ஹிந்துக் குடும்பம் தன் சந்ததி நல்ல பண்புகளுடன் வளர வீட்டில் நல்ல பழக்கங்களை விடாமல் கடைபிடிக்க முனைப்புடன் முயற்சி செது வருகிறது.
வீட்டுக்கு வெளியில் அதேபோல நல்ல விதமாகத் தனது மகனோ மகளோ பழக வேண்டும் என்று ஆசைப்படும் தா தகப்பன்மார் கை வீசம்மா கை வீசு, கோயிலுக்குப் போகலாம் கைவீசு, கும்பிட்டு வரலாம் கைவீசு!” என்று பாட்டுப் பாடி ஆட்டம் காட்டி சாமி கும்பிடுவது தான் கோயிலுக்குப் போவதன் நோக்கம் என சிறு பிராயத்திலேயே பதிய வைக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
சாமி கும்பிடுவது எப்படி என்று பெற்றோர் சோல்லிக் கொடுக்க, கற்றுக் கொள்ளும் பிள்ளைகள் என்ன உடை அணிந்து சாமி கும்பிடுவது என்பதையும் பெற்றோரைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறார்கள். அதனால் பெற்றோர் கவனமாக கோயிலுக்கு போகையில் கண்ணியமாக உடை அணிவதை சுய விருப்பத்தின் பேரில் கடைபிடிக்கிறார்கள்.
வீட்டுக்குள்ளேயே மடித்துக் கட்டிய வேட்டியில் இருக்கும் அப்பா, பெரியவர்கள் முன்னிலையில் தழையத் தழைய கட்டியபடி பழகுவதை பிள்ளைகள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே ‘கோயிலுக்குப் போகும் போது வேட்டி உடுத்து’ என்று பெற்றோர் ஞாபகப்படுத்துவதுகூட சராசரி குடும்பத்தில் அனாவசியம்.
வெள்ளி, செவ்வாய் என்றால் கோயிலுக்குப் போய் தீபம் போட்டுவிட்டு வா என்று மகளிடம் சொல்லி அனுப்பும் அம்மா, ‘சேலை உடுத்து’ என்றோ ‘துப்பட்டாவை மறக்காதே’ என்றோ சொல்லுவதுகூட கிடையாது. அந்த அளவுக்கு இளைய தலைமுறை ஹிந்து கோயிலுக்கான கட்டுப்பாட்டில் ஊறியவனாக, ஊறியவளாக இருக்கிறது.
மாற்று மதத்தவர்கள் உள்ளே வரக்கூடாது என்றும் வெளிநாட்டவர்கள் அனுசரிக்கவேண்டிய கட்டுப்பாடு என்றும் கோயில் வாசலில் விளம்பரப் பலகை வைக்கலாமே தவிர, பக்தர்கள் அதாவது ஹிந்துக்கள் என்ன உடையில் சாமிகும்பிட வரவேண்டும் என்று கோயில் நிர்வாகி சொல்லிக்காட்டவேண்டி இருப்பது வெட்கக்கேடு. குடும்பத்தில் இந்த விஷயம் சற்று ஒதுக்கப்பட்டுவிட்டதோ என்று ஒரு சந்தேகம்.
ஆனால் இன்று கோயில் வாசல்களில் ஹிந்துக்களுக்கு புத்திமதி சொல்லும் விளம்பரப் பலகைகள் கண்ணை உறுத்துகின்றன என்பதுதான் நிதர்சனம்.
கோயில் விவகாரத்தை கோர்ட்டுக்கு கொண்டுப்போனார்களாம்; கோர்ட் சொல்லியதாம், என்ன வேட்டி, என்ன சேலை உடுத்தி பக்தர், அதாவது ஹிந்து, கோயிலுக்கு வரவேண்டும் என்று! கோயில் நிர்வாகம் அரசின் கையில் இருந்தால் அது கோர்ட்டுக்கு போகத்தான் நினைக்குமே தவிர குடும்பத்திடம் வர அதற்கு அருகதை கிடையாது. எனவே கோர்ட்டுக்குப் போயிருக்கிறது.
கோயில் ஹிந்துக்களுடையது. அதன் ஆறுகால பூஜையும் சரி, ஆடை அக்கப்போரும் சரி ஹிந்துக்கள் தீர்மானிக்கவேண்டிய விஷயம்; இதையே ஆகமம் தீர்மானிக்கிற விஷயம் என்று சொன்னால் எல்லோருக்கும் புரியும். ஆனால் ஆகமத்தை மதியுங்கள் என்று கோர்ட் சொல்லிவிட்டதால் பலருக்கும் அதன் மீது ஒரு பார்வை விழுந்திருக்கிறது.
குடும்பம் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறது. குடும்ப சூழலில் சரிசெய்திருக்கவேண்டிய சங்கதி, இப்படி சந்திசிரிக்க நேர்ந்திருப்பது குறித்து குடும்பத்திற்கு வருத்தமே தவிர, நிராசை கிடையாது.
இன்றும் பிள்ளைகள் அப்பா, அம்மாவின் செல்லங்கள்தான். நல்லது சொன்னால் செய்கிறார்கள். எனவே தான் அட்டையில் கைகூப்பிய ஒரு பெண்மணி அப்படி பிரார்த்தனை செய்கிறாளோ?