நான் ஒரு கிறிஸ்தவன். ஹிந்து மதத்திற்கு மாற முடியுமா?

கோயிலில் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி வலம் வருவது ஏன்?

– வி. பாபு, புதுக்கோட்டை

ஒரு மையப் புள்ளியை வைத்தே ஒரு வட்டம் வரைய முடியும். அதுபோல நம் வாழ்விற்கு மையமாக இருப்பது இறைவனே. இதை உணருவதற்காகவே கர்ப்பக்கிரகத்தை வலம் வருகிறோம். அதுவும் ‘பிரதக்ஷிணம்’ வரும்போது இடது பக்கமிருந்து வலம் வருவோம். இறைவன் எப்போதும் நமது வலது பக்கம் துணைக்கு இருக்கிறான் என்பது நம்பிக்கை.

 

நான் கடினமாக உழைக்கிறேன், சம்பாதிக்கிறேன், நல்வாழ்வு வாழ்கிறேன். இதில் கடவுளுக்கு என்ன பங்கு?

– கே.பி. முருகேசன், பெரம்பூர்

புத்தர் ஞானம் அடைந்தபோது, தனது இரு கரங்களையும் கூப்பி தரையிலே தலைபடும்படி வணங்கினார். அவர் அரண்மனையை விட்டு வெளியேறும்போது அவரை துறவுக்குத் தூண்டியது, முதுமை, நோய், மரணம் இவைகளைப் பார்த்ததால்தானே! இதுதான் இறைவனின் அருள் என்பது.

 

* கோயில்களின் இன்றைய நிலை…?

– சின்ன வெள்ளைச்சாமி, மாணாமதுரை

இறைவனின் சன்னிதானத்தில் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரும் ஒரேமாதிரி வழிபாடு செய்யும் நிலை வர வேண்டும். கட்டண தரிசனம், சிறப்பு தரிசனம், தர்ம தரிசனம் என்பதெல்லாம் நீக்கப்பட வேண்டும்.

 

நான் ஒரு கிறிஸ்தவன். ஹிந்து மதத்திற்கு மாற முடியுமா?

– அந்தோணி ராஜ், சாயல்புரம்

ஓ… தாராளமாக! மாறலாம் என்பதைவிட தாய்மதத்திற்கு திரும்புவது என்பதுதான் உண்மை. உங்களுடைய முப்பாட்டன் ஹிந்து தானே! உங்கள் அருகாமையில் இருக்கும் ஹிந்து இயக்கப் பொறுப்பாளர்களைச் சந்தித்தால் அதற்கான வழிமுறைகளைக் கூறுவார்.

 

சமீபத்தில் நகைக்கடைக்காரர்கள் நடத்திய போராட்டம் பற்றி?

– வித்யாதுரை, குளித்தலை

சில நேரங்களில் பால்காரர்கள் போராட்டம் நடத்தும்போது, கோபத்தில் பாலை ரோட்டில் கொட்டி, தங்கள் எதிர்ப்பைக் காட்டுகிறார்கள். அது போன்று, நகைக் கடைக்காரர்களும் நடந்து கொண்டிருக்கலாமே” என்று முகநூலில் ஒருவர் தனது ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளார்.

 

* பலமுனை போட்டி உருவானால் அது அதிமுகவிற்கு பலனளிக்குமா?

– சங்கர சுப்பு, நெய்வேலி

‘ஜெ’ ஆட்சி வேண்டாம் என்போர் 70 சதவீதம். வேண்டும் என்போர் வெறும் 30 சதவீதம் மட்டுமே. ஆனால் ‘ஜெ’ எதிர்ப்பு 70 சதவீதம் ஓட்டுகள் பிரிவதால் தங்களுக்கு பலன் கிடைக்கும் என்று ‘ஜெ’ தரப்பு கருதுகிறது.

 

‘ராஜீவ்’ கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயம் தானா?

– அ.வெ. நடராஜன், திண்டிவனம்

நமது நாட்டின் பிரதமராக இருந்த ராஜீவை கொடூரமாகக் கொன்ற கொலையாளிகளுக்கு உதவிய குற்றவாளிகளுக்கு கருணை என்பது

கூடவே  கூடாது.

* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.