எது ஐஸ்கிரீம்? அமுல்-யூனிலீவர் மோதல்

இந்த ஆண்டு பிப்ரவரி – மார்ச் மாதங்களில் அமுல் (குஜராத் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனம்) விளம்பரங்களை தொலைக்காட்சியில் வெளியிட்டது. அவற்றின் சாராம்சம் : எங்களுடைய (அமுல்) ஐஸ்கிரீம் மட்டுமே 100 விழுக்காடு பால் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. ஏனைய நிறுவனங்கள் தம் தயாரிப்புகளில் திரிபடைந்த தாவர எண்ணெய், நிறைவுறாத கொழுப்புகளை (Transfat) பல்வேறு விகிதங்களில் உபயோகிக்கின்றன. ஆகையால் அவை அந்தப் பொருட்களை ஐஸ் கிரீம் என்று அழைத்துக்கொள்ள தார்மீக உரிமை இல்லை. நுகர்வோர் தாங்கள் உண்பது Frozen Dssert அதாவது உறைய வைக்கப்பட்ட தின்பண்டமே என்று அறிதல் வேண்டும்.

அமுல் விளம்பரங்களில் எந்த ஒரு நிறுவனத்தின் பெயரையோ பொருட்களின் பெயரையோ குறிப்பிடவில்லை. ஆனாலும் குவாலிட்டி வால்ஸ் தயாரிப்பாளரான ஹிந்துஸ்தான் யூனி லீவர்  நிறுவனத்திற்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. அமுலின் விளம்பரம் தங்கள் தயாரிப்பையே குறி வைப்பதாக என்ற விளம்பரத் துறையினரின் தர நிர்ணய ஆலோசனைக் கவுன்சிலிடம் புகார் அளித்தது. இரு தரப்பினரிடமும் விளக்கம் கேட்டு, வல்லுநர்களிடமும் கலந்தாலோசித்து அமுல் விளம்பரங்களில் குறை கூற ஒன்றும் இல்லை என்று தன்னுடைய முடிவினைக் கூறியது கவுன்சில்.

விட்டு விடுமா என்ன  யூனிலீவர் நிறுவனம்? பன்னாட்டு கார்ப்பரேட் அல்லவா? மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது யூனி லீவர் முன் வைத்த முக்கியமான குற்றச்சாட்டு: ‘பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களை தயாரிக்கும் நிறுவனங்களில் 70 சதவீதத்தினர்தான் திரிபடைந்த தாவர எண்ணெய் கொழுப்பை பயன்படுத்துகின்றன; தங்கள் நிறுவனம் உறைய வைக்கப்பட்ட பால் கொழுப்பையும் சிறிதளவே, டால்டா தவிர்த்த, தாவர எண்ணெயை பயன்படுத்துகிறோம். அமுல் விளம்பரம் வனஸ்பதி என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும், பொதுமக்கள் கருத்தில் டால்டா என்ற குறிப்பிட்ட தயாரிப்பே தங்கியுள்ளது. ஆகையால் எங்கள் வாணிபம் பாதிக்கப்படுகிறது’ என்று முறையிட்டது.

நுகர்வோர் விழிப்புணர்வு நடவடிக்கையாகவே மேற்சொன்ன ஏழு விளம்பரங்களை வெளியிட்டதாகக் கூறியது அமுல் நிறுவனம். வாதங்கள் – பிரதிவாதங்கள் இரண்டு மூன்று நாட்களாக நடைபெற்றன. இறுதியாக,  ஜூன் 17அன்று மும்பை உயர் நீதிமன்றம் சுட்டிக் காட்டப்பட்ட ஏழு விளம்பரங்களுக்குள் குறிப்பிட்ட இரண்டு விளம்பரங்களை மட்டும் தொடர்ந்து தொலைக்காட்சியிலோ பொது வெளியிலோ ஒளிபரப்ப தடை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த விவகாரத்திலிருந்து ஒரு நுகர்வோர் என்ற முறையில் என் மனதில் பட்டவை:

