ஹைதராபாத்தில் நடைபெற்ற அகில பாரத ஐயப்ப சேவா சமாஜ செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு வந்த தேசிய செயலாளர் ராஜன் அறிக்கையிலிருந்து…
சபரிமலையில் புதிய தங்க கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே அதன் மீது பாதரசம் (மெர்க்குரி) வீசப்பட்டுள்ளது. இதனால் தங்க கொடிமரத்தின் நிறம் மாறியிருந்தது. இது தெய்வ குற்றத்திற்கு ஒப்பான செயல். இப்படி ஏற்பட்டால் உடனடியாக தேவ பிரஸ்னம் வைத்து ஆராய்ந்து அதற்கு பரிகாரம் செய்யவேண்டும். அதுதான் முறை. ஆனால் ஏதோ தூணில் ரிப்பேர் போல பிரச்சினையை கையாண்டதற்கு யார் காரணம் என்பது விசாரிக்கப்படவேண்டும்.
இன்று த்வஜஸ்தம்ப பீடத்தில் மெர்க்குரி வீசியவர்கள் நாளை திருக்கோயில் சன்னிதானம் மீது கூட வீசமுடியும். சபரிமலை பாதுகாப்பு மிகவும் பலவீனமாக உள்ளது. அதனால் பாதுகாப்புப் பணியை மத்திய பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்க வேண்டுமென ஐயப்ப சேவா சமாஜம் கேரள மாநில அரசை கேட்டுக் கொள்கிறது.
யார் இவர்?
தேவஸ்வம் போர்டு, தந்திரி இவர்களுடன் ஒரு தனி நபரான சுனில் சுவாமி என்ற மனிதரும் பணக்கார பக்தர்களுக்கு ஐயப்பனை காட்சிப் பொருளாக்குகின்ற ஏஜென்டாக சன்னிதானத்தில் செயல்பட்டு வருகிறார். யார் இவர்? இவருக்கு அங்கு எல்லாவிதமான அதிகாரங்களைக் கொடுத்தது ஏன் என்பது விசாரிக்கப்பட வேண்டும்.
நடை திறப்பதில் குழப்பம் ஏன்?
சில நேரங்களில் நடை திறப்பது திட்டமிட்ட ரீதியில் இல்லாமல் வழக்கத்திற்கு மாறாக திறக்கப்படுகிறது. இதைக் கண்டிக்க வேண்டிய தந்திரியும் தேவஸ்வம் போர்டு தலைவர் பிரயார் கோபால கிருஷ்ணனும் சுனில் சுவாமிகளுக்கு சாதகமாக ஆகம விதிகளுக்கு முரணாக ஐயப்பனை காட்சிப் பொருளாக்குவதை சமாஜம் வன்மையாக கண்டிக்கிறது.”