கடந்த 50 வருடங்களாக நம் மாணவர்கள் பயிலும் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களின் பாடதிட்டங்கள் இவர்களுக்கு தேர்ச்சி அளிப்பதில் மட்டுமே உறுதியாக இருந்தது. மாறாக மாணவர்களின் திறனைக் கூர்தீட்டி வேலைவாய்ப்பினை அளிக்கும் வகையில் கல்வி வடிவமைக்கப்படவில்லை.
தாமரையின் ஆட்சி 2014 மத்தியில் அமையப்பெற்றபின், உறுதியும் நேர்மையும் ஒரு சேரப்பெற்ற நரேந்திர மோடியின் சிறப்பான தலைமையில் அமைந்துள்ள மத்திய அரசு நல்லாட்சி வழங்குவதற்கான பலமான அடித்தளத்தை அமைத்து வருகின்றது. ‘திறன்மிகு இந்தியா’வை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் துறை 2014 ஜூலை 31ம் தேதி உருவாக்கப்பட்டது.
அமைச்சகம் சார்பில் 2015ம் ஆண்டில் மட்டும், 24 லட்சம் இளைஞர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இதற்காக, தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தின் அங்கீகாரம் பெற்ற, பயிற்சி அமைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் மூலமாக, நாடு முழுவதும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக, 1,500 கோடி ரூபாய் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், இந்த திட்டத்தை செயல்படுத்த, தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தின் அங்கீகாரம் பெற்ற, ’ஓரியான் எஜுடெக்’ என்ற அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள, ‘ஓரியான் எஜுடெக்’ பயிற்சி மையங்களில் இந்த பயிற்சி அளிக்கப்படும். எட்டாம் வகுப்பு தேறியவர்கள் முதல், 10ம் வகுப்பு தேறியவர்களும் பெயிலானவர்களும் கலந்து கொள்ளலாம். அவர்கள், 16 வயது முதல், 36 வயதுக்குள் இருக்க வேண்டும்; வேலை இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும். சமையல், வேளாண்மை, கட்டுமானம், ‘பிளம்பிங்’, டிராவல், டூரிசம் உள்ளிட்ட, பல துறைகளில் பயிற்சி அளிக்கப்படும். தமிழகத்தில் 2015ம் ஆண்டில் மட்டும் 20,000 இளைஞர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. இந்திய இளைஞர்கள், தங்கள் திறமையினால் உலகை ஆள வேண்டும் என்பது தான் பிரதமரின் எண்ணம்.
இந்தியா இப்போது உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரம். கல்வித் தர மேம்பாட்டிற்காக அதிக அளவிளான ஆன்லைன் படிப்புகள், தேசிய மின் நூலகங்கள், 5 புதிய ஐ.ஐ.டி 6 புதிய ஐ.ஐ.எம்கள் திட்டமிடப்பட்டுள்ளது. நமது தேசத்தில் விவசாயம், குறு, சிறு நடுத்தரத் தொழில்கள் ஆகியவை 12 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் அளித்து வருகின்றன. எனவே அவற்றின் வளர்ச்சியை அதிகரிக்க பல நல்ல திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு நிதியுதவி கொடுத்து சாதாரண மக்களை வெற்றிகரமான தொழிலதிபர்களாக உருவாக்கவும் வேலை வாய்ப்புகளை வேகமாக பெருக்கவும் முத்ரா வங்கி என்னும் புதிய நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கடந்த ஒரு வருடத்திலேயே இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் உதவி பெற்றுள்ளனர்.
நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால் கட்டமைப்புகள் தரமாக இருக்க வேண்டும். அதன் மூலமே தொழில்கள் பெருகி வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, அதற்காக கட்டமைப்புத் துறைகளில் அதிக கவனம் கொடுக்கப்படுகிறது. நம் நாடு திறன் மேம்பட்ட ஆட்களை தயார் செய்து அவ்வாறு தயாரான திறனாளிகளை உபயோகித்துக் கொள்ள களங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளது. அவரவர் விருப்பத்திற்கேற்ப பாடங்களை தேர்வு செய்து தங்களின் அறிவை, திறனைப் பெருக்கி நாடு முன்னேற்றத்திற்காக, நாட்டில் உள்ள அனைவருடைய முன்னேற்றத்திற்காக உழைப்போம்.
(கட்டுரையாளர் பாஜக காஞ்சி மாவட்ட கல்வி அணித் தலைவர்)