தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கமே!

பாஜகவின் தமிழக மூத்த தலைவர் இல. கணேசன். 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்து முழுநேர ஊழியராகப் பணிபுரிந்தவர். தற்போது மத்தியப் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்ய சபா உறுப்பினராக செயலாற்றி வருகிறார். அனைத்து கட்சியினரிடமும் நட்புப் பாராட்டும் இவர், தமிழ் இலக்கியத்தில் உள்ள தேசிய சிந்தனையை பொற்றாமரை இலக்கிய அமைப்பின் வாயிலாக வெளிக்கொணர்கிறார். விஜயபாரதம் சார்பாக இல. கணேசன் அவர்களை ஆசிரியர் ம. வீரபாகு சந்தித்தார்.

இன்றைக்கு கலைஞர் பிறந்தநாள். வாழ்த்து தெரிவித்தீர்களா?

பாஜக பொறுப்புக்கு வந்த 1991 ஆண்டு முதல் கலைஞரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வந்துள்ளேன். ஒரு வேளை சென்னையில் இல்லையென்றால் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துவிடுவேன். ஆனால் இந்த ஆண்டு ஊடகம் மூலம் வாழ்த்து தெரிவித்தேன். காரணம் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தாலும் அதை அறிந்துகொள்ள வேண்டிய நிலையில் இப்போது அவரது உடல்நலம் சரியில்லை. அவர் நீண்ட காலம் வாழ வேண்டும். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வருகிற காட்சியைப் பார்க்கிற வரை அவர் நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன்.

உங்கள் குடும்பம் பற்றி…

எனக்கு சொந்த ஊர் தஞ்சாவூர். பெற்றோர் பெயர் லட்சுமி ராகவன் – அலமேலு அம்மாள். நாங்கள் 9 நான் 7வது. தந்தை பத்திரிகை ஏஜெண்ட் ஆகவும் ஜெனரல் மெர்ச்சன்ட் கடையும் வைத்திருந்தார். எனக்கு 9 வயது இருக்கும்போது தந்தை காலமாகவிட்டார். எனது படிப்பு எஸ்.எஸ்.எல்.சியுடன் நின்றுவிட்டது. கல்லூரி படிப்பு வெறும் கனவாகிவிட்டது. ஆனால் எனக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் உடனடியாக வருவாய்த்துறையில் வேலை கிடைத்து படிப்படியாக ரெவின்யூ இன்ஸ்பெக்டராகி 9 ஆண்டுகள் பணியாற்றினேன்.

ஆர்.எஸ்.எஸ். ஈடுபாடு வந்தது எப்படி?

எனது அண்ணன்கள் ஆர்.எஸ்.எஸ். ஷாகாவிற்குச் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களோடு நானும் எனது 5வது வயதிலேயே ஷாகா செல்லத் தொடங்கிவிட்டேன். சில காரணத்தால் தொடர்பு விட்டுப் போனது. மீண்டும் நான்  தஞ்சை பெரிய கோயிலில் ‘விவேகானந்தா ஸ்டடி சர்க்கிள்’ என்ற பெயரில் கல்லூரி மாணவர்களுக்கான வாரக் கூடுதலுக்குச் சென்று வந்தேன். ஒரு சமயம் திருச்சியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திற்கு என்னை அழைத்திருந்தார்கள். நானும் கலந்துகொண்டேன். அப்போதைய தமிழக ஆர்.எஸ்.எஸ். பிராந்த பிரச்சாரக் ராம. கோபாலன் தான் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் தஞ்சை மாவட்டத்தில் கிறிஸ்தவ, இஸ்லாமிய, கம்யூனிஸ செயல்பாடுகள் பற்றி எங்களிடம் கேட்டறிந்தார். ஹிந்துத்வ அமைப்புகளின் வேலைகள் பற்றி கேட்டபோது நாங்கள் மௌனம் சாதித்தோம். அதைக் கேட்டு அவர் வருத்தமடைந்து தஞ்சையில் ஹிந்து அமைப்புகளின் பணிகளுக்காக யாராவது சிலர் முழுநேர ஊழியராக வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு 4 பேர் சம்மதம் தெரிவித்தனர். அப்போது எனது மனதில் ஒரு பொறி தட்டியது. நானும் முழுநேர ஊழியராகச் செல்லலாமே என்று தோன்றியது. இருந்தாலும் அவரிடம் பொதுப்படையாக எதுவும் வாக்குறுதி கொடுக்காமல் எனது அக்கா திருமணம் முடிந்த பிறகு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் ஆக செல்லலாம் என்று முடிவெடுத்தேன்.

