பத்திரிகைகளின் பார்வையில் விஜயபாரதம் தீபாவளி மலர் 2015

 

TAMIL PAPERசுவாமி கவுதமானந்தரின் ஆசியுரையுடன் தொடங்கியுள்ள விஜயபாரதம் தீபாவளி மலரில் ஏராள  மான ஆன்மிக கட்டுரைகள், சுவாமி விமூர்த்தானந்தருடன் இளைஞர்கள் நடத்தியுள்ள நேர்காணல் பல்வேறு ஆன்மிக சந்தேகங்களுக்கு விடையாக அமைந்துள்ளது.

அத்துடன் சிரிப்பு துணுக்குகள், கருத்து சித்திரங்கள், புதிர்கள் போன்ற சின்ன சின்ன தகவல்களும் மலருக்கு சிறப்பு சேர்த்துள்ளன. 508 பக்கங்களுடன் பெரிய அளவில் வெளியாகி இருக்கும் இந்த மலர் ராமானுஜரின் அட்டைப் படத்துடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

தினமலர்

சுவாமி விமூர்த்தானந்தாவுடனான, இளைய சமுதாயத்தினரின் சந்திப்போடு, மலர் துவங்குகிறது; இளைஞர்களின் கேள்விகளுக்கு, அவர் பதில் அளித்துள்ள விதம் அருமை!

‘எழில், இன்பம், இறை’ ‘கதை சொல்லும் கலை நகரம்’ ஆகிய பயணக்கட்டுரைகள், நம்மை வசீகரிக்கின்றன; நகரத்தார் பற்றிய பாரம்பரிய கட்டுரை, ரசிக்க வைத்துள்ளது.

தேசிக விநாயகம் பிள்ளை, பாரதி, பாரதிதாசன் ஆகியோரில் யார், தமிழகத்தின் முதல் தேசிய கவி என்ற ஆய்வுக் கட்டுரை, விவாதம் செய்ய தூண்டும்.

கோவில் திருப்பணிகளில் ஈடுபாடு காட்டி, அம்மணி அம்மாள், பத்ராசலம் தம்மக்கா, ராணி ராசமணி அம்மையார், சிவபிருந்தா தேவி உள்ளிட்ட பெண்கள் பற்றிய தொகுப்பை, பூச்செண்டு கொடுத்து வரவேற்கலாம்.

 

தி இந்து

விஜய பாரதம்’ வெளியிட்டுள்ள தீபாவளி மலர் தனி வகையானது. சங்க இலக்கியங்களிலும் திருக்குறளிலும் சனாதன தர்மமும் இந்துத்துவச் சிந்தனையும் உள்ளன என்கிறது ஒரு கட்டுரை. ஆண்களைக் கவரும் உடையணிந்த மாதவியால் தான் கோவலன் கெட்டான். கல்லூரியில் மாணவிகளுக்கு நவீன உடைகள் வேண்டாம் என்கிறது ‘பெண்ணியம்’ தொடர்பான கட்டுரை.

இந்து மதத்தை விட்டு அம்பேத்கர் வெளியேறியபோது வெளியிட்ட 22 இந்து மத எதிர்ப்பு உறுதிமொழிகள் பற்றிய பாடத்தைக் குஜராத்தில் நீக்கியதைக் கண்டு வருத்தம் ஒரு ஆறுதல் செதி. அம்பேத்கரின் 125-வது பிறந்த தினத்துக்காக எழுதப்பட்டுள்ள கவிதை வரிகளாக இந்த மலரில் அவை இடம் பெற்றுள்ளன.

தமிழின் இலக்கியங்கள் இந்து மதக் கருத்துகள் எனும் தேசியச் சிந்தனையின் தொடர்ச்சிதான் என்று நிறுவும் முயற்சியை மலரில் ஆங்காங்கே காணமுடிகிறது. சினிமா உட்படப் பன்முகங்களைக் கொண்ட மலர்.

 

தினமணி

சுவாமி விமூர்த்தானந்தரின் நேர்காணல் மலரின் முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.

மறைந்த எழுத்தாளர் கௌதம நீலாம்பரனின் கடைசிக் கதையான இலங்கை ராணியும் இடம் பெற்றுள்ளது.

