அட்டையில் அணிவகுக்கும் சிரித்த முகத்துக்குச் சொந்தக்காரர்களான அந்த ஐந்து பேருக்கும் ’ஓட்டுப் போடுற’ வயசு ஆகவில்லை. ஆனால் சேவை செய்கிற வயசு வந்து விட்டது என்று இவர்கள் தாங்களாகவே நிரூபித்து விட்டார்கள். சென்னை மாநகரின் தனியார் பள்ளிகளில் பதினொன்றாவது வகுப்புப் படிக்கும் சராசரி 17 வயதான மானவ், ஆகர்ஷ், துருவ், ஆத்மன், கணேஷ் என்ற இந்த ’பஞ்ச பாண்டவர்கள்’, சென்னையில் ஒரு ராமாயணம் நடத்திக் காட்டி விட்டார்கள். ராமாயணமே தான். மேடையில் அல்ல. நிஜ வாழ்வில். ’ஊருக்குத் தேவையான சேவை’ எனும் அன்னை சீதையிடம் ’அர்த்தமுள்ள உதவி’ எனும் ராமனை சேர்த்துவைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதுதானே ராமாயணம்? இந்த வால்கள் உண்மையில் அந்த அனுமனின் வால்கள் என்பது பொருத்தம் தானே? எல்லாம் எங்கே தொடங்கியது?
இவர்களின் வீடுகளில் தான். இப்படித்தான் ஒரு நாள் அப்பா அம்மாவுடன் உட்கார்ந்து பேசுகையில், உபகாரமாய் உருப்படியாய் ஏதாவது செய்யேன் என்று சிந்தனையைத் தூண்டினார்கள் மானவின் அப்பா அம்மா. வீட்டில் தொடங்கிய சிந்தனை மைதானம் வரை தொடர்ந்தது. ஒரு நாள் நண்பர்கள் துருவ், ஆத்மன், ஆகர்ஷ், கணேஷ் ஆகியோருடன் ஆடிக் களைத்துப் போய் அமர்ந்து அரட்டை அடிக்கும்போது நாம் ஏன் உதவி செய்ய கூடாது என்று எல்லோருக்கும் தோன்றியது. ’யாருக்கு உதவி செய்ய?’ என்பது முதல் கேள்வி. ஐடியா கொடுத்த அப்பா அம்மாக்கள் தொடர்ந்து வழிகாட்டினார்கள். அவர்கள் எல்லோரும் ரவுண்ட் டேபிள் என்ற சேவை அமைப்பில் இணைந்தவர்கள். அந்த அமைப்பின் மூலம் சென்னை புறநகர் பகுதிகளில் உதவி தேவைப்படுகிற அரசுப் பள்ளிகளின் பட்டியலை தயாரித்தார்கள். துறுதுறுப்பான இந்த ஐவர் குழு தங்களை ’வி ஹெல்ப்’ என்ற பெயரில் சேவை அமைப்பு ஒன்றை உருவாக்கிக்கொண்டு களத்தில் இறங்கினார்கள்.
இவர்கள் கண்ணில் பட்ட பள்ளி சென்னை திருவொற்றியூர் மாடர்ன் மிடில் ஸ்கூல் என்னும் அரசு பள்ளி. நேரே அந்த பள்ளிக்கூடத்துக்குப் போய் பார்த்தபோது பள்ளிக்கு தேவைகள் அதிகம் இருப்பதை கண்டுபிடித்தார்கள். பணமாக கொடுத்து உதவி செய்யலாம் என்று தோன்றியது. காரணம் அந்தப் பள்ளிக்குப் பல விதமான தேவைகள்: கழிப்பறை செப்பனிட வேண்டியிருந்தது. வாஷ்பேசின்கள் தேவைப்பட்டன. வகுப்பறை மேசை, நாற்காலி, பெஞ்சுகள் தேவைப்பட்டது.
அந்தப் பள்ளி பற்றி ஒரு தகவல்: 2004ல் சுனாமி பேரிடர் சென்னையைத் தாக்கியதே, அதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்காகத் தொடங்கப்பட்ட பள்ளி அது. அந்தப் பள்ளிக்கு உதவி செய்வது எவ்வளவு அர்த்தமுள்ள செயல் என்று இந்த ’வி ஹெல்ப்’ வீரர்கள் உணர்ந்தார்கள்.
