சென்னையில் ஆர்.எஸ்.எஸ் நிவாரணப் பணிகளின் தலைமை அலுவலகமாக புரசைவாக்கம் அழகப்பா சாலையில் உள்ள ‘சேவா’ எனும் நான்கு மாடிக் கட்டிடம் செயல்பட்டு வருகிறது. சென்னையில் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு 73 மையங்கள் மூலமாக நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பொறுப்பாளர் தலைமையில் ஒரு குழு களப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
துறைகள் வாரியாக: மீட்புப் பணி, தங்குமிடம், உணவு, குடிதண்ணீர், சுகாதாரம், போக்குவரத்து, மருத்துவம், அலுவலகம், தொண்டர்கள், நிதி, பொருள் சேகரிப்பு என பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
தொண்டர்கள்: சென்னையில் ஏராளமான தொண்டர்கள் முழு நேரமாக நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மாநகரின் பல பகுதிகளில் பெண் தொண்டர்கள் ஏராளமான பேர் உணவு பாக்கெட் போடும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், கோவை, திருப்பூர், மதுரை, வேலூர் என பல மாவட்டங்களிலிருந்து ஏராளமான தொண்டர்கள் வந்துகொண்டே இருந்தார்கள்.
குவிகிறது: தலைமை அலுவலகத்தில் பொருட்கள் வந்து குவிகிறது. அதை இறக்குவதும் கொண்டுசெல்ல வேண்டிய பகுதிகளுக்கு ஏற்றுவதுமாக நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ஈடுபட்டார்கள். குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்க பாய், போர்வை, உணவு பாக்கெட், பிஸ்கட், தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, மருந்து, புதிய துணிமணிகள், உணவு, பக்கெட், மக் என பொருள்களும் வந்து குவிந்தன.
லட்ச லட்சமாய்: இரண்டு லட்சம் பாய், இரண்டு லட்சம் பெட்ஷீட், ஒரு லட்சம் பக்கெட், மக், சமையலுக்குத் தேவையான குறைந்தபட்ச பாத்திர செட்கள் வந்து கொண்டிருக்கின்றன. டாக்டர்கள் வருகை: கேரளம், பெங்களூரு, தமிழகத்தின் சில பகுதிகள் என டாக்டர்கள் அணி அணியாக வந்து கொண்டேயிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு டாக்டர்கள் குழு சென்று மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்து வருகிறது.
கேரள திட்டம்: டிசம்பர் 6ம் தேதி ஒருநாள் சென்னை நிவாரணப் பணிகளுக்காக கேரள மாநிலம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் கிளைகள் நிவாரண நிதி திரட்டி அனுப்பியுள்ளன.
போதுமய்யா போதும்: தமிழகம் மட்டுமல்லாமல் பாரதம் முழுவதிலுமிருந்து என்னென்ன பொருட்கள் தேவை என்று தொலைபேசி தகவல் அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன. இனி பொருட்கள் அனுப்ப வேண்டாம்; பணமாக அனுப்பவும் என்று ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.