மரியா விர்த் ஒரு ஜெர்மானியர் எழுத்தாளர். ஹாம்பெர்க் பல்கலைக்கழகத்தில் உளவியல் பட்டம் பெற்றவர். ஹிந்து துறவிகளான ஆனந்தமயி மா, தேவரஹா பாபா ஆகியோரின் நேரடி ஆசியினால் நீண்ட காலம் இந்தியாவில் தங்கி சனாதன தர்மத்தை அறிந்து அதன்படி வாழ்ந்து வருகிறார். ஜெர்மானிய மொழி
யில் இந்தியா பற்றி பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி உள்ளார். இவர் முதல் முறையாக ஆங்கிலத்தில் “இந்தியாவுக்கு நன்றி ” ( Thank You India) என்ற நூலை எழுதி அண்மையில் வெளியிட்டுள்ளார். அவரது நேர்காணல் இது.)
பயணத்தின் இடைநிறுத்தமாக 1980ல் இந்தியா வந்த நீங்கள் திட்டமிட்டதை விட அதிக காலம் தங்கியது எப்படி நிகழ்ந்தது?
இந்தியாவுக்கு வந்தவுடனே ” ஞான யோகம்” என்ற சுவாமி விவேகானந்தரின் புத்தகத்தை பார்த்தேன், படித்தேன். அது என்னிடம் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தபெரிய உலகத்தில் நாம் சிறிய மனிதர்கள் என்று நினைத்தால் அது தவறு. ஏனென்றால் ‘உள்ளார்ந்த சாரத்தில் நாமும் பிரம்மமும் ஒன்றுதான். தெய்வீகம் நம்முள்ளே உள்ளது, என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.
இது எனக்குள் மிகப் பெரிய விழிப்பை, திறப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் தெய்வம் என்னிடமிருந்து அப்பாற்பட்டது, தனியானது என்றே எனக்கு கற்பிக்கப்பட்டிருந்தது. அதில் நான் நம்பிக்கை இழந்திருந்தேன் என்பது வேறு விஷயம். ஆனால் நம்மை விட உயர்வான சக்தி இருப்பதை நான் உணர்ந்திருந்தேன். இந்நிலையில் உனக்குள்ளேயே கடவுள் இருக்கிறார் என்ற கருத்து எனக்கு பொருள் பொதிந்ததாக தெரிந்தது. எனவே அதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினேன்.
என்னுடைய அதிர்ஷ்டம் 1980 ஏப்ரல் மாதம் ஹரித்துவாரில் நடந்த அர்த்த கும்பமேளா தேவரஹா பாபாவையும் மா ஆனந்தமயியை சந்திக்கும் வாய்ப்பாக அமைந்தது. நான் தேவரஹா பாபாவிடம் நீண்ட காலம் இந்தியாவில் தங்கியிருக்க வேண்டும் என்ற என்னுடைய ஆவலை வெளிப்படுத்தினேன். பாபாவின் ‘ விசேஷ’ ஆசிகள் எனக்கு கிடைத்திருப்பதாக ஒரு சாது மொழி பெயர்த்து கூறினார். அவர் ‘விசேஷம் ‘ என்ற வார்த்தையை அழுத்தமாக கூறினார். 38 ஆண்டுகள் கழிந்து விட்டன. பாபாவின் ஆசிகள் ‘விசேஷமானவை’தான். அதற்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
நீங்கள் அடிக்கடி ஹரித்துவாரத்திற்கும் ரிஷிகேஷிற்கும் வருகிறீர்கள். கங்கை நதி பற்றிய நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் உங்களை இங்கு ஈர்க்கின்றதா?
கங்கா மாதா உயிர்ப்புள்ளவள் என்பதை உணர்வதற்கு எனக்கு சில காலம் பிடித்தது. இந்தியர்களுக்கு அது இயல்பாக வந்து விடுகிறது. ஈஸ்வரன் அனைத்திலும் வியாபிக்கிறான் என்பதை நீங்கள் சிறுவயதிலிருந்தே கேட்டு வளர்கிறீர்கள்.
ஆனால், மேற்கத்தியர்களான நாங்கள் உலகிலுள்ள எல்லாமே உயிரற்ற ஜடப்பொருள்கள், விழிப்புணர்வு என்பது மனித மூளையினால் மட்டுமே நிகழ்கிறது என்று கேட்டு வளர்ந்தோம். இந்த மேற்கத்திய சிந்தனை தவறானது. உங்கள் ரிஷிகள் சரியாக புரிந்துகொண்டவர்கள். அதை விஞ்ஞானிகள் மெதுவாக இப்போது கண்டுபிடித்து வருகிறார்கள்.
