தியாகராஜ ஆராதனை துவக்கம்: பகுள பஞ்சமி (ஜனவரி 24)

பெங்களூர் நாகரத்தினம்மாள் சுருதி சேர்ந்து, லயம் கைகூடி, பக்தியே நாதமாக ஆராதனை கண்டவர்

கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்டவர்; தெலுங்கில் ராமபக்தியை பரப்பிய மகானுக்கு நினைவாலயம் எழுப்பினார். நினைவாலயம் அமைந்தது தமிழகத்தில்! ராம பக்தி என்ற பொன் இழையில் மொழிகள் அனைத்தும் கோர்த்து இணைந்து ரத்தின ஹாரமாக உருவானது. இதுவே ஹிந்து ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மிகுந்த ஊக்கம் தரக்கூடிய செய்தி. ஆனால் நாகரத்தினம்மாள் பல குழுக்களாக பிரிந்திருந்த பக்தர்களை பக்தியால் ஒருங்கிணைத்து, தியாகராஜ ஆராதனையை அதிநவீன வழிபாடாக உருவாக்கிச் சென்றிருப்பது மேலும் ஊக்கம் தரக்கூடிய தகவல். ஹிந்துக்கள் மொழியால், ஈகோவால் பிரிந்து நிற்பதை பார்க்க சகிக்காமல் தியாகராஜர் நினைவாலயம் அமைப்பதில் தன் சொத்து முழுவதையும் ஈடுபடுத்தியதோடு நில்லாமல், தன் வாழ்நாளையே சமர்ப்பித்தவர் இந்த அற்புத பெண்மணி. படியுங்கள்.

 

ஸ்ரீ தியாகராஜரை – இசையின் தந்தை எனலாம். இவர் தானே நிறைய கிருதிகளைப் பாடி – அன்றும் இன்றும் என்றும் புகழ் பெற்றவராய் உள்ளார். அவரது பாடல்களில் நயமும் பக்தியும் கலந்து உள்ளது. அவர் தமது 13ம் வயதிலேயே உலக பந்த பாசங்களைத் துறந்து – இசைத் துறவியாக – ராமரையே பாடி உயர்ந்தவர். ஒவ்வொரு வருடமும், அவர் சமாதி அடைந்த நாளான தை, புஷ்ய பகுள பஞ்சமியன்று – அவருக்கு ஆராதனையாக இந்தியாவின் ஒட்டுமொத்த பாடகர்களும், காவிரிக் கரையோரம் உள்ள திருவையாறு நகரில் கூடி – பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடுவர். கேட்பவர்களுக்கு மெய் சிலிர்க்கும்!

இத்தகைய உன்னத ஆராதனையை ஏற்படுத்தியவர் பெங்களூர் நாகரத்தினம் அம்மாள். இவருக்கு இசைச் சரித்திரத்தில் ஓர் உயர்ந்த ஸ்தானம் உண்டு.

thiyaga

இவர், பெங்களூர், நஞ்சன் கூடுவில் பொட்டு லக்ஷ்மிக்கும், சுப்பாராவ் அவர்களுக்கும், மகளாக 1878 நவம்பர் 11 அன்று பிறந்தார்.

இவர் பல வித்வான்களிடம், சமஸ்க்ருதம் – பாட்டு – வயலின் – வீணை – நடனம் கற்று வித்வானாகத் திகழ்ந்தார். பாட்டு, ஹரிகதை, நடனத்தில் வல்லவர். கம்பீரமான குரல் வளம் கொண்டவர்.

1925ல் இப்போது உள்ள கோயிலும் ஆராதனையும் நடக்கும் இடத்தை வாங்கினார். 1926ல் கட்டிடம் எழுப்ப அடிக்கல் நாட்டி, கட்ட, ஏற்பாடு செய்தார்.

பெண்களுக்கு பொதுவில் பாட உரிமை இல்லை என்று பேசிய கட்சிகளுடன் போராடி 1941ல் ஒய்.எஸ். கிருஷ்ணாமி ஐ.சி.எஸ், உதவியுடன் முதல் தியாகராஜ ஆராதனையை நடத்தினார்.

ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், தியாகராஜரின் கிருதிகளில் – முக்கியமான – முத்தான – ஐந்து ரத்தினங்களாக ஜொலிக்கும், ‘பஞ்சரத்ன கீர்த்தனைகளை’ தொகுத்தளித்தார்.

மிக உயர்ந்த இந்த மனுஷியின் சமகாலத் தலைவர்கள் – வீணை தனம்மாள் (எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் தாயார்) – சேலம் மீனாட்சி – திருவாரூர் ராஜாயி (மறைந்த நடிகை டி.ஆர். ராஜகுமாரியின் தாயார்). பிற்காலத்தில் இவருடன், எம்.எஸ், டி.கே. பட்டம்மாள், எம்.எல். வசந்தகுமாரி என பலர் சேர்ந்தனர்.

இவர் நன்கு பாடுவதுடன், ஹரிகதை சொல்லவும் நன்கு நடனமாடவும் பயின்றார்.

இவருக்கு ஸ்ரீ தியாகராஜர் மீதிருந்த பக்தியும் பற்றும் மிகவே, தமது அனைத்து சொத்துக்களையும் விற்று, அனைத்து எதிர்ப்புகளையும் மீறி, தம் ஒரே குழந்தை இறந்த துக்கத்தையும் மறந்து, ஒரு முனைப்புடன் – அக்டோபர் 7, 1921ல் கோயிலையும் சமாதியையும் கட்ட ஆரம்பித்து, ஜனவரி 7, 1925ல் ‘ஆராதனை உற்சவத்தை’ ஆரம்பித்து வைத்தார்!

அதன் பின் சிலரும் சமாதியை ஒட்டியிருந்த நிலங்களையும் இவரிடம் ஒப்படைத்தனர். அதுவே இப்போது – ‘தியாக ப்ரும்ம நிலையம்’ ஆக உள்ளது! இதில் மறைந்த சித்தூர் வி. நாகய்யா (பழம்பெரும் நடிகர்) அவர்களின் உழைப்பும் பங்கும் உண்டு.

1949, ஜனவரி 3ல் தியாகப் பிரம்மம் சமாதி அருகே ‘திருவையாறு குருகுலம்’ ஏற்படுத்தினார்.

பெங்களூர் நாகரத்தினம்மா தமது ஆழ்ந்த அருந்தவத் தொண்டுகளுக்காக –

டூ 1949, மார்ச் 6ல் ‘தியாக சேவா சக்ரா’ என்ற உயரிய விருதை இந்திய ஜனாதிபதியிடமிருந்து பெற்றார்.

டூ ஸ்ரீ புராணம் சூர்யநாராயண தீர்த்தரிடமிருந்து ‘வித்யா சுந்தரி’ என்ற பட்டம் பெற்றார்.

டூ 1932-ல் ஸ்ரீ கவிராஜ கிருஷ்ணமூர்த்தி சாஸ்த்ரிகளிடமிருந்து ‘கான கலா விசாரதா’ என்ற பட்டமும் பெற்றார்.

இவை அனைத்தையும் விட, இவரது மறைவுக்குப் பின் (1952, மே 19) இவரது சீடர்கள் – ஸ்ரீ தியாகப் பிரம்மத்தின் சமாதியின் அருகிலேயே இவரது உருவச்சிலையை நிறுவியது தான் மிகவும் பொருத்தம்.

நாமும் அவரது அரும்பணியை அன்புடன், மரியாதையுடன் நினைவு கூர்வோம்!