ஹிந்து திருமண சட்டத்தில் சுயமரியாதை திருமணங்களுக்கு வழி வகுக்கும் தமிழ்நாடு சட்ட திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்திருந்தேன். அந்த வழக்கு மாண்பமை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அவ்வழக்கு குறித்து திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தனிப்பட்ட முறையில் என்னை தாக்கி விடுதலை (12.11.2015) இதழில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஒரு கட்சியின் தலைவர் ஒரு வழக்கைப் பற்றி பேசலாம். வழக்காடியைப் பற்றியோ வழக்கறிஞரைப் பற்றியோ தனிப்பட்ட அவதூறு பேச்சுகளோ வீண் விமர்சனங்களோ தேவையற்றது, மாண்பற்றது. ஆனால் மாண்பை எல்லாம் வீரமணியிடம் எதிர்பார்க்க முடியாது. அவர் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் தானே? நான் எழுப்பிய சட்டபூர்வமான வாதங்களுக்கு அவர் பதிலளித்திருக்கலாமே?
ஹிந்து திருமணச் சட்டம் என்பது ஒரு பாரம்பரியச் சட்டம். இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பிரிவினரின் பழக்க வழக்கங்களையும் பாரம்பரிய சம்பிரதாயங்களையும் ஆராய்ந்து அதை முறைப்படுத்தி தொகுக்கப்பட்ட ஒரு சட்டம்.
பி.என். ராவ் என்பவரது தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அந்தக் குழு நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு தந்த முடிவுகளை மாண்புமிகு டாக்டர் அம்பேத்கர் பரிசீலனை செய்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் பிறகே ஹிந்து திருமணச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. சுயமரியாதை திருமணங்களுக்கு வழிவகுக்கும் தமிழ்நாடு சட்டத் திருத்தமானது டாக்டர் அம்பேத்கர் முன்மொழிந்த சட்டப் பிரிவுகளுக்கு எதிரானது அல்லவா என நான் கேள்வி எழுப்பியிருந்தேன்.
ஒரு பாரம்பரிய சட்டத்தில் காலம் காலமாக பழக்க வழக்கத்தில் உள்ள நடைமுறைகள் தான் சட்டமாக அங்கீகரிக்கப்பட முடியும். எனவே சுயமரியாதை திருமண திருத்த சட்டம் ‘ஞிணிணஞிஞுணீணா ணிஞூ டூச்தீ’க்கு எதிரானது அல்லவா என்றும் நான் கேள்வி எழுப்பி இருந்தேன்.
ஒரு வழக்கை அனுமதிப்பதும் தள்ளுபடி செய்வதும் மாண்பமை உயர் நீதிமன்றத்தின் தனி உரிமை. ஒரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்ட காரணத்தாலேயே வழக்கு தொடுத்தவர் முட்டாள் என்று அர்த்தம் ஆகாது. அந்த வகையில் வீரமணி தோல்வியுற்ற வழக்குகளையும் என்னால் பட்டியலிட முடியும்.
நான் பார்ப்பனரா, விபீஷணரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதிகாசங்களையும் புராணங்களையும் ஹிந்துக்களை விட அவர் நன்கு படித்து அறிந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஹிந்து மதம் என்பதற்கு ஏதாவது கொள்கை கோட்பாடு உண்டா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஹிந்து மதம் என்பது கழகமல்ல, கொள்கை கோட்பாடுகளை அரைப்பக்க அறிக்கையில் சொல்லி விடுவதற்கு. அது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையுள்ள ஒரு பண்பாடு.
அந்த காலத்தில் மெக்காலே கல்வி முறை என்ற விஷச் சாராயத்தை அருந்திய விட்டில் பூச்சிகள் வேண்டுமானால் வீரமணி மாயையில் விழுந்திருக்கலாம். இப்போது காலம் மாறிவிட்டது. கல்வி முறையும் மாறத் துவங்கிவிட்டது. திராவிட நாடகமும் முடிந்துவிட்டது. அவரது நண்பர்களும் இந்த உண்மையை உணரத் தொடங்கிவிட்டனர். படம் முடிந்தும் தியேட்டரில் உட்கார்ந்து கொண்டிருக்கும் ரசிகர் போல வீரமணி மட்டுமே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
(கட்டுரையாளர் சென்னை வழக்குரைஞர்)