நான் மனதில் முடிவெடுத்தது போல எனது அக்காள் திருமணம் முடிந்த நாலாவது நாளே நான் ஆர்.எஸ்.எஸ்ல் பிரச்சாரக்காகச் சேர்ந்தேன். இதில் ஆச்சரியமானது என்னவென்றால் பிப்ரவரி 16 எனது பிறந்தநாள். நான் பிரச்சாரக் ஆக அடியெடுத்து வைத்ததும் பிப்ரவரி 16ம் தேதி 1970! (ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக் என்பது திருமணம் செய்து கொள்ளாமல் எளிமையான வாழ்க்கையுடன் பணிபுரிவது)

பொதுவாழ்க்கையில் உங்களுக்கு வழிகாட்டியவர்கள் யார் யார்?

தென்பாரத அமைப்பாளராக இருந்த சூரிய நாராயணராவ், ராம. கோபாலன், கோவிந்தன்ஜி, சுப்பராவ் உள்பட பலர்.

எனக்கு ஊக்கம் தந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் தினமலர் ஸ்தாபகர் ராமசுப்பையர். நான் தென் தமிழ்நாட்டின் எந்தக் கூட்டத்தில் பேசினாலும் அது தினமலரில் இடம் பெற்றுவிடும்.

ஆர்.எஸ்.எஸ்ஸில் மறக்க முடியாத அனுபவம்…

நான் தென் தமிழ்நாட்டிலேயே ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக பணியாற்றினேன். கன்னியாகுமரி மண்டைக்காடு கலவரம், ராமநாதபுரம்,  விவேகானந்தா நினைவுச்சின்ன பிரச்சினை, மீனாட்சிபுரம் மதமாற்றம் போன்ற நிகழ்வுகளின் போது அந்தப் பிரச்சிசைனகளுக்குத் தீர்வு காணும் பொறுப்பில் செயல்பட்டேன்.

இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலை (எமர்ஜென்சி 1975-1977) காலகட்டம் மறக்க முடியாதது. இந்திராவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜனநாயகமுறை போராட்டங்களை நடத்துவதில் பங்காற்றினேன். தலைமறைவு வாழ்க்கை. ஸ்தாபன காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களையெல்லாம் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. பழ. நெடுமாறன், பழ. கருப்பையா, தினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமன் போன்றோரை சந்தித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டேன்.

பாஜகவில் சேர்ந்தது…

பாஜகவில்  பணியாற்ற 1991ல் அனுப்பப்பட்டேன். அமைப்புச் செயலாளராகவும் அகில பாரதத் துணைத் தலைவராகவும் தமிழக தலைவராகவும் பணியாற்றினேன். பல ஆண்டுகாலம் சென்னையில் மாநில தலைமை அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்தது. சொந்தமாக ஒரு கட்டிடம் வாங்க முடிவெடுத்து சென்னை தி.நகரில் பிரம்மாண்டமான ‘கமலாலயம்’ வாங்கப்பட்டது.

பாஜக ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. திமுக, அதிமுகவுடன் கூட்டணி மூலம் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் பிரதிநிதிகள் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. காலத்திற்கேற்றவாறு தேர்தல் பிரச்சார இசைத் தட்டுகளை வெளியிடத் துவங்கினோம்.

எம்.ஜி.ஆர். – கலைஞர் – ஜெயலலிதா… ஆகியோருடன் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள்…

நான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளராக மண்டைக்காடு கலவரம் சம்பந்தமாக அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். உடன் பேச வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தேன். அதுமட்டுமல்லாமல் ஹிந்து அமைப்பினர் ஒரு குழுவாக சென்று நானும் உடன் சென்றேன்.

