லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் களைகட்டத் துவங்கிவிட்டது. சென்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக இம்முறை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கியமாகி உள்ளது. தவிர, தமிழகத்தில் கூட்டணியின் தலைமைப் பொறுப்பையும் வகிக்கிறது. 2014 தேர்தலில் பாஜக அணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளான பாமக, தேமுதிக, என்.ஆர்.காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி ஆகியவையும், திமுக அணியில் இடம் பெற்றிருந்த புதிய தமிழகமும் அதிமுக ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அதிமுக அணியில் புதிய வரவாகி உள்ளது.
அமமக தலைமையிலான அணியும், மக்கள் நீதி மையம் தலைமையிலான அணியும் முறையே, அதிமுக, திமுக அணிகளின் வாக்குகளில் சேதாரம் ஏற்படுத்துவார்கள் என்பது சிலரது எதிர்பார்ப்பு. இதில் தினகரன் பெருமளவில் பணம் செலவு செய்ய வாய்ப்புள்ளது. எனினும் மிகப்பெரும் வாக்கு சதவிகிதம் கொண்டுள்ள அதிமுகவுக்கு தினகர னால் ஏற்படும் இழப்பை அதன் கூட்டணிக் கட்சிகள் நிவர்த்தி செய்துவிட வாய்ப்புகள் அதிகம். அதேசமயம், ஆளும் கட்சிகள் மீதான அதிருப்தி வாக்குகள் திமுக அணிக்குச் செல்லாமல் கமல்ஹாசன் பிரிப்பாராயின், அது திமுகவுக்கு பாதகம் ஆகிவிடும்.
திமுக தலைமை உண்மையிலேயே ராஜதந்திரம் உள்ள கட்சியாக இருந்திருந்தால், பாமக, தேமுதிக, மக்கள் நீதி மையம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளை தனது அணியில் சேர்த்திருக்கும். பாமக தனது அணியில் இடம் பெறும் என்ற நம்பிக்கையில் திமுக செய்த தவறு பிற கட்சிகளை அரவணைக்காது விடுத்தது. மதிமுகவுக்கு ஒரு தொகுதி மட்டுமே என்று முடுவெடுத்ததும் திமுகவுக்கு தேர்தலின்போது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
இந்தத் தேர்தல் களத்தில் கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வலிமை அடிப்படையில் அதிமுக அணியே முதன்மை வகிக்கிறது. சென்ற தேர்தலில் 40 தொகுதிகளை 37 + 3 என்று பாகம் பிரித்துக்கொண்ட அதிமுக, பாஜக அணிகள் இம்முறை ஒரே அணியாக தேசிய ஜனநாயகக் கூட்டணியாகப் போட்டியிடுவது இந்தக் கூட்டணியின் பலம். குறிப்பாக, வட தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியைக் கொண்ட பாமகவும், மாநிலம் முழுவதும் பரவலான வாக்கு வங்கியைக் கொண்ட தேமுதிகவும், மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவும் தனது அணியில் இருப்பது அதிமுகவுக்கு அதீத சாதகம்.
எதிர்த்தரப்பிலோ, ஆரம்பத்தில் இருந்த வேகம் குறைந்துவிட்டது. கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் போட்டியிடும் தூத்துக்குடி, நீலகிரி (தனி), மத்திய சென்னை ஆகியவை நட்சத்திரத் தொகுதிகளாக உள்ளன. திமுக அணியில் திமுக தவிர்த்து பெருமளவில் வாக்கு வங்கி உள்ள கட்சிகள் எதுவும் இல்லை. விடுதலை சிறுத்தைகளால் கட்சியால் திமுகவுக்கு சாதகமா, பாதகமா என்று பட்டிமன்றமே நடத்தலாம். அந்த அளவுக்கு திருமாவளவனின் பேச்சுகளால் பிற ஜாதியினர் கோபமடைந்திருக்கிறார்கள்.
சிறுபான்மையினரின் ஒட்டுமொத்த வாக்கு வங்கி மட்டுமே இப்போதைக்கு திமுகவின் ஒரே நம்பிக்கை. அதிமுக, பாஜகவின் தோழமைக் கட்சியாக மாறியதால், சிறுபான்மையினர் தங்களையே ஆதரிப்பார்கள் என்று மனப்பால் குடிக்கிறது திமுக. அதேசமயம், திமுகவின் ஹிந்து விரோதப்போக்கால் பெரும்பான்மை சமுதாயத்தின் அதிருப்தி பெருகி வருவதை கடைசி நேரத்தில்தான் ஸ்டாலின் உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது. “திமுக ஹிந்துக்களுக்கு எதிரியல்ல, பாஜகவுக்கு மட்டுமே எதிரி” என்று சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது. முஸ்லிம் லீக் கட்சியை தனது அணியில் வைத்துக்கொண்டே மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்று தனது அணியை ஸ்டாலின் அழைப்பது அரசியல் நகைச்சுவை.
இந்தத் தேர்தலில் மிக முக்கியமான அம்சம், ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லாமல் நடைபெறும் தேர்தல் என்பதுதான். ஜெயலலிதா இல்லாத அதிமுகவை தனது கட்டுக்குள் கொண்டுவந்துவிட்ட எடப்பாடி கே.பழனிசாமி-
-ஓ.பன்னீர்செல்வம் அணிக்கும், கருணாநிதி இல்லாத திமுகவை அவ்வழிநடத்தும் மு.க.ஸ்டாலினின் தலைமைக்குமான யுத்தம் இது. இத்தேர்தல் முடிவுகளே இவர்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.
