டாக்டர் ஓம்கார் ஹோடா (31) ஒரிசா மாநிலம் மல்கன்கிரி மாவட்டத்தில் பணியாற்றும் மருத்துவர். இம்மாவட்டம் நக்சல் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதி. அரசு எந்த வளர்ச்சிப் பணியை மேற்கொண்டாலும், தடுத்துவிடுகின்றனர் நக்சல்கள். இதனால் இங்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. டாக்டர் ஓம்காருக்கு அக்டோபர் 31 அன்று சேரிகெட்டா எனும் கிராமத்தில் சுபம் மர்ஸே என்ற பெண் பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே ஒரு உதவியாளரை அழைத்துக்கொண்டு அங்கு விரைந்தார் அவர். பெண்ணுக்கு ரத்தப்போக்கு அதிகம் இருந்ததால் அக்கிராமத்திலேயே பிரசவம் பார்த்தார். அப்பெண்ணின் உடல்நிலை மோசமாக இருந்ததையடுத்து, விரைவாக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார். சாலை வசதி எதுவுமற்ற காட்டுப்பகுதியின் வழியே, 12 கி.மீ. தொலைவில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அப்பெண்ணை அழைத்து செல்ல, கிராமவாசிகள் தயங்கினர். ஓம்கார் சற்றும் தாமதிக்காமல், தனது உதவியாளர், அப்பெண்ணின் கணவர் துணையோடு, பெண்ணையும், பிறந்த குழந்தையையும் கட்டிலில் கிடத்தி, கரடு முரடான காட்டுப்பாதையில் 3 மணி நேரம் சுமந்தே சென்று மருத்துவமனையில் சேர்த்தார்.
உரிய சிகிச்சைக்கு பிறகு தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். இந்த தகவல் வெளியானது முதல் மருத்துவருக்கும் அவரது உதவியாளருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. யாரோ ஒரு சிலர் செயும் தவறுகளை வைத்து, ஒட்டுமொத்த மருத்துவத் துறையையும் குறைசோல்லும் போக்கு அதிகரித்து வரும் வேளையில், ஓம்கார்கள் நம்பிக்கையூட்டுகிறார்கள்.