காக்கும் கவசம்

 

பாரதத்தின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் ஜூலை 25, 2017ல் பொறுப்பேற்றிருக்கிறார். கடையனையும் கடைத்தேற்றும் ஒருங்கிணைந்த மானுட நேயமான ‘ஏகாத்ம மானவ தரிசனம்’ அளித்த பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்த அதே நாளில் ராம்நாத் ஜனாதிபதி ஆகியிருப்பது இறைவன் திருச்செயல் அல்லாமல் வேறென்ன?

1950-களில் பாரதிய ஜனசங்கமாகத் துவங்கி, 1981-ல் பாரதிய ஜனதா கட்சியாக உருமாறி, பல சோதனைகளைக் கடந்து இந்த மாபெரும் சிகரத்தை எட்டி இருக்கிறது பாஜக. ராம்நாத் கோவிந்தும் கூட, மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்து, தனது கடின உழைப்பால் இந்த உயர்நிலையை அடைந்திருக்கிறார். இந்திய ஜனநாயகம் அளித்துள்ள அற்புத வாப்பு இது.

இப்போதைய நிலையில் நாட்டின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ள வெங்கய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத் தலைவர் சுமித்ரா மஹாஜன் -ஆகிய நால்வருமே, சங்கத்தில் புடம் போடப்பட்ட ஸ்வயம்சேவகர்கள். இந்த நிலையை பாஜகவும் சங்கமும் அவ்வளவு எளிதாக அடைந்துவிடவில்லை. பல்லாயிரக்கணக்கான தலைவர்களின் அர்ப்பணமயமான வாழ்வும் பலகோடி தொண்டர்களின் கடின உழைப்பும் அவர்கள் கொண்டிருந்த தேசபக்தியும்தான் இச்சாதனையை நிகழ்த்தி இருக்கின்றன. பாரத அன்னை வெல்க!

ஜனாதிபதி தேர்தலில் வீம்புக்குப் போட்டியிட்ட காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணியின் வேட்பாளர் மீரா குமார் 34.35 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. 65.65 சதவீத வாக்குகளுடன் ராம்நாத் வென்றிருக்கிறார். ஜூலை 20-ல் முடிவுகள் வெளியானபோது, எதிர்முகாமிலிருந்தும் பலர் ராம்நாத்துக்கு ஆதரவு தெரிவித்தது தெரியவந்தது. மனசாட்சிப்படி வாக்களிக்குமாறு மீரா குமார் விடுத்த வேண்டுகோளை (!) அவர்கள் நிறைவேற்றி இருக்கின்றனர்.

வழக்கறிஞரான ராம்நாத் கோவிந்த் இளம் வயது முதலே ஆர்.எஸ்.எஸ். தொடர்பு கொண்டவர்; கிராமத்தில் இருந்த தனது பூர்வீக விட்டை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சேவைப் பணிகளுக்காக தானமாக வழங்கியவர். ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றபோது, 1977-78-ல் பிரதமர் மொரார்ஜி தேசாயின் தனிச் செயலராக விளங்கியவர்.

இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றவர். ஆனால் ஐ.ஏ.எஸ்., பணி கிடைக்காததால், சட்டத் துறையில் கவனம் செலுத்தினார். 1971-ம் ஆண்டு புதுதில்லி வழக்குரைஞர் கழகத்தில் தன்னை வழக்கறிஞராகப் பதிந்தார். ஒரு வழக்கறிஞராக, சமூகத்தின் நலிவடைந்த பிரிவினர்,  பெண்கள், ஏழைகள் ஆகியோருக்கு புதுதில்லியிலிருந்த இலவச சட்ட உதவி மன்றத்தின் மூலம் பல உதவிகளைச் செதிருக்கிறார்.

1978-ல் உச்ச நீதிமன்றத்தில் ‘அட்வகேட் ஆன் ரெக்கார்டு’ பணியிலும், 1977- 1979-ல்  தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றியவர். உச்ச நீதிமன்றத்திலும் 13 ஆண்டுகள் மத்திய அரசு வழக்கறிஞராக இருந்தவர். சட்டத்துறையில் நீண்ட அனுபவம் கொண்டவராக இருப்பது, அவரது ஜனாதிபதி பணிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.