கலைஞருடன் எனக்கு நல்ல நட்பு இருந்தது. தேவை ஏற்பட்டால் அவருடன் தொலைபேசியில் கூட பேச முடிந்தது. அவர் முதல்வராக எனது பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்வதற்காக எனது வீட்டிற்கே வந்தார். அவரின் அந்த உயர்ந்த பண்பு மறக்க இயலாதது.

செல்வி ஜெயலலிதா வெளியே கண்டிப்பான கறார் பேர்வழியாக தெரிந்தாலும் பழகுவதற்கு இனிமையானவர். பலமுறை நேரில் சந்தித்துப் பேசியுள்ளேன். அத்வானியுடன் ஒருமுறை அவர் வீட்டில் உணவருந்தினேன். அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினால் நன்றிக் கடிதம் எழுதுவது அவர் வழக்கமாக இருந்தது.

உங்கள் நாடாளுமன்ற அனுபவங்கள் பற்றி…

நான் ராஜ்யசபாவில் அடியெடுத்ததுவைத்த முதல் தொடர் முழுவதும் கூச்சல், குழப்பத்துடனேயே நடந்தது. எனக்கே சலிப்பு ஏற்பட்டது. இரண்டாவது தொடர் பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன. இரண்டு தரப்பிலும் விவாதங்கள் சிறப்பாக நடைபெற்றன. எனக்கும் பல கருத்துக்கள் சொல்ல வாய்ப்பு கிடைத்தது. இடஒதுக்கீடு சம்பந்தமாக ஆர்.எஸ்.எஸ். அகிலபாரதத் தலைவர் மோகன் பாகவத் பேசியதாக தவறான தகவலை ஒரு உறுப்பினர் பேசினார். அவையில் இல்லாத ஒருவரைப் பற்றி கூறியுள்ள தவறான தகவலை அவைக் குறிப்பிலிருந்து நீக்கவேண்டும் என்று நான் தெரிவித்த கருத்தை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார்.

குடியரசுத் தலைவர் உரை குறித்து நான் ஹிந்தியில் 20 நிமிஷம் பேசினேன். ஹிந்தி பேசுவதில் இருந்த தயக்கம் மாறிவிட்டது.

உங்களைத் தேர்ந்தெடுத்த மத்திய பிரதேசத்திற்கு உங்கள் பங்கு…

மாதத்தில் 10 நாட்கள் மத்திய பிரதேசத்தில் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். எனது எம்.பி. தொகுதிக்கான நிதியை எஸ்.சி., எஸ்.டி. மக்கள் நலனுக்காக செலவிட திட்டமிட்டுள்ளேன். குறிப்பாக மலைவாழ் மக்கள் பகுதியில் நடைபெறும் சரஸ்வதி சிசு மந்திர் பள்ளிக் கூடங்களுக்கு செலவிட உத்தேசம். மத்திய பிரதேசத்தில் வாழ்கின்ற தமிழர்களின் நலனுக்காகவும் செயல்பட விரும்புகிறேன்.

மோடியின் மூன்றாண்டு சாதனை குறித்து…

அரசு ஒருவருக்கு 100 ரூபாய் நிதி ஒதுக்கினால் பயனாளிக்கு ரூ. 15 தான் போய்ச் சேருகிறது என்று ஒருமுறை பிரதமர் ராஜிவ் காந்தி குறிப்பிட்டார். இப்போது வங்கி மூலம் நேரடியாகப் போவதால் அவர் வங்கியில் எடுக்க சற்று தாமதமானால் வட்டி சேர்த்து ரூ. 115 கிடைப்பது இன்றைய ஆட்சியில்.

விவசாயிகளுக்காக குறைந்த விலையில் யூரியா கொடுத்தால் சில ரசாயனக் கம்பெனிகள் ஏமாற்றி வாங்கி விடுகின்றன. இதைத் தெரிந்துகொண்ட பிரதமர், யூரியாவில் சிறிது வேம்பு கலக்க உத்தரவிட்டார். வேம்பு கலந்த யூரியாவை ரசாயன கம்பெனிகள் பயன்படுத்த முடியாமல் போயிற்று.

