இந்த வாரம் சந்தித்தோம் – புற்று நோயாளிகளுக்கு மாதா டிரஸ்டின்” புனிதத் தொண்டு… இதுதான் இறைவனுக்கான ஆராதனை – வி. கிருஷ்ணமூர்த்தி

 

சென்னையில் டாக்டர் சாந்தா அம்மையார் நடத்தி வரும் அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்” புற்று நோய்க்கு சிறந்த மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி ஏராளமான நோயாளிகள் நாடு முழுவதுமிருந்து வருகிறார்கள். அவர்கள் சில நாட்கள், மாதங்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டிய சூழ்நிலை. ஏழை எளிய மக்களுக்கு, லாட்ஜ்களில் தங்க வசதி கிடையாது. அப்படிப்பட்ட மக்களுக்கு தங்க இடம் கொடுத்து, உணவும் கொடுத்து கடந்த 17 ஆண்டுகளாக அவர்களை பராமரித்து வருகின்ற ஸ்ரீ மாதா டிரஸ்ட் நிறுவனர் வி. கிருஷ்ணமூர்த்தியை விஜயபாரதம் ஆசிரியர் ம.வீரபாகு சந்தித்த போது…

 

உங்களைப் பற்றி…

நான் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 35 ஆண்டுகள் பணியாற்றியவன். காஞ்சி மடத்தின் சிஷ்யன். காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளாணைப் படி ஸ்ரீமாதா டிரஸ்ட் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.

ஸ்ரீ மாதா டிரஸ்ட் பற்றி…

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் ஏழை எளிய நோயாளிகள் தங்குவதற்காக அரசாங்கம் இந்த இடத்தைக் குத்தகைக்கு கொடுத்தது. ராஜஸ்தான் பிரமுகர்கள் சிலரின் உதவியோடு இங்கு இந்த கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் இதை நிர்வாகம் செய்ய சரியான நபரும் தேவையான நிதியும் ஏற்பாடு ஆகாததால் கட்டிடம் பயன்பாடு இல்லாமல் பூட்டியே கிடந்தது. டாக்டர் சாந்தாவும் ராஜஸ்தான் பிரமுகர்களும் இது பற்றி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் தெரிவித்தனர். சுவாமிஜி ஆவன செய்வதாக வாக்குறுதி அளித்தார். சுவாமிஜி இதற்கு சரியான ஒரு நபரைத் தேடினார். அந்த பாக்கியம் அடியேனுக்குக் கிடைத்தது. சுவாமிஜி வேலையை ராஜினாமா செய்யச் சொல்லி முழுநேரமாக இந்தப் பணியில் ஈடுபட அறிவுறுத்தினார். ஸ்ரீமாதா டிரஸ்ட் என்ற பெயரையும் சுவாமிகளே சூட்டினார். முதல் நன்கொடையாக பெரியவா, ரூபாய் ஒரு லட்சம் கொடுத்து துவக்கி வைத்தார். ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில், கிருஷ்ண மூர்த்தி செய்யும் தொண்டு கார்யம் புனிதமானது; இதற்காக பக்தர்கள் கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுக்கும் பணம் என்னிடம் கொடுக்கிற மாதிரிதான்.  இதைவிட உயர்ந்த தருமம் இருக்க முடியாது என்று தனது அருளுரையில் கூறினார்.

நோயாளிகளுக்கு என்னென்ன வசதிகள் உள்ளன?

இங்கு 200 நோயாளிகள் தங்கியிருக்க படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நோயாளியுடன் அவரது உறவினர் ஒருவரும் இங்கு தங்கிக் கொள்ளலாம். இருவருக்கும் உணவு ஏற்பாடு உண்டு. இங்கு தங்கி அருகில் உள்ள மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுக் கொள்வார்கள். இதுவரை 4லீ லட்சம் பேர் இங்கு தங்கி சிகிச்சை பெற்றுள்ளார்கள்.

இந்த காப்பகத்திற்கான நிதி ஆதாரம்…

2000 ம் ஆண்டில் இதைத் துவங்கும்போது  ஒரு நாளைக்கு ரூ.5,000 செலவாகியது. தற்போது தினசரி உணவு மட்டும் ரூ 25,000 செலவாகிறது. தங்குமிடம், உணவு மட்டுமல்லாமல் மருந்து வாங்க இயலாதவர்களுக்கு மருந்து, மாத்திரைகள், ஊருக்குச் செல்ல பயணச் செலவு, உடை, குழந்தைகள் படிப்புச் செலவு என வருடம் சுமார் 1லீ கோடி ரூபாய் செலவாகிறது. கடவுளின் அருளாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பாலும் இன்றுவரை தடங்கல் இல்லாமல் சிறப்பாக இயங்கிவருகிறது. திருமண நாள், பிறந்தநாள், அப்பா, அம்மா நினைவு நாட்களில் பலர் இங்குள்ள மக்களுக்கு ஒரு நாள் உணவோ, ஒருநேர உணவோ அன்னதானமாக அளித்து வருகிறார்கள்.

புற்றுநோய் தொற்று வியாதியா?

புற்றுநோய் தொற்றுநோய் இல்லை. கடந்த 17 வருஷங்களாக இந்த நோயாளிகளுடனேயே தங்கி, அவர்களைத் தொட்டு அரவணைத்து பழகி வருகிறேனே!  புற்றுநோய்க்கு நான்கு விதமான நிலைகள் உண்டு. முதல் நிலை, இரண்டாவது நிலையில் கண்டுபிடித்து சரியான முறையில் சிகிச்சை பெற்றால் பூரணமாக குணம் பெற முடியும்.