பேராசிரியர் சரஸ்வதி ராமநாதனின் நகரத்தார் குறித்த கட்டுரை, தான் சந்தித்த மகான்கள் குறித்த இல. கணேசனின் கட்டுரை, ஆர்.பி.வி.எஸ் மணியனின் கட்டுரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. தஞ்சை வெ. கோபாலன், பி.என். பரசுராமன், பத்மன், நரசய்யா, மா.கி. ரமணன் உள்ளிட்டோரின் கட்டுரைகளும் மலரில் மணம் வீசுகின்றன.

காங்டாங், மைசூரு, ஹம்பி, தலைக்காவிரி ஆகிய இடங்கள் தொடர்பான பயணக் கட்டுரைகளும் தோரணமலை, அந்தியூர் கால்நடைச் சந்தை, நட்டாற்றீஸ்வரர் கோயில் தொடர்பான கட்டுரைகளும் மலரின் பல்சுவையைக் கூட்டுகின்றன. நல்விருந்து.

 

தினமலர் (வேலூர் பதிப்பு)

விஜயபாரதம் வார இதழின் தீபாவளி மலர், இலக்கியமும் தேசியமும் கலந்த பல்சுவை விருந்தாக அமைந்துள்ளது.

ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு வருவதால், இதழ் அட்டையை ஓவியர் மணியன் செல்வனின் ராமானுஜர் ஓவியம் அலங்கரிக்கிறது. ராமானுஜரின் வாழ்க்கை நெறியை முனைவர் பூமாவின் கட்டுரை சிறப்பாக அறிமுகப்படுத்தியுள்ளது. வடலூர் வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றை ஓவியர் தாமரை சித்திரக் கதையாக வழங்கியுள்ளார்.

இந்த இதழில் தமிழ் இலக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நம்மிடம் இருந்து வழக்கொழிந்து போன நீதிநூல்களை நினைவுபடுத்தும் விதமாக, தமிழுலகம் மறந்த நீதி நூல்கள் என்ற கட்டுரை அமைந்துள்ளது. பல்லவ சூரியனின் திருமுருகாற்றுப்படை காட்டும் தெய்வீக அழகு, ஆர்.பி.வி.எஸ் மணியனின் சங்கத் தமிழில் தேசியம், பத்மனின் சங்க கால வேதநெறி போன்ற இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் மலருக்கு அழகு சேர்க்கின்றன.

சுவாமி விமூர்த்தானந்தருடனான நேர்காணலும் கோயில் செல்வதின் அர்த்தத்தை விளக்கும் வகையில் பி.என். பரசுராமன் எழுதிய ‘வாங்க, சாமி கும்பிடலாம்’ கட்டுரையின் சிறப்பம்சங்கள்.

ஓரே நாடு

தீபாவளி மலர்களின் பட்டியலில் விஜயபாரதத்தின் படைப்புக்கு எப்போதுமே சிறப்பிடம் உண்டு. சுவாமி கௌதமானந்த மகராஜின் ஆசியுரை மலருக்கே மகுடமாக உள்ளது. திருப்புகழ்த் திலகம் மதிவண்ணனின் ‘இனிய தமிழில் இலக்குமி தோத்திரம்’, கே. சுவர்ணாவின் ‘காவிரியின் மகிமை பேசும் துலா மாதம் ஐப்பசி’ ஆகியவை பரிமளம் பரப்புகின்றன. சுவாமி விமூர்த்தானந்தரின் தெளிவார்ந்த சிந்தனை நித்திலங்களை கற்பகலட்சுமி சுரேஷ் நேர்த்தியாகக் கோர்த்தளித்துள்ளார். டாக்டர் தாரிணி கிருஷ்ணன் அளித்த பேட்டியை எழுத்தாளர் காந்தலட்சுமி சந்திரமௌலி செம்மையாகப் பதிவு செய்துள்ளார். ‘தேவாமிர்தம்’ சாவித்திரி கண்ணனின் நேர்காணல் தெறிப்புகளை செய்தியாளர் ஆர்.பி.எம் அருமையாகத் தொடுத்துள்ளார்.

ஓவியர் தாமரையின் கைவண்ணத்தில் ‘இராமலிங்க வள்லலார்’ படக்கதை, கண்ணையும் கருத்தையும் ஈர்க்கிறது. அகிலா கார்த்திகேயனின் ‘நடக்க விடுவோமா?’ ஊடகத் துறையை கிண்டல் செய்வது நிகழ்கால நடப்புகளைப் பிரதிபலிக்கிறது.