தமிழகத்தில் ஒரு கூட்டணிக்குப் பெயர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி. அதில் முஸ்லிம்லீக் இடம் பெற்றுள்ளது. கட்சியின் பெயரிலேயே மதத்தின் பெயர் உள்ளது. முஸ்லிம்லீக் மதச்சார்பற்ற கட்சியா?
ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லும் திமுக தலைவர்கள் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்வதில்லையே… இதுதான் மதச்சார்பின்மையா?
திருச்சியில் நடைபெற்ற அகில உலக நாத்திகர் மாநாட்டில் பேசிய கனிமொழி, “திருப்பதி பெருமாள் சக்தி உள்ள கடவுள் என்றால் அங்குள்ள உண்டியலுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏன்?” என்று கிண்டலும் கேலியும் பேசியதுதான் மதச்சார்பின்மையா?
சபரிமலை வழிபாட்டு முறைகளில் பாரம்பரியத்தை மதிக்காமல் செயல்பட்ட கேரள கம்யூனிஸ அரசு நடந்து கொண்டது மதச்சார்பின்மையா?
ஹிந்துக்கள் போற்றி வணங்கும் ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளைக் கொச்சைப்படுத்தி வைரமுத்து பேசினார். ஹிந்துப் பெண்களைக் கொச்சைப்படுத்தி பெருமாள் முருகன் ‘மாதொரு பாகன்’ என்றொரு கதை எழுதினார். இதைக் கண்டிக்காமல் அவர்களை ஆதரித்தது மதச்சார்பின்மையா?
தாமிரபரணி புஷ்கரம் என்பது நதியைத் தெய்வமாக வணங்கும் ஹிந்துக்களின் நம்பிக்கை சார்ந்தது. புஷ்கரமே கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் நடவடிக்கைகள் மதச்சார்பின்மையா?
சனாதன தர்மம் என்றால் ஹிந்து தர்மமே. சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று திருமாவளவன் மாநாடு நடத்தி தீர்மானம் போட்டது மதச்சார்பின்மையா?
மதமாற்றத்தைக் கண்டித்த திருபுவனம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார். அதைக் கண்டிக்கவோ அவரது வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறவோ எந்தத் தலைவர்களும் செல்லவில்லையே… இதுதான் மதச்சார்பின்மையா?
எல்லா மதங்களையும் சம கண்ணோட்டத்துடன் பார்ப்பதுதான் உண்மையான மதச்சார்பின்மை!