இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதுதான் மனித வாழ்க்கை. இதனால் சிலருக்கு வாழ்க்கை அலுத்து விடுகிறது. நீண்டதூரம் நடந்து களைத்துப் போனவன் சற்று ஓய்வெடுத்து இளைப்பாறும்போது ஆனந்தத்தை அனுபவிக்கிறான். அதுபோல மனிதனுடய வாழ்க்கையில் சில நாட்கள் திருவிழாக்கள், பண்டிகைகள் என கொண்டாடுவதால் கவலைகளை மறந்து மகிழ்ச்சி அடைகிறான். இதற்காக நமது முன்னோர்கள் பண்டிகைகளை ஆன்மிகத்தோடு கலந்து வகுத்தளித்தார்கள்.
ஞான நூல்களில் பகவத் கீதை தனிச்சிறப்பு வாய்ந்தது. அதுபோல பண்டிகைகளில் தீபாவளி உயர்ந்தது. அதனால் காஞ்சிப் பெரியவர் தீபாவளியை பகவத் கீதையின் தம்பி என்கிறார்.
தீபாவளியைப் பற்றிச் சொல்லும் ஒரு ஸ்லோகத்தில் தைலே லக்ஷ்மி; ஜலே கங்கா” என்று வருகிறது. தீபாவளியன்று நாம் இருக்கும் ஊரிலேயே எண்ணெய் தேய்த்துக் கொண்டு வெந்நீரில் ஸ்நானம் செய்தால் கங்கா ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்கிறது. தீபாவளியன்று விடியற்காலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். மற்றைய தினங்களில் அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் கொள்வது தவறு.
பொங்கல் திருநாளில் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று பால் பொங்கிற்றா?” என்று கேட்பது போல தீபாவளியன்று கங்கா ஸ்நானம் ஆச்சா?” என்று கேட்பது மங்கல வழக்கு.
தீபாவளியன்றுதான் நரகாசுர வதம் நடைபெற்றது என்பது ஐதீகம். நரகாசுரனை வதம் செய்ய கண்ணபிரான் அவனோடு போரிட்டபோது தேரோட்டியாக இருந்தது சத்தியபாமா. இது சமுதாயத்திலுள்ள அதர்ம சக்தியை அழிப்பதில் ஆண்களும் பெண்களும் இணைந்து செயலாற்ற வேண்டியதை உணர்த்துகிறது.
நாட்டின் வடபகுதிகளில் தீபாவளி நாளை லக்ஷ்மி பூஜையாகக் கொண்டாடுகிறார்கள். அன்று வியாபாரிகள் புதுக்கணக்கை பூஜை போட்டு துவங்குகிறார்கள். பாரத தேசம் முழுவதும் தீபாவளி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் அவரவர் சக்திக்கேற்ப தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்.
பாரத நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் காணப்படாத ஒரு வித்தியாசமான சூழ்நிலை தமிழகத்தில் அமைந்துவிட்டது. பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்வோர் தீபாவளி தமிழன் பண்டிகையில்லை என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார்கள். அவர்களின் அகராதியில் கிறிஸ்துமஸ், நியூ இயர் டே, ரம்ஜான், பக்ரீத் போன்றவைகள் தமிழ்ப் பண்டிகைகள் என்று கருதுகிறார்கள். நல்லவேளை இத்தகைய தீய சக்திகளின் பிரச்சாரங்கள் தமிழகத்தில் எடுபடவில்லை. கேவலம் சிறுபான்மையினர்களின் ஓட்டு வங்கியை குறிவைத்து ரம்ஜான் நோன்பில் கஞ்சி குடித்து வருகிறார்கள்.
கலைஞர் தொலைக்காட்சியில் கிறிஸ்துமஸ் பண்டிகை தின சிறப்பு நிகழ்ச்சி, ரம்ஜான் பண்டிகை தின சிறப்பு நிகழ்ச்சி என நடத்துவார்கள்; ஆனால், ஹிந்துக்களின் தீபாவளி, விநாயகர் சதுர்த்தியன்று மட்டும் விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி என நடத்தி வருகிறார்கள்.
இத்தகைய ஹிந்து விரோத சக்திகளை தமிழக மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். சில மாதங்களில் தமிழக சட்டமன்றத் தேர்தல் வர இருக்கிறது. தேச விரோத, ஹிந்து விரோத, பிரிவினைவாத சக்திகளை முறியடிக்க நல்லதொரு வாய்ப்பு. நமக்குள்ள ஓட்டுரிமை மூலம் அதர்ம சக்திகளை தர்மம் வென்ற தீபாவளி போல ஹிந்து விரோத, தேசத் துரோக சக்திகளை தோற்கடிக்க ஹிந்து உணர்வோடு ஓட்டளிக்க வேண்டும். அப்போதுதான் நாம் கொண்டாடுகிற தீபாவளி அர்த்தமுள்ளதாக இருக்கும்.
தீபாவளி வாழ்த்துகள்.