காந்திஜியின் கருத்துக்கள் இன்றைய நடைமுறைக்கு ஒத்து வருமா?
– சோம. வள்ளியப்பன், தேவகோட்டை
நாட்டுப்பற்று, தெய்வ பக்தி, எளிமை, சுதேசி இவைகள் தானே காந்தியம். இது எல்லா காலத்துக்கும் தேவைதானே! ஆனால் துரதிருஷ்டம், அவர் வளர்த்த காங்கிரஸ் இத்தாலி அம்மையாரிடம் அடிமைப்பட்டு கிடப்பதுதான்.
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் – இது நம்மூரில் சரி, ஆனால் வெளிநாடுகளில் வாழ்கிறவர்களுக்கு?
– ஸ்வேதா நாராயண், மதுரை
வீட்டில் ஒரு பூஜை அறையை வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.
கண்தானம் செய்வது பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் இருக்கிறதே… அது பற்றி?
– யோகலஷ்மி தனசேகர், திருச்சி
இருக்கும்போது ரத்ததானம்.. இறந்த பிறகு கண்தானம். கண் தானம் மட்டுமல்ல… தேகதானமே செய்யலாம். மற்றொரு கருத்து பற்றி கவலைப்படாதீர்கள்.
கல்வித்துறை முழுவதுமாக மாநில அரசின் பட்டியலில்தான் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை சரியா?
– எஸ்.நிரஞ்சனா, கொளத்தூர்
கல்வி பொதுப்பட்டியலில் தான் இருக்க வேண்டும். அப்போதுதான் தேசிய அளவில் நடக்கும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வது சுலபமாக இருக்கும்.
புதிய கல்விக் கொள்கையை கிறிஸ்தவ மிஷனரிகள் எதிர்ப்பது ஏன்?
– ஜி. சந்திரசேகர், அரக்கோணம்
இதுவரை சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் அவர்களின் ராஜாங்கம்தான் நடந்தது. இனி அது பாதிக்குமோ என்ற பயம்தான். அது சரி… மதச்சார்பற்ற நாட்டில் மதத்துக்கு ஒரு சட்டம் ஏன்?
தங்கள் குழந்தைகளை ஏமாற்றி சந்நியாசிகளாக மாற்றி விட்டார் என ஜக்கி வாசுதேவ் மீது கூறப்படும் புகார் பற்றி?
– முத்துவிஜயன், ஊரப்பாக்கம்
இது விசாரிக்கப்பட வேண்டியதுதான். அதேபோன்று ஆயிரக்கணக்கான ஏழை, எளிய அப்பாவி பெண்களை ஏமாற்றி கன்னியாஸ்திரிகளாக மாற்றும் கிறிஸ்தவ மிஷனரிகளையும் விசாரிக்க வேண்டும். ஈஷா பற்றி விவாதம் நடத்தும் ஊடகங்களும் பக்கம் பக்கமாக எழுதும் பத்திரிகைகளும் கன்னியாஸ்திரிகள் பற்றி வாய் திறக்காதது ஏன்?
ஜி.எஸ்.டி. மசோதா ஓட்டெடுப்பில் அதிமுக மட்டும் வெளிநடப்பு செய்தது ஏன்?
– வி. சாந்தி, பி.வி. களத்தூர்
ஜி.எஸ்.டி. மசோதாவை திமுக ஆதரித்ததே… அது போதாதா…
* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.