நெளிகிறார்கள் நாயகர்கள்

உயர் மதிப்புள்ள ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவித்த நவம்பர் 8 இரவிலிருந்தே நாட்டில் பல அரசியல் தலைவர்களுக்கு தூக்கம் பறிபோய்விட்டது. அவர்களில் பலர் தற்போது என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் பிதற்றத் துவங்கிவிட்டனர்.  மோடி கொடுத்த அடி இவர்களை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை உணர முடிகிறது.

இவர்களில் தலையாயவர், தில்லி மாநில முதல்வர் . இந்திய வருவாய்த் துறை பணியிலிருந்து விருப்பஓய்வு பெற்று அரசியலுக்கு வந்த இந்த மகா புத்திசாலியின் கருத்துகள், கிறுக்குத்தனமாக மட்டும் இல்லை; மோடி மீதான காழ்ப்புணர்வின் உச்சகட்டமாகவும் உள்ளன.

அண்மையில் கேஜ்ரிவால் உதிர்த்த முத்து,  500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாக் காசாக்கியதன் மூலம் ஏழை மக்களை சிரமத்துக்குள்ளாக்கி, அதன்மூலம் பெரு நிறுவனங்களுக்கு 10 லட்சம் கோடி வழங்கத் திட்டமிடுகிறார் மோடி என்பது. இது எப்படி சாத்தியம் என்பது எனக்கு இன்னமும் புரியவில்லை. ஒருவேளை ஐஆர்எஸ் பணியில் இருந்திருந்தால் புரிந்திருக்குமோ?

அது மட்டுமல்ல, இந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பதற்கு முன்னர் மோடி தனது நண்பர்களுக்கு இந்த ரகசியத்தைச் சொல்லி அவர்களைக் காப்பாற்றிவிட்டார் என்றும் புரளி கிளப்பினார் கேஜ்ரிவால். இதை நமது செய்திப்பசி ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு பெரிதுபடுத்தின.

இந்நிலையில், நவ. 18ம் தேதி நாளிதழ்களில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. மஹாராஷ்டிர மாநிலத்தில் பாஜக அமைச்சர் சுபாஷ் தேஷ்முக்கின் காரிலிருந்து ரூ. 91 லட்சம் மதிப்புள்ள உயர் மதிப்பு கரன்ஸி நோட்டுகள் மாநகராட்சி அதிகாரிகளின் சோதனையில் பிடிபட்டுள்ளன என்பதுதான் அந்தச் செய்தி.  இதை ‘தீக்கதிர்’ உள்ளிட்ட எதிரிப் பத்திரிகைகள் புளகாங்கிதத்துடன் வெளியிட்டு மகிழ்ந்தன. இப்போது நமது கேள்வி என்னவென்றால், மோடி இந்த பாஜக நண்பர்களுக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை? கேஜ்ரிவால் கூறியது போல மோடி ரகசியத்தைக் கசிய விட்டிருந்தால், பாஜகவைச் சேர்ந்தவரே பாதிக்கப்படுவார்களா?

இவரைவிட அரசியல் மேதாவி ஒருவர் இருக்கிறார். அவர் மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி. சாரதா நிதிநிறுவன முறைகேடு விசாரணை வளையத்துக்குள் சிக்கியுள்ள மமதா திடீரென மோடிக்கு எதிரான தேசியத் தலைவியாக அவதாரம் எடுக்க முனைகிறார். அதற்காக மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் யெச்சூரிக்கு சமாதானத் தூது விடவும் தயாராகிவிட்டார். நல்லவேளை, மமதாவின் அரசியல் சதியைப் புரிந்துகொண்ட யெச்சூரி, ஊழல் கறை படிந்த மமதாவின் உதவி தங்களுக்குத் தேவையில்லை என்று நிராகரித்துவிட்டார்.

ஆயினும், தில்லி முதல்வருடன் இணைந்து மோடிக்கு எதிராக போராட்டங்களை நடத்த காய்களை நகர்த்தி வருகிறார் மமதா. ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் இவர்களின் கோரிக்கை. அப்போதுதானே, பதுக்கி வைத்துள்ள கருப்புப்பணத்தை வெள்ளையாக்க முடியும்?

