சென்னை சில்க்ஸ் தீ விபத்து பற்றி? பரதன் பதில்கள்

திருக்குறள்  கூறும்  கருத்துக்கள்  இக்காலத்திற்கும்  பொருந்துமா?  

– ஐ. மனோஜ்குமார். நாமக்கல்

தமிழை வாழவைப்பதற்காகவே பிறவி எடுத்திருக்கிற கி.வீரமணி, ஸ்டாலின், சீமான், திருமா போன்றோர் வள்ளுவரின் புலால் மறுத்தல் எனும் அதிகாரத்தில் உள்ள பத்து குறள்கள் இக்காலத்திற்கும் பொருந்துமா என்பதை விளக்க கடமைப் பட்டவர்கள்.

* பரதனாரே… முகநூலில்  படித்ததில்  பிடித்தது  எது?  

– த. ஏகாம்பரம், பாண்டிச்சேரி

சின்ன வயதில் பென்சிலைப் பயன்படுத்துகிறோம். வளர்ந்தபிறகு பேனாவைப் பயன்படுத்துவதற்கு இனி வரும் காலங்களில் நாம் செய்யும் தவறுகளை திருத்துவதும் அழிப்பதும் கடினம்” என்று உணர்த்துவதற்காக…

சென்னை  சில்க்ஸ்  தீ  விபத்து  பற்றி?  

– செ. மகேஷ், குமாரபாளையம்

எதுவுமே நிலையற்றது. பிரம்மாண்டமான கோபுரங்கள்கூட மண்மேடாகலாம். நல்லவேளை உயிர்பலி எதுவுமில்லை. இவ்வளவு சோதனையிலும் தொழிலாளர்கள் அனைவருக்கும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. கடை உரிமையாளருக்கு சோதனையைத் தாங்கக் கூடிய வலிமையை இறைவன் கொடுக்கட்டும்.

கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் அதிகார பொலிட் பீரோவில்” ஒரு தலித் உறுப்பினர்  கூட  இல்லை   என்பது    உண்மையா?  

– ம. டேவி ஜோன்ஸ், கன்னியாகுமரி

உண்மைதான். அதுமட்டுமல்ல. ஈ.எம்.எஸ்., ஈ.கே. நாயனார், அச்சுதமேனன், பினராயி விஜயன் (கேரளம்) ஜோதிபாசு, புத்ததேவ் பட்டாச்சார்யா (மேற்கு வங்காளம்) நிருபன் சக்கரவர்த்தி, மாணிக் சர்க்கார் (திரிபுரா).  இத்தனை  முதல்வர்களில்  ஒருவர்  கூட  தலித்  இல்லை.

*மாட்டிறைச்சி – உண்மையில்  சட்டத்  திருத்தம்தான் என்ன?  

– பி. விஜயன், மேட்டுப்பாளையம்

‘சந்தைகளில் விவசாய மாடுகளை விவசாயத்திற்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்’ என்பதுதான் மாடுகளைக் காப்பாற்றும் புதிய சட்டத் திருத்தம். இவ்வளவுதான். மாட்டிறைச்சி விற்கவோ, சாப்பிடவோ தடையில்லை. மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிற மனசாட்சி இருக்கிற எந்த விவசாயியும் மாட்டுக்கறி சாப்பிட மாட்டான்.

 ‘தினகரன்  விடுதலை  என்ன  தாக்கம்  உண்டாக்கும்? 

– அ. இளங்கோவன், வாணியம்பாடி

முதல்வர் எடப்பாடிக்கு நிம்மதி போகும். முதல்வர் பதவியின் நாட்கள் எண்ணப்படும்.

ஆர்.எஸ்.எஸ்ஸை எல்லோரும் எதிர்க்கிறார்களே? 

– கி. புண்ணியக்கோடி, சத்திரப்பட்டி

‘எல்லோரும்’ என்பதே தவறு. ஊழலில் ஊறிப் போனவர்கள், பிரிவினைவாதிகள், தேச விரோதிகள் எதிர்க்கிறார்கள். நல்லவர்கள் ஆதரிக்கிறார்கள். சுமார் 50,000 ஊர்களில் ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்கள், சுமார் 1.5 லட்சம் தொண்டு பணிகள். போதுமா!

* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.