சாதனை படைத்துவரும் விவேகானந்தா கல்விக் கழகம்

சென்னையில் பல பள்ளிக்கூடங்கள் எல்.கே.ஜிக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை நன்கொடை வாங்குகிறார்கள். இத்தகைய பள்ளிக்கூடங்களில் தங்கள் குழந்தைகள் படிப்பதே கௌரவம் என பெற்றோர்கள் பூரிப்பு கொள்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் எந்தவிதமான வியாபார நோக்கு இல்லாமல் சென்னையில் விவேகானந்தர் கல்விக் கழகம் பல பள்ளிகளை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது.

சென்னையில் விவேகானந்தர் கல்விக் கழகம், சுவாமி விவேகானந்தரின் லட்சியங்களால் உந்துசக்தி பெற்ற அமைப்பு. மனித மேம்பாட்டை மையமாகக் கொண்டே இது இயங்கி வருகிறது. சென்னையிலும் தமிழ்நாட்டில் உள்ள வேறு சில இடங்களிலும் இக் கழகத்தின் கல்வி நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.

விவேகானந்தர் கல்விக்கழகம் 1972ம் ஆண்டு நிறுவப்பட்டது. விவேகானந்தர் கல்விக் கழகம் தற்போது 22 பள்ளிக்கூடங்களை நடத்தி வருகிறது. மற்ற அமைப்புகளுக்காக 2 பள்ளிகளை நிர்வகித்து வருகிறது. சுமார் 35,000 மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.

6 முக்கிய அம்சங்களுக்கு விவேகானந்தர் கல்வி முன்மாதிரி முக்கியத்துவம் அளித்து வருகிறது.

* உடல் மேம்பாடு * அறிவு மேம்பாடு * திறன் மேம்பாடு * ஆன்மிக மேம்பாடு * தேசபக்தி * இறைபக்தி

இந்த 6 அம்சங்களும் ஒரு நறுமண மலரின் இதழ்களாகும்.

மனிதர்களிடம் ஏற்கனவே உள்ள ஆற்றலை பிரகாசிக்க வைத்து முழுமைப்படுத்துவதே கல்வி என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். எனவே ஒரு ஆசிரியரின் பணி, மாணவர்களின் மூளைக்குள் தகவல்களைத் திணிப்பது அல்ல. ஸ்ரீ அரவிந்தர் கூறியதைப் போல ஒவ்வொரு குழந்தையும் கேள்விகளை எழுப்பி அதற்கான விடைகளை கண்டறியும் முயற்சியில் ஈடுபடுகிறது. மொட்டு மலராக விரியும்போது நறுமணம் கமழ்கிறது. மாணவர்கள் இவ்வாறு மலர உதவி செய்பவர்களே சிறந்த ஆசிரியர்கள்.

சிக்கிமுக்கி கல்லில் ஏற்கனவே நெருப்பு உள்ளது. சிறு உரசல் ஏற்பட்டவுடன் தீப்பொறி தெறிக்கிறது. இதைப்போல நம் மூளையில் ஏற்கனவே கல்வி நெருப்பு உள்ளது. ஒரு நிகழ்வு சம்பவித்தவுடன் கல்விக் கனல் தெரிக்கிறது.

விவேகானந்தர் வழியில் பயிற்சி கொடுக்கப்பட்ட ஆசிரியர்களே மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவ முடியும். இதில் விவேகானந்தர் கல்விக் கழகம் கவனம் செலுத்துகிறது. ஆசிரியர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக விவேகானந்தா பிரக்ஞா விகாஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

மழலையர் வகுப்பு முதலேயே இத்தகைய கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. விவேகானந்தா கல்விக் கழகம் நடத்தும் பள்ளிகளில் சிசுவாடிகா முறை அமலில் உள்ளது. இதை பாரதத்திலேயே கல்வி துறையில் மிகப் பெரிய தொண்டு

நிறுவனமாக இயங்கிக்கொண்டிருக்கும் வித்யாபாரதி உருவாக்கியுள்ளது. விவேகானந்தா கல்விக் கழக பள்ளிக்கூடங்கள், வித்யா பாரதியுடன் இணைக்கப்பட்டுள்ளன.