உங்கள் நூல்களில், கங்கை பிரம்ம லோகத்தில் பாய்ந்தது, என்று எழுதியிருக்கிறது. இன்றைய அறிவியல் பால்வெளி என்று கூறுகிறதே அதுதான் ஆகாசகங்கையா? நம் பிரபஞ்சம் பல லட்சம் ஆண்டு பழமையானது. பெருவெடிப்புக்கு பின்பு நிகழ்ந்தவை எல்லாவற்றையும் அறிவோம் என்று உறுதியாக சொல்லமுடியாது .
“இந்தியாவுக்கு நன்றி”
(Thank you India) என்ற நூலை எழுத உங்களை தூண்டியது எது?
ரிஷிகளிடமிருந்து பாரம்பரிய சொத்தாக ஆழ்ந்த ஞானம், யோகா, சமஸ்கிருதம்.. இன்னும் ஏராளமானவற்றை பெற்றுள்ளார்கள் என்பதை இந்தியர்கள் பலரும் உணரவே இல்லை என்றே நான் கருதுகிறேன். இந்தியர்களை அவர்களுடைய மரபிலிருந்து துண்டிக்க வேண்டுமென பிரிட்டிஷார் விரும்பினார்கள், அதில் வெற்றியும் பெற்றார்கள்.
இந்தியர்களில் படித்த வர்க்கத்தினர் ஹிந்து தர்மத்தை கீழானதாகவே பார்க்கிறார்கள். எனவே தங்கள் மரபிலிருந்து துண்டிக்கப்பட்ட இந்தியர்களுக்கு ஹிந்து குருமார்களுடனான எனது சந்திப்பு, இறைவனைப் பற்றிய சிந்தனை, அன்பு, மரணம், மறுபிறப்பு, ‘ நவீன ‘ இந்தியா பற்றிய என்னுடைய அனுபவங்கள், கருத்துகள், அதே வேளையில் இந்த பழமையான அழகிய தேசத்தில் ஒளிரும் ஞானத்தைப் பற்றியும் பகிர்ந்து கொள்ளவே இந்த நூலை எழுதினேன்.
இந்திய காலச்சாரத்தின் தூதராக உங்களை சிலர் கருதுகிறார்கள். அது பற்றி…?
நான் கிறிஸ்தவராக பிறந்ததால் கிறிஸ்தவ மதம் பற்றி உள்ளும் புறமும் நன்கு தெரியும். இறுகிய நம்பிக்கைகள் மீது கட்டமைக்கப்பட்ட மதங்களை ஹிந்து தர்மத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஹிந்து தர்மம் உயர்வானதாகவே உள்ளது.
சர்ச் சொல்வதை நம்பாவிட்டால் நரகத் தீயில் தள்ளப்படுவோம் என்ற அச்சுறுத்தல் மேற்கத்தியர்களான எங்களுக்கு எப்போதும் உண்டு. ஆனால், இது போன்ற குறுகிய மனப்பான்மையிலிருந்து மக்கள் இப்போது வெளியேறி வருகிறார்கள். உண்மையைச் சொல்லப் போனால், பலரும் ஹிந்து தர்மத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவின் மென்மையான பலம் (India’s soft power) என்ற தலைப்பில் தில்லியில் நடந்த மாநாட்டில் நான் கலந்து கொண்டேன். அதில் வேறு பல வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர். அவர்களில் சிலர் சமஸ்கிருதத்தில் சரளமாக பேசினார்கள். தங்களை ஹிந்துக்கள் என்று பெருமிதத்துடன் சொல்லிக் கொண்டனர்.
மேற்கத்திய கலாச்சாரம் மீது ஈர்ப்பு கொண்ட இந்திய இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?
இந்திய வெய்யிலுக்கு சற்றும் பொருந்தாத ஜீன்ஸ்-சை நீங்கள் அணித்துகொண்டு கஷ்டப்படலாம், அது பரவாயில்லை. ஆனால், வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டத்தில் மேற்கத்திய அணுகுமுறை வேண்டாம்.
நாங்கள் இந்த விஷயத்தில் தோற்றுவிட்டோம். வாழ்க்கை எங்களுக்கு வெறுமையாக இருக்கிறது. புலனின்பம் மட்டுமே நிறைவை தராது. உங்கள் கடமையை சரிவரச் செய்தால், உங்கள் இஷ்ட தெய்வத்தின் மீது நம்பிக்கையும் பக்தியும் கொண்டவராக இருந்தால், உங்களுக்குள்ளே உள்ள பகவானோடு நீங்கள் தொடர்பு கொண்டால் மட்டுமே உங்களுக்கு சக்தியும் சந்தோஷமும் கிடைக்கும்.