1991-இல் பாஜகவில் சேர்ந்த அவர், மிக விரைவில் கட்சியின் முக்கியத் தலைவர் ஆனார். தலித் மக்கள் பாஜகவை ஆதரிக்க மாட்டார்கள் என்ற மாயையை மாற்றியதில் ராம்நாத்துக்கு பெரும் பங்குண்டு. 1994-ல் பா.ஜ., சார்பில், உ.பி. யில் இருந்து முதன்முறையாக ராஜ்யசபாவுக்குத் தேர்வானார். 1998 – 2002 வரை பா.ஜ. தலித் மோர்ச்சா பிரிவு தலைவராக இருந்தார்; அகில இந்திய கோலி சமாஜின் தலைவராகவும் இருந்துள்ளார். 2000-ம் ஆண்டு,  இரண்டாவது முறையாக ராஜ்யசபா எம்.பி., ஆனார்.

1994 முதல் 2006 வரை, நாடாளுமன்ற் உறுப்பினராக 12 ஆண்டுகள் இருந்தபோது, உள்துறை, பெட்ரோலியம், சமூகநலம்,  சட்டம் மற்றும் நீதி, எஸ்.சி, எஸ்.டி. நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிலைக் குழுக்களில் பணியாற்றியுள்ளார். எனவே நாடாளுமன்ற அலுவல்கள் குறித்தும் நிறைந்த அனுபவம் கொண்டவராக ராம்நாத் உள்ளார்.

ஆகஸ்ட் 8, 2015ல் பிகார் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த், ஜூன்20 வரை 2017 அப்பொறுப்பில் இருந்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அப்பொறுப்பிலிருந்து விலகினார். பிகார் ஆளுநராக செயல்பட்டபோது அரசியல் சார்பின்றி, மிகுந்த நடுநிலையுடன் நடந்துகொண்டதால் அனைத்து கட்சியினரின் ஆதரவைப் பெற்றார். ஜனாதிபதி தேர்தலில் அவரை ஐக்கிய ஜனதாதளத்தைச் செர்ந்த முதல்வர் நிதிஷ்குமார் அதுவே காரணம்.

நாட்டின் முதல் குடிமகன் என்ற பொறுப்பை ஏற்றுள்ள ராம்நாத் கோவிந்த், தனது அரசியல் சாஸனக் கடமைகளை நெறி பிறழாமல் நிறைவேற்றுவார் என்பது உறுதி. முந்தைய ஜனாதிபதிகளுக்கு இல்லாத ஒரு தனிப்பெரும் சிறப்பு, அவர் ஒரு ஸ்வயம்சேவகர் என்பது. சங்கஸ்தானில் திறமை பயின்ற அவரது தலைமையில், பிரதமர் மோடியின் ஆட்சி மேலும் பல சாதனைகளைப் படைக்கட்டும்!

எல்லையைக் காக்கும் வீரர்கள் போல, பாரத ஜனநாயகம் காக்கும் கவசமாக வீற்றிருக்கும் ஸ்வயம்சேவகர்கள் அனைவருக்கும், பாரத அன்னை மேலும் வலிமை அருளட்டும்!

 

******************************************************************************************************

ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் இருக்க உழைப்பேன்”

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த், தன் தேர்வு குறித்து  மிகுந்த நெகிழ்ச்சியுடன் கூறியதாவது:

தற்போது தில்லியில் மழை பெகிறது. அதைப் பார்க்கும்போது, என் சிறுவயது நினைவுக்கு வருகிறது. எங்கள் மண்குடிசை வீட்டில் மழை பெதால் தண்ணீர் உள்ளே வந்துவிடும்.  மழையில் நனைந்தபடி மழை எப்போது நிற்கும் எனக்  காத்திருப்போம். தற்போது கோடிக் கணக்கான ராம்நாத் கோவிந்த்கள் மழையில் நனைந்தும் வேர்வை சிந்தியும் அடுத்த வேளை உணவுக்காக காத்திருக்கின்றனர். அவர்கள் சார்பில், அவர்களின் குறைகளைக் களைய, ஜனாதிபதி மாளிகைக்குள் செல்கிறேன். கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம், சாதாரண ஏழை கூட ஜனாதிபதியாக முடியும் என்பது நம் ஜனநாயகத்தின் சிறப்பு.

கடின உழைப்புதான் நம் பாரம்பரியம். மிகப் பெரும் தலைவர்களான ராஜேந்திர பிரசாத், எஸ்.ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி ஆகியோர் அலங்கரித்த பதவிக்கு, உங்களில் ஒருவனாக நான் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளேன். நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் இருக்க உழைப்பேன் என்று கூறியிருக்கிறார்.

******************************************************************************************************