ஓர் அலசல்
சமீபத்தில் கொட்டித் தீர்த்த மழையாலும் முறையான வடிகால் இயங்காததாலும் பெரு நகரங்களில் வெள்ளம், நீர்த்தேக்கம், பொருட்கள் சேதம், உடல் சுகவீனம், சில சமயங்களில் மரணம், மின்சாரக் கசிவு, சுகாதாரக் கேடு எல்லாம் அனுபவித்தோம்.
காரணம் என்ன?
மற்ற நேரங்களில் குப்பை, குறிப்பாக பிளாஸ்டிக். மடையை அடைக்க நாம் காரணமாகிறோம். கொட்டித் தீர்க்கும் மழையிலும் பேரலைகள் எழும் காலங்களிலும் வீட்டோடு இருப்பது என்ற வழக்கம் வரவேண்டும். வானொலி தொலைக்காட்சி போன்றவற்றின் வானிலை அறிக்கைகளை உதாசீனப்படுத்துகிறோம். தாழ்வான நிலையில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடம் நோக்கி நகர்தல் வேண்டும்.
தயாராவது எப்படி?
குடிநீர், உலர்ந்த ஆடை, தேவையான முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு கிளம்ப வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை பரண் மேல் வைப்பது நல்லது. அரசின் ஆணையை உடனே பின்பற்றவும். எல்லா சுவிட்சுகளையும் அணைத்து விடவும். உள்ள மிக்கம்பிகளை தொடக்கூடாது. தேவையில்லாத பீதியைக் கிளப்பும் வதந்திகளைப் பரப்பவோ நம்பவோ கூடாது.
கேஸ் சிலிண்டரை மூடிவிடவும். எங்கு செல்கிறீர்கள் என்பதை நண்பர்களிடம் தெரிவிக்கவும். வெள்ள நீரோடு
விளையாடவோ தொடவோ கூடாது. குச்சி வைத்து அனுமானித்து நடக்கவும். கீழே மின் கம்பிகளோ ஒயர்களோ கிடந்தால் உடனே மின்வாரியத்திற்குத் தெரிவிக்கவும். தரையில் தண்ணீருக்கு அடியில் உடைந்த கண்ணாடி, ஆணிகள், கழிவுகள் கிடக்கக் கூடுமாகையால் இருக்கவும். மேல்கூரை ஈரமாக இருந்தால் உடனடியாக மின்சாரத்தை ஒழுகும் இடத்தில் சிறிய ஓட்டை இட்டு, கீழே வாளி வைத்து நீர் வடிய ஏதுவாகச் செய்ய வேண்டும். இல்லையெனில், அழுத்தம் கூடி, கூரை இடிந்து விழ வாய்ப்புண்டு. தரையில் தேங்கும் நீரை உடனுக்குடன் வெளியேற்றி விட வேண்டும்.
ஓடும் நீரில் நடப்பது கூடாது. ஆழம் இல்லாத நீர் கூட நம் கால்களைத் தடுக்கும். ஆழமான நீரிலோ சுழி, வேகம் இருக்கும். வேகமாக ஓடிவரும் நீர் நம்மை அடித்துச் சென்றுவிடும் அபாயம் உண்டு. வெள்ளத்தில் வண்டி ஓட்டாதீர். வெள்ள நீர் படிந்த உணவை உண்ணக்கூடாது.
எலக்ட்ரீஷியன் பார்த்து ‘ஓகே’ சொன்ன பிறகே மீண்டும் விளக்குகளையும் மின்விசிறிகளையும் உபயோகிக்கலாம். ‘வேக்குவம் கிளீனர்’ கொண்டு நீரை உறிஞ்சக்கூடாது. அதிகம் நீர் கட்டிக் கிடந்தால், கொஞ்சம் கொஞ்சமாக அகற்றவும். வேகமாகச் செய்தால், சுவர் இடிந்து விழும் அபாயம் உண்டு. கேஸ் லீக் ஆகி இருக்கக் கூடுமென்ற நினைவு இல்லாமல் மெழுகுவர்த்தி, புகை போடுதல், விளக்குப் பொருத்துதல் கூடாது. ஈரமான கூரைகள் உள்ள இடங்களில் தங்கக்கூடாது. டி.வி, வி.சி.ஆர் போன்ற எந்தப் பொருட்களையும் இயக்கக்கூடாது.