விளையாட்டு, கதைகள், பாடல்கள், நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் வாயிலாக மாணவர்களின் ஆளுமைப் பண்பு பிரகாசிக்க தேவையான அனைத்தும் இங்கு முழு வீச்சில் அமலாக்கப்பட்டு வருகின்றன. கல்வி என்பது பள்ளிக்கூடத்தின் நான்கு சுவர்களுக்குள் மட்டும் அடங்கிவிடுவதல்ல. விளையாட்டு மைதானங்களுக்கு நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம். உடல் உரமாக இருக்க விளையாட்டில்

 

ஈடுபட வேண்டியது அவசியம். ஆசிரியர் முக்கிய பங்கு வகித்தபோதிலும் அவரது செயல்பாடு இதமானதாகவே இருந்து வருகிறது. மலர் மீது விழும் பனித்துளியை பார்ப்பது அரிது. அதனினும் அரிது அது விழும் ஓசையைக் கேட்பது என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது. மேலே இருந்து விழும் பனி மலர்கள் விரிந்து மணம் பரப்ப உதவுகிறது. ஆசிரியரின் பணியும் இதைப் போன்றதுதான். சுசுவாடிகா முறை 6 முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 6 அம்சங்களும் மலரின் இதழ்களுக்கு நிகரானவை.

உடல் மேம்பாடு

அறச்செயல்கள் யாவற்றுக்கும் சரீரமே பிரதான சாதனம் என்று மகாகவி காளிதாசர் குறிப்பிட்டுள்ளார். எங்கள் பள்ளிக்கூடங்களில் விசாலமான விளையாட்டு

 

மைதானங்கள் உள்ளன. விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் பிரகாசிக்க அனைத்து உதவிகளும் உபகரணங்களும் அளிக்கப்படுகின்றன. உடற்பயிற்சி ஆசிரியர்களின் செயல்பாடு உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. இதை மேற்பார்வையிட சரீரிக் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு உடற்பயிற்சிகள் அளிக்கப்படுவதுடன் யோகாவுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பள்ளிக்கூட அளவிலான போட்டி, பள்ளிக்கூடங்களுக்கு இடையிலான போட்டி, மாவட்ட அளவிலான போட்டி, மாநில அளவிலான, தேசிய அளவிலான போட்டி போன்றவற்றில் பங்கேற்க மாணவர்களுக்கு எல்லா வாய்ப்பு வசதிகளும் தங்கு தடையின்றி செய்துகொடுக்கப்படுகின்றன.

 

 அறிவு மேம்பாடு

விவேகானந்தா கல்விக் கழக பள்ளிக்கூடங்கள் மத்திய பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றன. பள்ளிக்கூடங்களில் பரிசோதனைக் கூடங்கள், நூலகங்கள் போன்ற வசதிகள் உள்ளன. ஒலி, ஒளி காட்சி வசதியும் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. வெறும் பாடப்புத்தகங்களை மட்டுமே படிக்கவேண்டும் என்று இல்லாமல் இலக்கிய பயிற்சிக்கும் ஊக்கம் அளிக்கப்படுகிறது. தொடக்க பள்ளிக்கூடங்களிலிருந்தே

 

நூலகத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இதைப் போல கணிதவியல் கண்காட்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. புதிர் போட்டிகளில் பங்கேற்க மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். வேதகணிதவியல் படிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மனப்பாடம் செய்து அதை அப்படியே கக்குவதற்கு ஒருபோதும் ஊக்கம் அளிக்கப்படுவதில்லை. ஆங்கில இலக்கிய மன்றம், இயற்பியல் மன்றம் என பல்வேறு அமைப்புகள் பள்ளிக்கூடங்களில் இயங்கிவருகின்றன. இவற்றின் மூலம் அறிவை மேலும் மேலும் மேம்படுத்திக்கொள்ள முடியும். நவீன கண்டுபிடிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும்.

 

திறன் மேம்பாடு

மாணவர்களிடம் ஏற்கனவே திறன் இருக்கிறது. இதை செம்மையான முறையில் வெளிக்கொணர்வதே சிறந்த கல்வி. இதற்காக பல்வேறு பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்படுகின்றன. பாரதப் பாரம்பரியம் சார்ந்த கலைகள் கற்பிக்கப்படுகின்றன. வெவ்வேறு பள்ளிக்கூடங்களுக்கிடையே போட்டி நடத்தப்படுகின்றன. இசை, நடனம், கலை, கைத்தொழில் போன்றவற்றில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதால் அவர்கள் திறன் பிரகாசிக்கிறது. மேற்கத்திய அறிவியலோடு நமது வேதாந்தத்தை நேர்த்தியாக

 

இணைக்க வேண்டும். பிரம்மச்சரியம் நமது வழிகாட்டு நெறியாக இருக்கவேண்டும். ஒருவருக்கு தன் மீதே நம்பிக்கை இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால்தான் மற்றவர்களை நம்பும் மனோபாவம் எளிதில் வலுவடையும் என்று சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார். இது தேசபக்திக்கும் இறை பக்திக்கும் கூட உதவுகிறது.