இவர்கள் இருவருக்கும் சளைத்தவரல்ல கேரள முதல்வர் பினராயி விஜயன். ரூபாய் நோட்டுகள் விவகாரத்தைப் பயன்படுத்தி கேரள கூட்டுறவுத் துறையை முடக்க மத்திய அரசு சதி செய்கிறது என்று புகார் கூறி இருக்கிறார். அது எப்படி என்பதையும் அவரே விளக்கி இருக்கலாம். உடனிருந்த சீதாராம் யெச்சூரியோ, உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் முடக்கப்பட்டது மக்கள் விரோத நடவடிக்கை என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். எந்த மக்கள்? மார்க்சிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களான ஏழை மக்களா? திரை மறைவில் பல கோடிகளைக் கொட்டிக் கொடுக்கும் பணமுதலைகளா?

இப்போதைக்கு மூன்று மாநில முதல்வர்கள் மோடிக்கு எதிராக முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். நாடு முழுவதும் உள்ள பாஜக அல்லாத கட்சிகளின் முதல்வர்களை ஓரணியில் திரட்டுவது மமதாவின் திட்டமாம். பகல் கனவு காண அனைவருக்கும் உரிமை இருக்கிறது. முதலாவதாக, மமதாவின் அணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட்கள் சேர வாய்ப்பில்லை. அடுத்து, பிகார் முதல்வர் நிதிஷ்குமாரும் ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் கருப்புப் பணத்துக்கு எதிரான மோடியின் யுத்தத்தை ஆதரித்து விட்டார்கள். தெலுங்கானா முதல்வர் ராவும் மோடியை எதிர்க்கத் தயாரில்லை. ஆனாலும் மமதாவுக்கு கொம்பு சீவுகிறார்கள்,  பின்னணியிலிருந்து இந்த நாடகத்தை இயக்கும் பெரு நிறுவன முதலாளிகள்.

மோடி எதிர்ப்பாளர்களில் மற்றொரு வகையினருக்கு நம்முடைய காங்கிரஸ் இளவரசர் ராகுல் தலைமை வகிக்கிறார். ரூ. 4,000 செல்லாத நோட்டுகளை மாற்ற தில்லியில் வங்கிக் கிளைக்கு சென்று வரிசையில் நின்ற அவருக்கு நல்ல ஊடக விளம்பரம் கிடைத்தது.  “ஏழைகள் மட்டுமே வரிசையில் நிற்கிறார்கள். பணக்காரர்கள் எவரும் வங்கி வரிசையில் நிற்கவில்லை’ என்று காங்கிரஸ்காரர்கள் புலம்பிக் கொண்டிருந்த அதே நாளில் (நவம்பர் 11), போஃபர்ஸ் ஊழல், 2ஜி ஊழல் போன்ற பல ஊழல்களில் திளைத்த காங்கிரஸ் கட்சியின் யுவராஜா, பல கோடிகள் பணமிருந்தும் பயன்படுத்த வழி தெரியாமல் (அவரிடம் எந்த வங்கி அட்டையும் இல்லை போல) தினசரி செலவுக்கே வழியில்லாமல் வங்கிக்கு வந்தார். அன்று எடுத்த ரூ.4,000 அன்றே செலவாகி இருக்கும். அதன் பிறகு அவர் மறுபடி ஏன் வங்கிக்கு வரவில்லை என்பது புரியாத புதிர்.

அதேசமயம், மோடியின் தாய் ஹீரா பென் (97) ஆமதாபாத்தில் வங்கிக்கு சென்று வரிசையில் காத்திருந்து தன்னிடமிருந்த ரூ. 500 நோட்டுகளை மாற்றியது மோடி நடத்திய நாடகமாம், தமிழின் ஒரே அறிவுஜீவியான சமஸ் ‘தி இந்து’ பத்திரிகையில் எழுதுகிறார். தி இந்துவில் நேர்மையான, நடுநிலையான செய்தியையோ, கட்டுரையையோ எதிர்பார்ப்பது நமது தவறுதான். எனினும் இந்த இடத்தில் ஒப்பீடு தேவையாக இருக்கிறது.