முந்தைய தேர்தல்களில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் கணிக்கப்பட்ட அதிமுக அணி — திமுக அணி இடையிலான வாக்கு விகித மாறுபாடு இப்போதைக்கு 15 சதவிகிதமாக இருக்கிறது.
கூட்டணி பலம், பிரதமர் மோடி மீதான அபிமானம் தமிழகத்தில் பெருகி வருகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியது, முத்ரா வங்கிக் கடனால் தமிழகத்தில் அதிகமானோர் பயன் பெற்றிருப்பது, விவசாயிகளுக்கு உதவித்தொகை, ஏழை உயர்ஜாதியினருக்கு ௧௦ சதவீத இடஒதுக்கீடு உள்கட்டமைப்பு வசதி மேம்பாடு, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் புதிய வீடுகள், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச கழிவறை கட்டுதல், மற்றும் இலவச கேஸ் வழங்கும் திட்டம் ஊழலற்ற மத்திய அரசின் ஆகியவை பாஜக- அதிமுக அணியின் சாதக அம்சங்கள்.
பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்னிறுத்துவது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அடிப்படை பலம். எதிரணியில் அவ்வாறு ஒருவரைக் காட்ட முடியாதென்பதும் பாஜக சார்ந்த அணிக்கு பலம். தவிர, தமிழகத்தில் திமுக அணியில் இடம்பெற்றுள்ள சிபிஎம், சிபிஐ ஆகியவை பிற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் போட்டியிடுவதும், கர்நாடகத்தில் தமிழக நலனுக்கு எதிராக காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளிப்பதும் திமுக அணிக்கு பாதகங்கள்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி, நீட் எதிர்ப்பு, ஆகியவற்றை பிரசாரம் செய்வது திமுக அணிக்கு சாதகம் என்று எண்ணுகிறார்கள் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியிலுள்ள பாஜக, அதிமுக கட்சிகள் மீது இயல்பாக உருவாக வாய்ப்புள்ள மக்கள் அதிருப்தியும் திமுகவுக்கு சாதகம்.
மாநில அரசைப் பொருத்த வரை, ஜெயலலிதாவுக்குப்பிறகான கடந்த இரண்டாண்டுகால அதிமுக ஆட்சியில் எடப்பாடி கே.பழனிசாமி — ஓ.பன்னீர்செல்வம் இணை ஓரளவு நற்பெயரையே ஈட்டி இருக்கிறது. இவ்விருவரும் தமிழகத்தின் பிரதானமான இரு ஜாதிகளான கொங்கு வேளாளர், முக்குலத்தோர் சமூகங்களைச் சார்ந்திருப்பது அதிமுகவின் கூடுதல் வலிமை. இத்துடன் பாமகவின் வன்னியர் வாக்கு வங்கியும் தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் மூலமாக ஆதரவாகத் திரும்பும் நாடார் வாக்கு வங்கியும் தேர்தல் களத்தில் முக்கிய பங்கு வகிக்கும். இத்தகைய சாதகமான நிலையை திமுக அணியில் காண முடியவில்லை.
இந்த லோக்சபா தேர்தலுடன் சேர்த்து 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. கழகங்களிடையிலான உண்மையான போட்டி இந்த இடைத்தேர்தல்தான். இதில் அதிமுக குறைந்தபட்சம் 9 தொகுதிகளில் வென்றாக வேண்டும். அப்போதுதான் அதிமுக அரசு நீடிக்க முடியும்.இதை இலக்காகக் கொண்டே திமுகவும், அதிருப்தியாளர்களின் அணியான அமமுகவும் வேலை செய்கின்றன. அதிமுக அணி இந்த போர்க்களத்தில் மீண்டுவிடுவதற்கான வாய்ப்புகளே அதிகமாகக் காணப்படுகின்றன. அதிமுகவுக்கே இரட்டைஇலை சின்னம் கிடைத்திருப்பது அக்கட்சிக்கு மிகவும் சாதகம்.
தவிர, அதிமுகவின் தேர்தல் களப்பணியுடன் திமுகவை சற்றும் ஒப்பிட இயலாது. மேலும், அதிமுக அணியின் கூட்டணி வலிமையும் மோடியின் பிரசாரமும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ஷ்டம். உண்மையிலேயே எடப்பாடி ராசியானவர் என்பது ஒவ்வொரு முறையும் நிரூபணம் ஆகி வருகிறது.
தமிழகத்தில் வெல்ல வேண்டிய அணியும், வெல்ல வாய்ப்பு அதிகமுள்ள அணியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியாகவே இருப்பது மகிழ்ச்சியே. எனினும், வெற்றி பெறும் வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தை பெருமளவில் மாற்றிக் காட்டுவதே, கடந்த ஐந்தாண்டு கால பாஜக ஆட்சிக்கு தமிழகம் அளிக்கும் நன்றிக்கடனாக இருக்கும்.
தேசப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு, மக்கள் நலத் திட்டங்கள், தேசியப் பெருமிதம், ஊழலுக்கு முற்றுப்புள்ளி, உலக அளவில் பாரதத்தின் செல்வாக்கு உயர்வு, வரிச் சீர்திருத்தம், பொருளாதார வளர்ச்சி, விவசாய மேம்பாட்டுத் திட்டங்கள், தமிழகத்துக்கு பாஜக அரசு அளித்துள்ள திட்டங்கள் என பன்முகங்களில் சாதனை படைத்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீண்டும் வென்று ஆட்சி அமைக்கும்போது, அதில் தமிழகத்தில் பங்களிப்பு நூறு சதவிகிதமாக இருக்க வேண்டும்.
இதனை உறுதி செய்வதே நமது ஒரே கடமை.