அடுத்த கேள்வி, எப்படி பணம் சேர்ப்பது என்பது தான். கால்பந்து பிரியர்களான இந்த ஐவர் அணி கால்பந்து போட்டி நடத்தி பணம் சேர்ப்பது என்று முடிவு செய்தார்கள். போட்டியில் கலந்து கொள்ள அணி ஒன்றிற்கு 3,000 ரூபாய் கட்டணம் நிர்ணயித்தார்கள். ஒரு அணிக்கு எட்டுப் பேர். முதலில் வாட்ஸ்அப், பேஸ்புக் வாயிலாக தகவல்களை பரப்பினார்கள். கால்பந்துப் போட்டிக்காக ஒரு இணையதளம் உருவாக்கிக் கொண்டார்கள். நாளிதழ்களிலும் இவர்களது முயற்சி பற்றி தகவல் வெளியானது. செய்தி பரவவே சில தனியார் நிறுவனங்கள் நன்கொடை வழங்க முன்வந்தன. பிள்ளைகளின் மனதில் வேர்கொண்ட நல்ல எண்ணத்தை ஊக்குவிக்க பெற்றோர்களும் உதவி செய்தார்கள்.
மார்ச் 17 அன்று ஒரே நாளில் நாக் அவுட் முறையில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் 19 அணிகள் கலந்து கொண்டன. அதில் ஐந்து அணிகளில் கலந்து கொண்டவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்கள். அந்த அணிகளுக்கான கட்டணத்தை இந்த ஐவரின் பெற்றோர் ஏற்றுக் கொண்டார்கள். போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. பல தனிநபர்களும் சேவை அமைப்புகளும் இவர்களது பணியைப் பாராட்டி பொருளுதவி வழங்கினார்கள். இவ்வாறாகத் திரண்ட தொகையில் செலவு போக ஒரு லட்ச ரூபாய் தேறியது.
அந்தத் தொகையை இந்த ’வி ஹெல்ப்’ குழுவினர் திருவெற்றியூர் பள்ளிக்கு வழங்கினார்கள். அனேகமாக அடுத்த கல்வியாண்டில் பள்ளி திறந்ததும் அந்த திருவொற்றியூர் பள்ளியில் நல்ல நல்ல பெஞ்சுகள் நிறைந்த வகுப்பறைகளும் சுத்தமான கழிப்பறையும் புதிய வாஷ்பேசின்களும் பளிச்சிடும் என்றும், நன்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த நெஞ்சத்துடன் பள்ளித் தலைமை ஆசிரியரும் ஆசிரியப் பெருமக்களும் தங்கள் மாணவர்களை வரவேற்பார்கள் என்றும் நம்பலாம்.
சென்ற வாரம் சென்னை ’விஜயபாரதம்’ அலுவலகத்திற்கு அழைப்பின் பேரில் வந்திருந்த இந்த செயல் வீரர்களிடம், “ தேர்வு நேரம் ஆயிற்றே, இதையெல்லாம் செய்வதற்கு உங்களுக்கு எப்படி முடிந்தது?” என்று நமது செய்தியாளர்கள் கேட்டபோது மானவ் அண்ட் நண்பர்கள் கோரஸாக சொன்ன தகவல் இது: “ உதவி செய்ய வேண்டும் என்று தோன்றிவிட்டது. யாருக்கு உதவி? என்ன உதவி? எப்படி செய்வது? என்ற கேள்விகள் மனதில் குடைந்து கொண்டிருந்தன. எனவே அவற்றுக்கு விடை காணும் சவாலை ஏற்றுக் கொண்டோம். இலக்கை அடைந்த மனத்திருப்தியுடன் தேர்வை தெம்புடன் சந்தித்தோம்!” அவர்கள் குரலில் வயதுக்கேற்ற துடிதுடிப்பும் தேவை அறிந்து சேவை செய்த பெருமிதமும் பளிச்சிட்டன. நியாயம்தானே?