உலகிலுள்ள 190க்கும் அதிகமான நாடுகள் அனேகமாக பாரதத்திற்கு நெடுஞ்சாண்கிடை நமஸ்காரம் செய்து யோகாவை வாங்கிச் சென்றதை சர்வதேச யோகா தினத்தை அடுத்து நாம் அனைவருமே பார்க்க முடிந்தது. அதாவது உடல் நலத்துக்கு, மன நலத்துக்கு பாரதமே உலகிற்கு வழிகாட்டும் குரு.
யோகாவில் மட்டுமல்ல, ஆயுர்வேதம் என்ற மருத்துவமுறை உலக மக்களை காந்தம் போல இழுக்கிறது. காரணம் பக்கவிளைவு இல்லை; ஒப்பிட்டுப் பார்த்தால் செலவு குறைச்சல், முழு வாழ்க்கை முறையையும் ஆரோக்கியமாக மாற்றிவிடுகிறது ஆயுர்வேதம்.
இந்த இரண்டு அறிவியல் துறைகளிலும் பயிற்சி அளிக்கக்கூடிய ஆசான்களை உலக நாடு ஒவ்வொன்றும் வரவேற்க காத்திருக்கிறது. அதாவது இந்த துறைகளில் பாரதம் உலகின் குரு என்று திட்டவட்டமாக சொல்ல முடியும். விஷயம் இந்த இரு துறைகளோடு முடிந்துபோவதில்லை. ‘நவீன’ விஞ்ஞான துறை ஒவ்வொன்றிலும் (விண்வெளி, ஐடி …) பாரதப் புதல்வர்களின், புதல்விகளின் அறிவாற்றல் பாரதத்தை உலகிற்கு ஆசானாகவே பீடத்தில் அமர்த்துகிறது.
இப்படி ஒரு பெருமிதத்தை தேசத்திற்கு கொண்டு வந்த அந்த வாழ்க்கை முறை ஹிந்துத்துவம். குறிப்பாக ஹிந்துத்துவத்தின் குரு-சிஷ்ய பரம்பரை. ராமகிருஷ்ண பரமஹம்சர் – விவேகானந்தர் என்ற குரு – சீடர் இணை போன நூற்றாண்டில் பாரதத்தின் ஆன்மிகத்தை உலகம் பக்தியோடு ஏற்றுக்கொள்ளச் செய்தது. அந்நிய முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலிருந்து ஹிந்துஸ்தானத்தை விடுவித்து, ஹிந்து ஸ்வராஜ்யம் கண்ட சத்ரபதி சிவாஜி மகாராஜா, தன் குருவான ராமதாசரின் பாதங்களில் அந்த சாம்ராஜ்யத்தை சமர்ப்பித்து, பராசக்தியின் சார்பாக ஆட்சி நடத்தியது அண்மைக்கால வரலாறு. ஆம். குரு-சீடர் உறவு சமர்ப்பண பண்புக்கு பாதை போட்டது.
அந்த சமர்ப்பண பண்பு காரணமாக தஞ்சாவூர் பெரிய கோயில் போன்ற அற்புதமான படைப்புகளை பாரதம் உலகிற்கு அளித்தது. பெரியகோயில் கட்டும் போது தலைமை சிற்பியார் சிலை வடிப்பதில் மூழ்கியிருந்தார். நடுநடுவே தாம்பூலத்தை மென்று உமிழ்வதற்கு பாத்திரம் வைத்திருந்தார். உமிழும் போது உதவியாளர் அதை சிற்பியாரின் வாயருகே கொண்டு போவார். சோழ பேரரசர் ராஜராஜன் அங்கு வந்தபோது உதவியாளர் இல்லை. ராஜராஜனே அந்தப் பணியை சற்று நேரம் செய்தார். சிற்பியார் படைப்பில் மூழ்கியிருந்ததால் முதலில் கவனிக்கவில்லை. அந்த அளவுக்கு பாரத நாட்டில் சமர்ப்பண பண்பு நாடி நரம்புகளில் கலந்துள்ள பண்பு.
வாழ்க்கையை மேம்படுத்தும் இதுபோன்ற பண்புகளை காலங்காலமாக ஊட்டமளித்து வளர்த்து வரும் குருவை, ஆடி பௌர்ணமி நன்னாளில் கௌரவிக்கும் நிகழ்ச்சி தான் குரு பூஜை. வேதங்களை வகுத்தளித்த வியாசரின் பெயரால் வியாச பூஜை என்றும் பெயருண்டு. குரு பூஜை அன்று குரு தட்சிணை வடிவில் சீடர் தனது நன்றிக்கடனை செலுத்தும் மரபும் தொன்றுதொட்டு இருந்து வந்துள்ளது.
(குரு என்ற ஸ்தானத்தில் சமர்ப்பணம், தியாகம் உள்ளிட்ட பண்புகளின் வடிவமான காவிக் கொடிக்கு பூஜை செய்வது 90 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் அன்பர்களின் குரு பூஜையாக நிலைபெற்றுள்ளது. தேசத்திற்கும் சமுதாயத்திற்கும் பட்ட கடனாக குரு தட்சிணை செலுத்துவதும் ஆர்.எஸ்.எஸ் அன்பர்களின் நல்ல மரபு).