 

தேசபக்தி

பாரதத்தின் மேம்பாட்டுக்கு பங்களிப்பு நல்கிய மகான்கள், தேசத் தலைவர்கள் ஆகியோரின் பிறந்த நாள்களை வெகுசிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். இதில் மாணவர்கள் பங்கேற்பதால் அவர்களின் தேசபக்தி வளர்ந்தோங்குகிறது. இது தொடர்பாக பாட்டுப் போட்டி, புதிர் போட்டி போன்றவற்றையும் ஏற்பாடு செய்து நடத்துகிறோம். இந்த புதிர் போட்டிகள் பாரதத்தின் வரலாறு, பூகோளம், பொருளாதாரம், வேளாண்மை தொடர்பானவை. சுவாமி விவேகானந்தரின் ஜனவரி 12 தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

இறை பக்தி

இறைவனை தொழாவிட்டால் கற்றதனால் ஆயபயன் என்? என்று வள்ளுவர் கூறியதற்கு இணங்க இறைநெறியில் நாட்டம் கொண்டவர்களாக மாணவர்களை ஆற்றுப்படுத்தி வருகிறோம். இறைபக்தி சார்ந்த பாடல்கள், கதைகள், புராணங்கள் போன்றவற்றை கற்பித்து வருகிறோம். இது தொடர்பாக நாடகங்களும்

 

நடத்தப்படுகின்றன. இதில் பள்ளி மாணவர்களே பங்கேற்று நடிக்கிறார்கள். இதன் மூலம் அறப் பண்புகள் மாணவர்களின் உள்ளங்களில் வேரூன்றுகின்றன. சிறுவயதிலேயே இறைநாட்டம் ஏற்பட்டுவிட்டால் தன்னலமற்ற இயல்பு தானாகவே வளர்ந்தோங்குகிறது. மற்றவர்களுக்காக பாடுபடுவதுதான் வாழ்க்கையின் லட்சியம் என்ற எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது. எனவே தன்னலத்திலிருந்து விடுபட தேசபக்தியும் இறைபக்தியும் பெரிதும் உதவுகின்றன.

 

குருகுலக் கல்வி

பண்டைக் காலத்தில் ஆசான்களும் வித்யார்த்திகளும் ஒரே இடத்தில் உண்டு உறைந்து வாழ்ந்தனர். ஆசான்களின் இயல்புகள் வித்யார்த்திகளிடம் படிந்தன. ஆசான்களின் ஆற்றல்கள் வித்யார்த்திகளுக்கு இயல்பாகவே சென்றன. இப்போது முழு அளவிலான குருகுலக் கல்வி சாத்தியமல்ல என்றபோதிலும் அத்தகைய கல்வியை கற்பிப்பது மாணவர்களுக்கு மிகவும் நல்லது என்ற அடிப்படையில் சென்னை புறநகர் பகுதியில் இக்கோட்பாட்டின் படி இயங்குகின்ற உண்டுறை

 

பள்ளிக்கூடத்தை உருவாக்கியிருக்கிறோம். ஆசான்கள் பள்ளிக்கூடங்களுக்கு உள்ளே மட்டுமல்லாமல் வெளியேயும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம். சுவாமி விவேகானந்தர் கூறியபடி மாணவர்களை முற்றாளுமை பெற்றவர்களாக உருவாக்க இந்த வழிமுறை உதவுகிறது.

 

மெக்காலே கல்விமுறை தேய்ந்துபோகவேண்டும். விவேகானந்தர் கல்விமுறை வளர்ந்தோங்க வேண்டும். விவேகானந்தர் கல்வி முறையை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்லவேண்டும் என்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். ஏராளமான தன்னார்வலர்கள் தாளாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். வேறு சில பொறுப்புகளை ஏற்றும் இயங்கி வருகிறார்கள். ஆசிரியர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவதனால் கல்வி கழகப் பணி வெற்றிகரமாக சிறந்தோங்கி விளங்குகிறது.