ஏதோ மில்லியன் டாலர் கேள்வி போல கேட்டிருக்கீறார்களே! இக்கேள்விக்கு மிகச் சுலபமாக பதிலளித்து விடலாமே என்கிற உங்கள் பார்வை புரிகிறது.
பாஜக ஆதரவாளர்கள் மோடியைத்தான் சொல்லுவார்கள்! மோடி எதிர்ப்பாளர்கள் யாரைச் சொல்லுவார்கள் என்ற கேள்வியை நாம் எப்போதாவது எழுப்பினோமா?
இக்கட்டுரையை நீங்கள் படிக்கும் போது தமிழ்நாடு தேர்தல் வாக்குப்பதிவு முடிந்திருக்கும். சாவடி வாசல் கணிப்பு வல்லுனர்கள் விபரங்கள் திரட்டி கடைசி கட்ட வாக்குப் பதிவுக்காக க்காக காத்துக்கொண்டி ருப்பார்கள். ஆதரவு எதிர்ப்பு கணிப்புக்கள் இரண்டு பக்கமும் அலை பாய்ந்து கொண்டிருக்கும்.
இந்த தேர்தல் பலப்பல முதன்மைகளை செய்துள்ளது! யார் பிரதமர் என்கிற விவாதம் பெரிதாக நடத்தப்படவில்லை. இதற்கு இரண்டு காரணம்! ஒன்று நெகடிவ் பிரச்சாரம் மற்றும் நரகல் தாக்குதல் எதிர்கட்சிகளிடமிருந்தே நடத்தப்பட்டது. யாரையுமே பிரதமராக முன்நிறுத்த முடியாத அல்லது, பத்துக்கும் மேற்பட்டோர் பிரதமர் கனவில் மிதந்து கொண்டு இருந்ததால், மோடிக்கு எதிராக தங்களது பலவீனமான நிலையை காண்பிக்கக் கூடாது என்ற நிலையில், ‘யார் பிரதமர்’ விவாதத்தை எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கத் தயாரில்லை. இரண்டாவதாக, மோடியை ஏன் பிரதமராக தொடரவிடக்கூடாது என்பதற்கான வலுவான காரணங்கள் எதிர்க்கட்சியினரிடம் இல்லை!
இதற்கு மேலாக இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக விலைவாசி உயர்வு என்கிற குற்றச்சாட்டு அல்லது விலைவாசி பற்றிய விவாதமே தலைதூக்கவில்லை!
நான்காவதாக, பயங்கரவாதம் விவாதிக்கப் படவில்லை. நாட்டின் எந்த மூலை முடுக்கிலும் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு குண்டு கூட வெடிக்கவில்லை என்பதே இதற்குக் காரணம்!
‘ஊழலை என்னுடன் விவாதிக்கத் தயாரா?’ என்ற ராகுல் காந்தியும், அவரது ஆதரவு பத்திரிகைகளும் மோடி எதிர்ப்புப் பத்திரிகைகளும் ரஃபேலை பூதாகாரமாக்க முயன்று சுப்ரீம் கோர்ட்டின் தலையீட்டால் தோல்வியடைந்ததும் இந்த தேர்தலின் விசேஷங்களில் ஒன்று.
எந்த காங்கிரஸ், ‘எதிர்க்கட்சிகளின் பிரதமர் யார்? எங்கள் வேட்பாளர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி!’ என முழக்கமிட்டதோ அவர்களால் இன்று பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்த முடியவில்லை. எந்த காங்கிரசுக்கு எதிராக 1989 ல் போபர்ஸ் பீரங்கி ஊழலையும் 2014 ல் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலையும் முன்னிறுத்தி அன்றைய எதிர்க் கட்சி பாஜக ஆட்சியைப் பிடித்ததோ அதே யுக்தியை கையாண்டு ரஃபேல் போர்விமான ஒப்பந்தத்தை ஊழலாக சித்தரிக்க நினைத்த காங்கிரஸ் அம்முயற்சியில் படுதோல்வி அடைந்துள்ளது.
சரி, இதெல்லாம் போகட்டும். ‘‘டம்மி’’ பிரதமராக மன்மோகன் சிங்கை வைத்து ஆட்சி நடத்திய சோனியா குடும்பம் தன் மகன் ராகுலை முடிசூட்ட நினைத்து பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முயன்றபோது எந்தக் கட்சியும் ஏற்கவில்லை. மாறாக புற்றீசல் போல பிரதமர் வேட்பாளர்கள் தோன்றினார்கள். மாயாவதியை அகிலேஷ் யாதவ் சுட்டிக்காட்ட, சந்திரசேகர்ராவும் சந்திரபாபு நாயுடுவும் தாங்களே பிரதமராக வேண்டும் என்று ஆசை தெரிவித்தார்கள். கமலஹாசன் போன்றோர் மமதா பானர்ஜியை பிரதமராக முன்மொழிகிறார்கள். ஸ்டாலினைத் தவிர வேறு யாரும் ராகுலை ஏற்கத் தயாராக இல்லை.
ஆக, எதிர்க்கட்சிகளிடம் பிரதமர் வேட்பாளர் யார் என்று முடிவு செய்யமுடியாத படியான ஒரு தேர்தலாக இது இருக்கிறது.
எப்போதும் பொதுத்தேர்தல் பரபரப்பாக இருக்கும். பிரச்சாரம் அனல்பறக்கும். வாதப் பிரதிவாதங்கள் தூள்கிளப்பும். திடீரென எதிர்க்கட்சி அவிழ்த்து விடும் குற்றச்சாட்டு ஆளும் கட்சியை மடக்கும்! புழுதி எழும்பாத, புகை கக்காத, ஆரவாரம் அடங்கிய, ஒரு பரபரப்பும் இல்லாத, உப்புசப்பற்ற தேர்தலாகவே இதை பார்க்கமுடிகிறது!
இன்றைய எதிர்க்கட்சி அதாவது நேற்றைய ஆளும் கட்சி தனது 10 ஆண்டுக்கால சாதனையை, இன்றைய ஆளும் கட்சியின் 5 ஆண்டுக்கால சாதனையோடு ஒப்புநோக்கி தேர்தல் பரப்புரை செய்யத் தயாரில்லை. காரணம், தன் சாதனைகள் மீது அதற்கு இருக்கும் அவநம்பிக்கை. அதனால்தான் பரபரப்பு அரசியல் ஆயுதமான ‘‘மதசார்ப்பற்ற கூட்டணி’’ என தனது பெயரை மாற்றிக்கொண்டு, மதசார்புள்ள கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்துள்ளது!
ஏப்ரல் 8ந்தேதி வெளியான ரிபப்ளிக் டிவி மற்றும் 78 கருத்துக்கணிப்புகள் மோடிக்கு 66 சதவீத ஆதரவும் ராகுலுக்கு 19 சதவீத ஆதரவும் தெரிவித்த மக்கள் குரலை வெளிப்படுத்தியுள்ளன.
வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி முடிக்க மோடிக்கு இன்னும் ஒரு 5 ஆண்டு தேவையென்பதால் மக்கள் மோடியை தேர்ந்தெடுக்க முடிவு செய்துவிட்டார்கள்.
‘வேண்டும் மோடி மீண்டும் மோடி’ என்பதால் அடுத்த பிரதமர் நரேந்திர மோடியே.