தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழகத்தின் 16 ம் நூற்றாண்டிற்கு உட்பட்ட நடராஜர் வெண்கல சிலையானது டில்லிக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகம் (Art Gallery of South Australia) 2001ம் ஆண்டு 75.7 செ.மீ., உயரமுள்ள நடராஜர் சிலை ஒன்றை அமெரிக்காவின் ஓலிவர் போர்ஜ் அன்ட் பெரன்டன் லிங்க் நிறுவனத்திடம் வாங்கியிருந்தது. இந்த சிலை தமிழகத்தை சேர்ந்தது என்றும் இது குறித்து உரிய ஆவணங்களை தமிழக காவல் துறையினர் ஒப்படைத்தனர். இதையடுத்து இந்த நடராஜர் சிலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க ஏ.ஜி.எஸ்.ஏ., நிறுவனம் முடிவு செய்தது.இதன் தொடர்ச்சியாக இந்த சிலை இன்னும் ஓரிரு நாளில் டில்லிக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் இச்சிலை தமிழகம் வந்து சேரும்.
தமிழக கோயில்களில் பாரம்பரியமிக்க பல்வேறு பழங்கால சிலைகள் காணாமல் போனது. இதனை மீட்க ஐகோர்ட் உத்தரவு படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். இவர் நடத்திய விசாரணையில் ஆஸ்திரேலியாவில் நடராஜர் சிலை இருப்பது அறிய வந்தது. இதனை மீட்கும் முயற்சியாக ஆஸிக்கான இந்திய துணை கமிஷனர் கார்த்திகேயன் மூலம் ஏ.ஜி.எஸ்.ஏ., நிறுவனத்திடம் பேச்சு நடத்தப்பட்டது. இதன் மூலம் நடராஜர் சிலையை இந்தியாவிடம் ஒப்படடைக்க முடிவு செய்யப்பட்டது.