* நான் உண்பது ஐஸ்கிரீமா உறைய வைக்கப்பட்ட தின்பண்டமா என்று அறிந்து கொள்வது என் உரிமை. * திரிபடைந்த தாவர எண்ணெய், கொழுப்பு அமிலங்களால் ஏற்படும் விளைவுகள் என்ன? * உடனடி பாதிப்பு என்ன, நீண்ட கால பாதிப்பு என்ன? * அமுல் என்பது உள்நாட்டு கூட்டுறவு நிறுவனம் யூனி லீவர் பன்னாட்டு நிறுவனம். * நான் வாங்கும் பொருள் யாருக்கு பொருளாதார வலுசேர்க்கும்? * பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து எவ்வாறெல்லாம் உள்நாட்டு தயாரிப்புகளை நசுக்குகின்றன? * தேசிய எண்ணம் கொண்டவர்கள் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும்?

எது எப்படியோ  யூனிலீவர் நிறுவனம் வழக்கு தொடுத்து தங்கள் தயாரிப்பு Frozen Dssert தான் என்று முரசறைந்து தெரிவித்து விட்டார்கள். அப்பன் குதிருக்குள் இல்லை.

Transfat என்பது திரிபடைந்த தாவர எண்ணெய் கொழுப்பு. வணிக ரீதியாக தாவர எண்ணெயை அடிப்படையாக வைத்து தின்பண்டங்கள் சீக்கிரம் கெடாமலிருக்க தாவர எண்ணெயில் ஹைட்ரோஜன் என்ற வேதியியல் மூலக்கூறை செலுத்துகின்றனர். அந்த செயல்முறையின்போது தோன்றுபவைதான் திரிபடைந்த – நிறைவுறா கொழுப்புகள் – அமிலங்கள். (Transfatty – Unsaturated Acids). ஐஸ்கிரீம் தயாரிப்பில் பனிக்கட்டி நெடுநேரம் கெட்டியாக உறைந்தே இருப்பதற்கு இவை பயன்படுகின்றன.

 

***********************************************************************************

ஐஸ்கிரீமா? ஃப்ரோஜன் டிசர்ட்டா?

இன்று மக்கள் அனைவரும் விரும்பும் ஐஸ்கிரீம், புதிய விவாதப்பொருளாக மாறியுள்ளது. இதற்கு காரணம் கடந்த வருடம் பால் உற்பத்தி நிறுவனமான அமுல் மீதான வழக்குதான்.

ஐஸ்கிரீமிலும் ஃப்ரோஜன் டிசர்டிலும் பயன்படுத்தப்படும் பொருட்கள் பெரும்பாலும் ஒன்றுதான். ஆனால் ஒரே பெரிய வித்தியாசம் என்னவென்றால் ஐஸ்கிரீமில் எண்ணெய் அல்லது வனஸ்பதி போன்றவற்றை பயன்படுத்த மாட்டார்கள். வெறும் பாலில் இருந்து பெறப்படும் கொழுப்புதான் சேர்க்கப்படும்.

அமுல் வழக்கிற்குப் பின் குவாலிட்டி வால்ஸ் பொருட்களின் ஐஸ்கிரீம் என்ற சொல் இடம்பெறுவது இல்லை.

சரி, இதில் எந்த பொருள் உடலுக்கு நல்லது? இரண்டிலுமே புரதம், மாவு சத்து, கொழுப்பு ஆகிய ஊட்டச்சத்துகள் கிட்டத்தட்ட ஒரேயளவு தான் உள்ளது. ஐஸ்கிரீமில் கூடுதலாக கால்சியம் உண்டு.

ஃப்ரோஜன் டிசர்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் பொருட்களில் பால் கொழுப்பிற்கு பதிலாக எண்ணெய் பயன்படுத்தப்படுவதால் அது கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் என்று வாதாடி வருகின்றனர்.

சில மருத்துவர்கள் இந்த வகை எண்ணெய்கள் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் என அறிவுறுத்துகிறார்கள்.

இரண்டும் சாப்பிட உகந்த பொருள்தான். அவரவர் விருப்பத்திற்கு தகுந்த வகையில் தேர்ந்தெடுத்து சாப்பிடலாம். அளவுக்கு மிஞ்சாத வரையில் எந்த உணவும் நல்லதுதான்.

– நிரஞ்சனா

***********************************************************************************