மனதில் உறுதி வேண்டும் என்கிறார் பாரதியார். அவர் கூறும் உறுதியை எப்படிபெறுவது?
– தா. சுரேஷ், புளியந்தோப்பு
மனித மனம் இயல்பாகவே சலனங்களைக் கொண்டது. ஆன்மிக சாதனை செய்வதால் மனஉறுதியும் வைராக்கியமும் பெறமுடியும். தினசரி காலை, மாலை சிறிது நேரம் தியானம், ஜபம் செய்வதுடன் உயர்ந்த நல்ல புத்தகங்களையும் படிக்கவேண்டும்.
சஷ்டி, ஏகாதசி போன்ற விரத நாட்களில் மதியம் ஒரு வேளை மட்டும் சாப்பிடலாமா?
– கலையரசி பூவரசன், திருநெல்வேலி
இதெல்லாம் அவரவர்களின் வயது, உடல்நலன் பொறுத்து முடிவெடுக்க வேண்டியது. யாருக்கு முடியுமோ அவர்கள் வெறும் தண்ணீர் மட்டும் அருந்தலாம். முடியாதவர்கள் பால், பழமோ அல்லது மதியம் ஒருவேளை உணவோ சாப்பிட்டு விரதம் இருக்கலாம். என்ன சாப்பிடுகிறோம் என்பது முக்கியமல்ல, நாள் முழுவதும் இறை சிந்தனையில் இருப்பதுதான் முக்கியம்.
* மோடி ஆட்சியில் கல்வி காவிமயம் ஆகிறது என்கிற குற்றச்சாட்டு பற்றி?
– சே. பார்த்திபன், ஊரப்பாக்கம்
அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற கொன்றை வேந்தனின் வரிகளையே பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கிய (திமுக) இவர்களுக்கு மோடி பற்றி பேச எந்த யோக்கியதையும் கிடையாது.
காபி குடிப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா?
– கி. சுந்தர், மாகரல்
காபி குடிப்பதால் உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிந்தால் தாராளமாக குடியுங்கள். அளவோடு குடியுங்கள். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதானே!
* நாடாளுமன்றத்தில் மன்மோகன் சிங் பேசியது பற்றி?
– சுந்தரவடிவு பாஸ்கர், சிட்லபாக்கம்
பேசினாரா?… சபாஷ்! ஐயோ பாவம். அவரது ஆட்சியில் தான் பேச முடியல… இப்போதாவது பேசினாரே…
ராகுல் பிரதமராக நாங்கள் ஆதரவு கொடுப்போம் என்கிறாரே திருமாவளவன்?
– ஆர்.பலராமன், புரசைவாக்கம்
விடுதலைப் புலி பிரபாகரன், பலியான இலங்கைத் தமிழர்களின் ஆன்மா திருமாவளவனை மன்னிக்காது. அது சரி… ராகுல் பிரதமராக வருவதை வை.கோவும் கம்யூனிஸ்டுகளும் ஏற்றுக் கொள்கிறார்களா?
டெல்லியில் ரூபாய் நோட்டு பிரச்சினையில் மத்திய அரசை எதிர்த்து எதிர்க்கட்சிகள் நடத்திய ஆர்பாட்டத்தில் திமுகவுடன் சேர்ந்து அதிமுகவும் கலந்து கொண்டது பற்றி?
– வே. சீதாராமன், திருவானைக்கா
தமிழகத்தில் தலையாய எந்தப் பிரச்சினைக்கும் திமுகவுடன் ஒன்று சேராத அதிமுக இப்போது சேர்ந்திருப்பது ஜெயலலிதா முடிவெடுக்கும் நிலையில் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. ஜெயலலிதா நலம்பெற்று வந்தால் நவநீதகிருஷ்ணன், அவரை இயக்கிய சசிகலா போன்றோர் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என்றே தோன்றுகிறது.
* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.