ஒருமுறை அன்பர் ஒருவர் ரமணாஸ்ரமத்தில் கத்தரிக்காய் நறுக்கி கொண்டிருந்தார். காம்புப் பகுதி, அடுத்துள்ள குடை போன்ற பச்சை நிறப் பகுதியையும் சேர்த்து வெட்டிக் கொண்டிருந்தார். சதைப் பகுதியைச் சமையலிலும், குடை போன்ற பகுதிகளைக் குப்பையிலும் போட்டு வந்தார்.
இதைக் கவனித்த மகரிஷி, “ஓய், காம்புப் பகுதிகளை ஏன் வீணாக்குகிறீர்?” என்று கேட்டார். “சுவாமி, அது சமையலுக்கு ஏற்றதல்ல” என்றார். “யார் சொன்னது ? அந்த வெட்டின காம்புகளை எல்லாம் என்னிடம் கொடுங்கள்” என்று வாங்கிக் கொண்ட பகவான், அதைக் கொண்டு சுவையான ஒரு கறியைச் சமைத்தார். கத்தரிக்காயில் சுவையானது அந்தக் காம்புப் பகுதிதான் என்பதை மகரிஷி அந்த அன்பருக்குப் புரிய வைத்தார்.
பிறகு மகரிஷி அவரிடம், “எதையும் வீணாக்கக் கூடாது. இந்தப் பிரபஞ்சத்திலுள்ள ஒரு தூசியைக்கூட நாம் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். அதே சமயம், இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் ஒரு தூசியாகத் தூக்கிப்போட்டுப் போகவும் தெரிந்திருக்க வேண்டும்” என்றார்.