அவரவர் கருத்துகள், கவலைகள்
கலைமணி, முதல்வர், விவேகானந்தா வித்யாலயா, கொரட்டூர்: கோயில்களில் ஆடை கட்டுப்பாடு கொண்டு வந்திருப்பது சரியானதுதான். கலாச்சாரம் போற்ற அதுதான் சரியான வழி.
எம்.என். வெங்கடேசன், தணிக்கையாளர்: ரொம்ப அவசியம். வரவேற்கிறேன். அமல் படுத்துவதில் பிரச்சினை இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். பக்தி வளரவேண்டும் என்று நினைக்கும் எல்லா ஹிந்துக்களும் இதனை வரவேற்பார்கள்.
விக்டோரியா கௌரி, வழக்கறிஞர்: நிச்சயம் நல்ல வரவேற்கத்தக்க முடிவு. நம்முடைய கலாச்சாரம் சார்ந்த ஒரு உத்தரவு என்று நினைக்கிறேன். பெண்களுக்கு எதிராக வன்முறை அதிகமாக நடைபெறும் இந்த காலகட்டத்தில் ஆலயங்களில் மட்டுமல்ல, பொது இடங்களிலும் உடை கட்டுப்பாடு அவசியம் என்றே கருதுகிறேன். ஆலயங்களுக்குச் செல்வது மனதை ஒருமுகப்படுத்தி, வழிபடத்தான். அது பிறரின் கவனச் சிதறலுக்கு காரணமாக அமைவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுவாக பெண்களுக்கு நாகரிகம் என்ற பெயரில் லெக்கின்ஸ், டி-சர்ட், ஜீன்ஸ் போன்ற கவர்ச்சிகரமான ஆடைகளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் நம்முடைய பண்பாடு, கலாசாரம் மீது போர் தொடுப்போரே.
விமலா ரமணி, எழுத்தாளர்:
ராமர் வனம் செல்லும்போது அரச உடை களைந்து மரவுரி தரித்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆடை நம் ஆன்மாவின் அடையாளம் கேரளத்திலும் திருப்பதியிலும் கோவில்களில் உடை விஷயத்தில் கண்டிப்புடன் இருப்பது பாராட்டுக்குரியது.
பேராசிரியை இன்சுவை: புனிதமான வழிபாட்டு இடங்களுக்குச் செல்லும்போது பாரம்பரிய ஆடை அணியச் சொல்வது வரவேற்கத்தக்கது. பொழுதுபோக்கு மையங்களுக்கு செல்லும் போது வேண்டுமானால் விதிவிலக்காக தேவையான ஆடைகளை அணிந்து கொள்ளலாம். கோயில் போன்ற புனிதமான இடங்களுக்குச் செல்லும்போது மனது அலைபாயாமல் இருக்க, வேறு சிந்தனை வராது மனதை ஒருமுகப்படுத்த இதுமாதிரியான ஆடை கட்டுப்பாடு அவசியமே. இது நல்ல முயற்சி. வரவேற்கத்தக்கது.
டி. சக்கரவர்த்தி, செயலாளர், விவேகானந்தா கல்விக் கழகம்: பொதுவாக நாடு முழுவதும் பாரதிய பண்பாடு, கலாசாரம் மீட்டெடுக்கப்படும் முயற்சி வெற்றி பெற்று வருகிறது. அதேபோன்று தமிழகத்திலும் ஹிந்து பண்பாடு, கலாச்சாரத்தை அன்றாட வாழ்வில் கொண்டு வருவதற்கான முயற்சியாகத்தான் இதை பார்க்கிறேன். இந்த முயற்சி பண்டைய பாரதத்தின் மகோன்னதநிலை மீண்டும் வருவதற்கான காலம் வந்துவிட்டது என்பதையே குறிக்கிறது.
திருமதி அனுராதா சேகர், பத்திரிகையாளர்: ஏற்கனவே கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இந்த முறை அமலில் உள்ளது. பெண்களைப் பொறுத்தவரை லெக்கின்ஸ், டி-சர்ட், ஜீன்ஸ், சாட்ஸ் போன்ற ஆடைகளை தவிர்ப்பது நல்லதுதான். ஆனால் துப்பட்டாவோடு கூடிய சுடிதார் பெண்களுக்கு எல்லா வகையிலும் ரொம்ப சௌகர்யமான ஆடை என்பது என் கருத்து. ஆண்களைப் பொறுத்தவரை ஏற்கனவே குருவாயூர், கொல்லூர், கன்யாகுமரி, திருச்செந்தூர் கோயில்களில் மேலாடையின்றி வழிபட செல்ல வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. இதில் பாரம்பரியம் என்ற ஒரு வார்த்தை இருப்பதால் இளைஞர்கள் வேஷ்டி அணிந்து கோயிலுக்குச் செல்வதென்பது மிகக் கடினம். சென்னை போன்ற பெருநகரங்களில் வேலைக்கு மத்தியில் தான் எல்லா விஷயமுமே செய்ய வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இளைய தலைமுறையினரை ஆடை கட்டுப்பாடு மேலும் சிரமப்படுத்தும்.
