மழை. அடம்பிடித்து அழும் குழந்தையைப் போல இடைவிடாமல் பெய்துகொண்டிருந்தது.
தினமும் காலையில் வாக்கிங் செல்வது என் வழக்கம். மொட்டைமாடிக் கதவை திறக்கும் சப்தம் கேட்டாலே, புறாக்களும், காகங்களும் என்னை சூழ்ந்துகொள்ளும். நான் வருவதற்காகவே காத்திருப்பதைப்போல என் காலைச் சுற்றிச் சுற்றி நடை பழகும். அவற்றுக்கு அரிசியும், பிஸ்கட்டும் போட்டுவிட்டு அவை சாப்பிடும் அழகைப் பார்த்து ரசிப்பது என் மனதை புத்துணர்வாக்கும். காகங்கள் பிஸ்கட்டையும் புறாக்கள் அரிசியையும் சாப்பிடும் அழகே அழகு.
அவை சாப்பிட்டு முடித்ததும், தண்ணீர் குடிப்பதற்கு வசதியாக வாய் அகன்ற தொட்டியில் தண்ணீர் ஊற்றி வைப்பேன். பிறகு மொட்டைமாடி தொட்டிச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவேன். இவை என் அன்றாட செயல்.
விடுமுறை தினங்களில் ராஜியும் என்னுடன் வருவாள். பறவைகளை சப்தம் கொடுத்து அவை பயந்து பறப்பதை பார்த்து ரசிப்பாள். ஏம்மா, பறவைகளுக்கு தினமும் சாப்பாடு வைக்கிறாய்” என்று ஒரு முறை கேட்டாள்.
நம்மால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்குச் செய்யணும். இதை தர்மம் என்று சொல்லலாம். நாம் செய்கின்ற நல்ல செயல்கள் நம் குடும்பத்தையே காக்கும். தர்மம் தலை காக்கும்” என்று ஓரளவுக்கு பன்னிரெண்டு வயது பெண்ணுக்குப் புரியும் அளவுக்கு சொல்லி வைத்தேன்.
மழை நாளாக இருந்தாலும், கிடைக்கின்ற இடைவெளியில் மழை நிற்கும் நேரமாகப் பார்த்து மொட்டை மாடிக்குச் சென்று பறவைகளுக்கு உணவிடுவதை நிறுத்தியதே இல்லை.
ஆனால், இன்று மழை நிற்கவே இல்லை. மனதை என்னவோ செய்தது. வீட்டைச் சுற்றி முழங்கால் அளவு தண்ணீர் ஆறாக ஓடிக்கொண்டிருந்தது. இன்னும் 4 நாட்கள் மழை இப்படியே பெய்துகொண்டிருக்குமாம். 1918ம் ஆண்டு பெய்த மழையின் அளவை 2015ல் இப்போது பெய்துகொண்டிருக்கும் மழை மிஞ்சி விடுமாம். சென்னையே தத்தளித்துக் கொண்டிக்கிறது. வீட்டுக்குள் 4 நாட்கள் முடங்க வேண்டும். பள்ளிகளுக்கு விடுமுறை. ஆஃபீஸுக்கும் லீவ் சொல்லிவிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லோருக்கும் பசி வந்துவிடுமே. நேரம் ஆகிக்கொண்டிருந்ததால் சமையலை கவனிக்கச் சென்றேன்.
சிவப்பு கலர், பச்சை கலர் என இரண்டு டப்பாக்கள். சிவப்பு கலர் டப்பாவில் பறவைகளுக்குப் போடுவதற்கான அரிசி. பச்சை கலர் டப்பாவில் சற்று விலை அதிகமான சாப்பாட்டு அரிசி.
சாப்பாட்டு அரிசி இன்னும் ஒரு நாள் சமையலுக்குத்தான் வரும் என்பதை அப்போதுதான் கவனித்தேன். இந்த மழையில் வெளியில் கடைக்குச் செல்லக் கூட முடியாது. வெளியில் செல்ல வேண்டாம்” என மீடியாக்கள் மிரட்டிக் கொண்டிருக்கின்றன. வாசலை எட்டிப் பார்த்தால் மழை ஆற்று வெள்ளத்தில் பாம்புகள் ஊர்வதைப் போல பிரமை. பல இடங்களில் படகு சர்வீஸ் விட்டுக்கொண்டிருக்கிறார்களே, இந்த ஏரியாவுக்கு அந்த சர்வீஸ் வருமா? இப்படி என் மனது அசை போடத் தொடங்கியது.
இதே சிந்தனையில் உள்ளே வந்து சிவப்பு கலர் டப்பாவை திறந்து பார்த்தேன். முக்கால் டப்பா அரிசி இருந்தது. இதை வைத்து இன்னும் நான்கு நாட்கள் ஓட்டலாம். கொஞ்சம் நிம்மதி வந்தது. பறவைகளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
‘தர்மம் தலைகாக்கும்’ என்பது இதுதான் என ராஜிக்கு புரிய வைக்க அவளை அழைத்தேன்.