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல்கள் படிப்படியாக லட்சம் கோடிகள் வரை உயர்ந்தன. மோடியின் மூன்றாண்டு ஆட்சியில் அவர் மீதோ அவரது அமைச்சர்கள் மீதோ ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. முன்பெல்லாம் எல்லையில் பாகிஸ்தான் தாக்கினால் பதிலடி கொடுக்க மேலதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டும். ஆனால் இப்போது அங்குள்ள சூழ்நிலைக்கேற்ப ராணுவ அதிகாரிகளே முடிவெடுக்க முடியும். பாரதம், பாகிஸ்தான் மீது நடத்திய சர்ஜிகல் ஆபரேஷன் அவர்களுக்கு ஒரு பயத்தைக் கொடுத்துள்ளது.

உலக நாடுகளில் வாழும் இந்தியர்கள் நாங்கள் இப்போதுதான் ‘இந்தியர்கள்’ என்று பெருமிதம் கொள்கிறோம் என்று தெரிவிக்கின்றனர். ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் ஐ.நா. சபை அறிவித்தது மோடிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி.

அதிமுகவுடன் கூட்டணி அமையுமா…?

கொள்கைரீதியாக நாத்திகவாத, பிரிவினைவாத, திராவிட சித்தாந்தங்கள் தோல்வி பெற்றுவருகின்றன. தமிழகம் எப்போதும் தேசியத்தின் பக்கம். தமிழகத்தைப் பிடித்துக் கொண்டிருந்த திராவிட கிரகணம் விலகத் தொடங்கியுள்ளது. அரசியல் ரீதியாக தேர்தல் கூட்டணி பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை.

‘பொற்றாமரை’ பற்றி

தமிழகத்தில் ஏராளமான தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் தேசியத்தின் மீதும் நம்பிக்கை உள்ளவர்கள்தான். தமிழ்ப் பற்றும் தேசியத்தின் ஒரு அம்சம்தான். இரண்டும் வேறு வேறு இல்லை. இதனை தெளிவுபடுத்த ஒரு மேடை தேவைப்பட்டது. அந்தச் சிந்தனையில் உருவாகியதுதான் ‘பொற்றாமரை’. இப்போது 13ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

தாங்கள் கடைசியாக பார்த்த திரைப்படம்

பாகுபலி 1. விஜயபாரதத்தில் பாகுபலி 2 வந்த விமர்சனம் படித்த பிறகு, அதையும் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

புத்தகங்கள் படிப்பது பற்றி

சின்ன வயதில் நான் முதன் முதலாக படித்தது My Transportaion For Life சாவர்க்கர் வாழ்க்கை வரலாறு. அவர் அந்தமான் சிறையில் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். சமீபத்தில் ராமானுஜர் 1000வது ஆண்டை முன்னிட்டு பல நூல்களைப் படிக்க வாய்ப்பு கிடைத்தது. என் இல்லத்தில் ஒரு சிறிய நூலகமே உள்ளது. அதில் 3,000 புத்தகங்கள் உள்ளன.

விஜயபாரதம் படிக்கிறீர்களா?

விஜயபாரதம் படிப்பது இல்லை. ஒவ்வொரு கட்டுரையையும் ஆய்வு செய்கிறேன். சில பத்திரிகைகளை வெறுமனே புரட்டத்தான் முடியும். ஏதாவது சில பத்திரிகை மட்டுமே ஆழ்ந்து ஆய்வு செய்ய முடியும். அந்த வகையில் நான் விஜயபாரதத்தை ஆய்வு செய்கிறேன்.

1857 சுதந்திரப் போரில் நம் வீரர்களை சுட்டுக் கொன்ற ஒரு ஆங்கிலேய அதிகாரியான ஹாவ்லோக் பெயரை அந்தமான் அருகில் உள்ள ஹாவ்லாக் தீவுக்கு வைத்துள்ளனர் என்ற செய்தியை விஜயபாரதத்தில் படித்தேன். நாடாளுமன்றத்தில் இந்தத் தகவலைச் சொல்லி அந்தப் பெயரை மாற்றும்படி வேண்டினேன். சபாநாயகர் கூட உங்கள் கோரிக்கை நியாயமானது என்று பாராட்டினார்.

இல. கணேசன்