சன்னிதானம்

இந்தியாவிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் சபரிமலை ஐயப்பன் கோயில் முதன்மையானது. ஆண்டுக்கு 4 கோடிக்கும் மேல் பக்தர்கள் தரிசிக்கும் புனிதத் தலமாக சபரிமலை திகழ்கிறது. உலகிலேயே அதிகமான மக்கள் கூடும் சமய கேந்திரமாக உலகப் பிரசித்தி பெற்றது சபரி மலை ஐயப்பன் கோயில். ஐயப்பனின் அருளால் 1942ம் ஆண்டு தொடங்கி 65 வருடங்கள் சபரிமலை செல்ல எனக்கு பாக்கியம் கிட்டியது. சபரிமலையின் வளர்ச்சியை நேரடியாக உணர்ந்தவன் நான். கேரளாவில் இருந்து மட்டும் சில ஆயிரம் பேர் வந்துகொண்டிருந்த சபரிமலை, இன்று லட்சக்கணக்கான மக்களை நாடு முழுவதிலிருந்தும், குறிப்பாக தென்மாநிலங்களிலிருந்து பெருமளவில் தன்பால் ஈர்க்கிறது. இன்று ஐயப்பன் ஓர் அகில பாரத கடவுளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். சைவ, வைஷ்ணவ ஒற்றுமையின் உத்தம உதாரணமாக ஹரிஹர புத்திரனாக ஐயப்பன் திகழ்கிறார். சபரிமலை தரிசனத்திற்கு வரும் ஐயப்பமார்களின் எண்ணிக்கையில் இம் மாபெரும் வளர்ச்சி ஒரு சில பிரச்சினைகளையும் உருவாக்கியுள்ளது. ஆகவே இப்புனிதத் தலத்தின் தூமையையும் மேன்மையையும் விசேஷ தன்மையையும் எவ்விலை கொடுத்தும் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு ஐயப்ப பக்தனுடைய தலையாய கடமை. இன்றைய சமுதாய சூழ்நிலையில் மேலே குறிப்பிட்டுள்ள விரதங்களையும் அனுஷ்டானங்களையும் கடைப்பிடிப்பது சிரமமானதாக இருந்தாலும், நமக்கு மேன்மை தருவதும் அவசியமானதுமான இவ்விரதங்களை ஆண்டுக்கு  ஒரு சில நாட்களுக்காவது கடைப்பிடிக்க வேண்டாமா? மனதில் உறுதியும் தீவிர பக்தியும் இருந்தால் நிச்சயமாக ஐயப்பன் அருளால் நம்மால் கண்டிப்பாக முடியும்.