பி. கோவிந்தராஜ், கல்வியாளர்: மனிதனுக்கு ஆடை ரொம்ப முக்கியம். அதுபோல உடை விஷயத்தில் வீடு, ஆபிஸ், பள்ளி, விளையாட்டு மைதானம் போன்றவற்றில் அது அதற்கு உரிய ஆடைகளை அணிகிறோம். அதுபோன்று ஆலயங்களிலும் அதற்கேற்ற ஆடை அணிவது அவசியம். கோயில்களில் ஆகம வழிமுறைப்படி சில விஷயங்களை வகுத்திருக்கிறார்கள். அதனை பின்பற்றுவதே நல்லது. மேலும் பக்தி மனதை ஒருமுகப்படுத்த இறைவனை வழிபடும் இடமாக ஆலயம் உள்ளது. அங்கு கலாசார விரோதமாக, மனதைக் கெடுக்கின்ற விதத்தில் ஆடை அணிவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. மேற்கத்தியநாட்டு கலாசார தாக்கம் காரணமாக இதை எதிர்ப்பது என்பது நமது நோக்கத்தை, பண்பாட்டை சிதைக்கும் முயற்சியாகத்தான் பார்க்க வேண்டும்.
செல்வி ரம்யா, தனியார் நிறுவன ஊழியர்: ரம்யா, டாக்டர் படிக்கப் போனவங்க வெள்ளைக் கோட்டைப் போட்டுக்கிட்டாங்க. வக்கீல் படிப்புக்குப் போனவங்க கருப்பு கோட்டு மாட்டிக்கிட்டாங்க. போலீஸ் வேலைக்கு போனவங்க காக்கி சட்டை பேண்ட் மாட்டிக்கிட்டாங்க. நர்ஸ்களுக்கும் உண்டு யூனிபார்ம். அதுமட்டுமல்ல, அரசு ஊழியர்களுக்கும் ஆடைக் கட்டுப்பாடு உண்டாம். நாம போடற டிரஸ் மத்தவங்க கவனத்தை சிதறடிக்கக்கூடாதுல்ல. ஆலயத்துக்குப் போகும்போது அடக்கமா ஆடையைப் போட்டுக்கிட்டா நாமும் சாமி கும்பிடலாம், மத்தவங்களும் சாமியைப் பாப்பாங்க.
திருமதி கௌரி, வங்கி ஊழியர், சென்னை: கண்டிப்பாக இது வரவேற்கத்தக்கது. கோயில்களுக்கு செல்லும்போது பல்வேறு விஷயங்களுக்கு ஏதோ ஒரு தயாரிப்புடன் தான் செல்கிறோம். மனம் ஒருமித்து செல்வதில் நாம் உடுத்தும் உடையும் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது.
திருமதி ரமாபதி முண்டாரி, ஒரிஸாவை சேர்ந்த வங்கி மேலாளர்: புடவை தவிர வேறு உடையில் இறைவழிபாடு செய்யும் பெண்ணின் பக்தியை குறைத்து மதிப்பிட முடியுமா? அல்லது இறை வழிபாட்டுக்கு வருபவர்கள் சாமி தரிசனம் செய்வதை மீறி, பிற பெண்களை நோக்குவது என்பது அத்தனை தூரம் உண்மையுமில்லை. ஒருவேளை புடவை எனக்கு வசதியாகவில்லை என்றால் நான் கோயிலுக்கு போவதையே மறந்துவிட வேண்டியதுதானா? என்ன கொடுமை?
சொல்வி மோனிஷா, பள்ளி மாணவி: எங்கள் குடும்பத்தில் பாரம்பரிய உடைகள் தவிர்த்து வேறு உடைகள் அணிவதை அறியமாட்டோம். வசதியின்மை என்பது மட்டும் ஒரு காரணமல்ல; பாவாடை தாவணி, புடவை இப்படி அணிவதையே எப்போதும் மனம் நாடுகிறது.
திரு. விஜயகுமார், வணிகர் சங்க நிர்வாகி, அகரம்: நமது பாரம்பர்யம் பற்றி குழந்தைகளுக்கு சொல்லித் தரும் பழக்கம் குடும்பங்களில் குறைந்து வருவதாலேயே, நம் குடும்பங்கள் உடைந்து உறவுகள் மறந்து போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நமது கோயில்களில் உடைகட்டுப்பாடு இருக்குமானால் அப்படியாவது நம் மக்கள் நல்லதை காலப் போக்கில் பழகி கொள்ள முடியும்.
திரு. விஸ்வநாதன் ஆட்டோ ஓட்டுநர், புட்லூர்: வழிபாட்டு ஸ்தலங்களுக்கு நமது பாரம்பரிய உடைகளில் செல்வதுதான் சரி. எனது மகள் பள்ளி ஆசிரியை. புடவைதான் கட்டாய உடை. இப்போது மாணவர் கவனம் சிதற கூடாது என்பதற்கு மேலே கோட்டு ஒன்றை போடவும் சொல்கிறார்கள். இப்படி ஓரிடத்தில் உடை கட்டுப்பாட்டிற்கு நாம் உடன்பட தயார் என்றால் கோயில்களுக்கு செல்வதற்கும் நாம் கட்டுப்படுவதில் என்ன சிரமம்?