இந்த நோய் வரக் காரணம் என்ன?

ஆண்களாக இருந்தால் பீடி, சிகரெட், புகையிலை பயன்படுத்துவதுதான் காரணம். பெண்களுக்கு பெரும்பாலும் மார்பக புற்றுநோய் மட்டுமல்ல, கருப்பைவாய் புற்றுநோயும் தாக்குகிறது. மேலும் உணவு, சுற்றுச்சூழல், மரபணு கூட காரணமாகிறது.

சிகிச்சைக்கு வரும் மக்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களா?

தமிழகம் மட்டுமல்ல… அந்தமான், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்தும் வருகிறார்கள். இங்கு ஜாதி, மொழி, மதம், மாநிலம் வேறுபாடு இல்லாமல் இந்த காப்பகம் ஒரு பாரத விலாஸ் மாதிரி இயங்கி வருகிறது.

நோயாளிகள் திருப்தியாக இருக்கிறார்களா?

நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை கொடுக்கப்படுகிறது. இங்குள்ள வசதிகள் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. நான் அவர்களிடம் பிரியமாக பழகி வருவதால் அனைவரும் என்னை அப்பா, தாத்தா என்றே அழைத்து வருகின்றனர்.

உங்களை நெகிழச் செய்த சம்பவம்…

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சம்பவம் மனதை நெகிழ வைக்கிறது. கல்கத்தாவிலிருந்து ஒரு பெண்மணி தனது குழந்தையின் சிகிச்சைக்காக இங்கு கடந்த 40 நாட்களாக தங்கியிருக்கிறார். அப் பெண்மணியை பெங்கால் அசோஸியேஷன் தங்களது இடத்தில் வந்து தங்கிக் கொள்ளும்படி அழைத்தார்கள். ‘இல்லை நான் இங்கேயே தங்கிக் கொள்கிறேன். இந்த இடம் எனக்கு மிகுந்த பாதுகாப்பாக உள்ளது. இந்த அமைப்பின் நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி ஐயா எனக்கு அப்பாவாகவும் எனது குழந்தைகளுக்கு தாத்தா போலவும் ஒன்றிவிட்டார்’ என்று கூறிவிட்டார். இதுபோன்ற ஏராளமான சம்பவங்கள்…

இங்கு தங்கியுள்ளவர்கள் திருப்தியாக இருக்கிறார்களா?

வாருங்கள்… நேரிடையாகவே அவர்களைப் பார்த்துப் பேசுவோம் (பார்க்க பெட்டிச் செய்தி).

நீங்கள் ஐயப்ப பக்தரா?

ஆமாம். நான் ஐயப்ப பக்தர்தான். சபரிமலைக்கு 50 ஆண்டுகளாக தொடர்ந்து சென்றுள்ளேன். தாம்பரத்தில் ஐயப்பன் கோயில் கட்டியுள்ளேன். கார்த்திகை முதல் தேதி துவங்கி மகர ஜோதிவரை தினசரி 500 பேர்களுக்கு அன்னப் பிரசாதம் வழங்கப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ். பற்றி

நான் ஆர்.எஸ்.எஸ். மீது மிகுந்த பக்தியும், நம்பிக்கையும் வைத்துள்ளேன். ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்கள் பலர் எனக்கு நண்பர்கள். கடந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர்  மோகன் பாகவத் சென்னை வந்தபோது அவரை சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது.

விஜயபாரதம் வாசகர்களுக்கு…

பொதுவாக தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மிஷனரிகள்தான் இது போன்ற தொண்டுகளைச் செய்து வருகிறார்கள் என்ற மாயை உள்ளது. இது இப்போது மாறி வருகிறது. என்னைப் போல ஏராளமான ஹிந்து அன்பர்களும் இத்தகைய தொண்டுகளைச் செய்து வருகிறார்கள். விஜயபாரதம் வாசகர்கள் இந்த செய்தியை மக்களுக்கு கொண்டுசெல்ல உதவிட வேண்டுகிறோம்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வாக்குக்கு ஏற்றார் போல ஸ்ரீமாதா பெயரில் உள்ள இந்த நிறுவனம் செய்துவருகின்ற தொண்டு மேன்மேலும் வளர பிரார்த்தித்து அவரிடமிருந்து விடைபெற்றோம்.

******************************************************************************************************************************

நோயாளிகளின் அறைகளுக்கு அழைத்துச் சென்றார். சேலத்திலிருந்து வந்த ஒரு பெண்மணியிடம் விசாரித்தோம். எனது பெயர் பாப்பு. வயது 48. எனது கணவன் காலமாகிவிட்டார். இரண்டு குழந்தைகள். எனக்கு மார்பக புற்றுநோய். இங்கு வராமல் இருந்திருந்தால் செத்தே போயிருப்பேன். இங்கு நல்ல உணவு, கவனிப்பு, இப்போது நான் குணமாகிவிடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது” என்று தெரிவித்தார்.

******************************************************************************************************************************

இந்த புனித சேவையில் பங்குபெற விரும்புகிறவர்கள் பழகுவதற்கு எளிமையான குணம் கொண்ட

திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களை தொடர்பு கொண்டு பேசலாமே!

தொலைபேசி எண்கள்: 044-2442 0727, 044-6533 3100, 94440 01065