்றை  புத்தகமாக  வெளியிட்டுள்ளதே?      

– வே. ஏகாம்பரம், கோவை  

சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆங்கிலேயனை எதிர்த்து ஜி. சுப்பிரமணி ஐயர் துவக்கிய ‘ஹிந்து’ பத்திரிகையின் இன்றைய தரத்துக்கு இது ஓர் உதாரணம், கொஞ்சம் பொறுங்கள். திருமா, சீமான் போன்றோரின் வாழ்க்கை வரலாறும் வெளிவரும்.