ராகுல் இப்படி என்றால், அவரது காஷ்மீரப் பணியாளர் குலாம் நபி ஆசாத், உரீ தாக்குதலில் இறந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை விட, வங்கியில் பணத்தை மாற்ற நின்று இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று கூறி படைவீரர்களின் தியாகத்தைக் கொச்சைப்படுத்துகிறார். ஒருசில இடங்களில் ஆரோக்கியக் குறைபாட்டால் இறந்தவர்களை மிகைப்படுத்தி அரசை வசை பாடுகிறது ஒரு கூட்டம். இதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பதை ஆராய நடுநிலைமை தேவை. அது மோடி எதிர்ப்பாளர்களிடம் கிஞ்சித்தும் இல்லை.

செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் அவதிப்படுவதும் வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருப்பதும் உண்மைதான். இது நமது வங்கி நிர்வாகங்களின் நடைமுறைச் சிக்கலின் ஒரு விளைவே. தவிர கருப்புப் பண முதலைகளின் பணத்தை வெள்ளையாக்க உதவும் வகையில் மறுபடி மறுபடி மக்கள் வரிசையில் நிற்பார்கள் என்று அரசு எதிர்பார்க்கவில்லை. ஊடகங்கள் கிளப்பிய பீதியும் பெருமளவிலான மக்களை சஞ்சலப்படுத்தி, அவர்களை வங்கிகள் நோக்கி படையெடுக்கச் செய்தது. எனவே அரசு பல மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வந்தது. ஏனெனில், மோடியின் இந்த யுத்தத்தில் மக்களின் பங்களிப்பு அவசியம். அதைச் சீர்குலைப்பதில் ஓரளவுக்கு ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் வெற்றி பெற்றதன் விளைவே வங்கிகளில் காணப்படும் நீண்ட வரிசை.

ஒரே நாளில் ரூ. 16 லட்சம் கோடி மதிப்புள்ள உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை குறைந்த மதிப்புள்ள நோட்டுகளாக மாற்றித் தர முடியாது. எனவேதான் வங்கிகளில் அவற்றை முதலீடு செய்யுமாறு அரசு வலியுறுத்துகிறது. கருப்புப் பணத்தை ஒழிக்கும் வழிமுறையும் அதுவே. இந்த நடைமுறைக்கு, ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் செய்த அதீத பொய்ப் பிரசாரத்தால் சிக்கல் நேரிட்டிருக்கிறது.

கடைசியாக களத்தில் வந்து குதித்திருக்கிறார், ‘வாசன் ஐ கேர் புகழ்’ ப. சிதம்பரம். ஆயிரக்கணக்கான  ‘பணக்கார’ மற்றும்  ‘ஊழல்வாதிகள்’ வங்கிகளில் வரிசையில் நிற்கின்றனர். ‘ஏழைகள்’ தங்கள் வீடுகளில் இருந்து கொண்டாடுகின்றனர் என்று கேலி பேசி இருக்கிறார் ப.சி. அவரது உள்ளக்கிடக்கை அனைவரும் அறிந்ததுதான். மோடி அரசின் எந்தத் திட்டம் நல்ல முறையில் நிறைவேற வேண்டும் என்று ப.சி. விரும்பி இருக்கிறார்?  அவரது சாபத்தைக் கண்டுகொள்ளத் தேவையில்லை.

ப.சி.க்கு முன் நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி இப்போது ஜனாதிபதி. அவர் மோடியின் நடவடிக்கைகளை வரவேற்றிருக்கிறார். அதுபோதும், ப.சி. போன்ற சுயநல வேடதாரிகளின் சான்றிதழ்கள் மோடி அரசுக்குத் தேவையில்லை.

மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்த ஈசனுக்கு விழுந்த அடி அனைவருக்கும் விழுந்தது போல, கருப்புப்பணத்துக்கு எதிரான மோடி அரசின் நடவடிக்கைகளால் அனைத்துத் தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கருப்புப் பணத்தால் ஏற்பட்ட வீக்கத்தை வளர்ச்சி என்று நம்பி வந்த நமக்கு இத்தகைய அதிர்ச்சி தேவையே. இந்த சோதனையிலிருந்து நாடு வெற்றிகரமாக மீளும்போது, கருப்புப் பொருளாதாரம் ஒழிந்து உண்மையான பொருளாதாரம் சாத்தியமாகும்.

மடியில் கனமில்லாதவர்கள் இந்த அரசால் பாதிக்கப்படப் போவதில்லை. அவர்கள் அஞ்ச வேண்டியதும் இல்லை. ஆனால், பலகோடி கருப்புப் பணத்தை வைத்துக்கொண்டு திகைக்கும் ஆசாமிகள் அரசியல்வாதிகள் என்ற போர்வையில் மக்களைக் குழப்ப முயல்கிறார்கள். அவர்களின் பிதற்றலை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.  நாடு உயர வேண்டும் என்று நினைக்கும் நல்லுள்ளங்கள் அனைவரும் இந்தச் செய்தியைப் பரப்புவதே தற்போதைய கடமை.  டூ

 

நீதி தேவன் மயக்கம்

நாட்டு மக்களுக்கு உண்மை நிலவரத்தை உணர்த்த வேண்டியவர்களே அரசைச் சாடுவதற்காக மக்களை குழப்பத்தில் தள்ளுவது மிகவும் கொடுமை. ஆயினும் அவர்கள் எதிர்பார்த்ததுபோல மோசமான விளைவுகள் ஏற்படவில்லை என்பது ஒருவகையில் ஆறுதல்.

ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதி இதைத்தான் விரும்புகிறார் போலிருக்கிறது.  ரூபாய் நோட்டு விவகாரத்தால் நாட்டில் கலவரங்கள் வெடிக்கும் வாய்ப்புள்ளது என்று எச்சரித்திருக்கிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.தாக்குர். இது அவரது எச்சரிக்கையா, விருப்பமா? இதுதான் நீதி பரிபாலன லட்சணமா?

நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப கொலீஜியம் அனுப்பிய 77 பேர் பட்டியலில் 33 பேரை மட்டுமே ஏற்று, மீதமுள்ள 44 பேரை மாற்றுமாறு மத்திய அரசு திருப்பி அனுப்பியதால் உச்சகட்டக் கோபத்தில் இருக்கிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.தாக்குர். மத்திய அரசு 44 பேரை பின்னணியில், அவர்களின் பின்புலமும் உளவுத்துறை அறிக்கைகளும் காரணமாக உள்ளன. ஆனாலும், அவர்களையே நீதிபதியாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் கொலீஜியமும் துடிப்பது ஏன்? வெளிப்படைத் தன்மையும் நேர்மையும் நீதிபதிகள் நியமனத்தில் இருக்க வேண்டாமா?

மத்திய அரசின் நீதிபதிகள் நியமனச் சட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதிலிருந்தே மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இடையிலான மோதல் கடந்த ஓராண்டாகவே தொடர்கிறது. இந்நிலையில், அரசை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கும் எந்த வாய்ப்பையும் நீதிபதிகள் தவற விடுவதில்லை. தற்போது, டி.எஸ்.தாக்குரின் எச்சரிக்கை (மிரட்டல்?) வெளிவந்திருப்பதன் பின்புலம் இதுவே.

கருப்புப் பணத்தை பதுக்கி இருப்பவர்களின் கைப்பாவையாக எதிர்க்கட்சிகள் சோரம்போய் வரும் நிலையில், உச்ச நீதிமன்றமும் அவர்களுக்கு தோள் கொடுக்கச் செல்கிறதோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஆயினும், கருப்புப் பணப் பதுக்கலுக்கு எதிரான மத்திய அரசின் அதிரடி முடிவுக்கு தடை விதிக்க நீதிமன்றம் முற்படவில்லை. மக்களின் ஏகோபித்த ஆதரவுக்கு எதிராகச் செயல்பட நீதிமன்றம் துணியாது என்றே நம்புவோம்.