சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஆயிரம் கால் மண்டபம் விசேஷமானது. சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணத்திற்கு இறைவனே ‘‘உலகெலாம்’’ என்று அடியெடுத்து கொடுத்து அருளியதும், பின்னர் ‘பெரியபுராணம்’ அரங்கேறியதும் இந்த ஆயிரம்கால் மண்டபத்தில்தான். இந்த மண்டபத்தில்தான் மாணிக்கவாசகர் பேச்சு வராத பெண்ணுக்காக பதிகம் பாடி பேசவைத்தார். அவர் இந்த மண்டபத்தில் திருவாசகம் பாடியபோது இறைவனே அவர் பக்கத்தில் இருந்து பிரதி எடுத்ததும் இங்குதான். ஆனித் திருமஞ்சனமும், ஆருத்ரா தரிசனமும் இந்த மண்டபத்தில்தான் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மண்டபத்தை ராஜசபை என்று போற்றுவர்.
இத்தகைய புனிதமான ஆயிரம்கால் மண்டபத்தில் மரபை மீறி செப்டம்பர் 11 அன்று சிவகாசி பட்டாசு தொழில் அதிபர் இல்லத் திருமணம் நடைபெற்றது. மண்டபத்தை ஒட்டி பெரிய பந்தல் போட்டு விருந்தும் நடைபெற்றது. திருமணத்துக்கு வருகிறவர்கள் என்றால் காலில் செருப்புடன்தானே சென்றிருப்பார்கள்? இதுவரை இந்த மண்டபத்தில் இதுபோன்று திருமணம் நடைபெற்றதே இல்லை. ஆலய மரபு மீறல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு தீட்சிதர்களிடமிருந்து அரசு கோயிலை மீட்டெடுக்கவேண்டும் என்று பல அரசியல் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அரசின் பிடியில் உள்ள ஏராளமான கோயில்களின் நிலை இன்று என்ன? அங்கு நடைபெறும் மரபு மீறல்கள், ஊழல்கள் போன்றவற்றைச் சொல்லி மாளாது. அதனால்தான் ஹிந்து அமைப்புகள் அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு என்ற போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். எனவே சிதம்பரம் கோயில் முறைகேட்டைக் காட்டி அதை அரசே எடுத்துக்கொள்ளவேண்டும் என்று பொறுப்பற்ற கோரிக்கைகள் எழுவதற்கு சிதம்பரம் தீட்சிதர்கள் இடம் கொடுக்கக் கூடாது. இதுபோன்ற தவறு மறுபடி நடக்காமலிருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதே ஹிந்துக்களின் எதிர்பார்ப்பு.