அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஆதரிப்பதாக R.S.S தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் ராமர் கோவில் கட்ட நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக R.S.S தலைவர் மோகன் பகவத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு;
ஸ்ரீராமஜென்ம பூமி தொடர்பாக பாரத மக்களின் உணர்வு, நம்பிக்கை, ஈடுபாடு ஆகியவற்றிக்கு நியாயம் தரக்கூடிய வகையில் அமைந்திருக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை RSS வரவேற்கிறது.
பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த வழக்கில், சட்டப்படியான கடைசி தீர்ப்பு வந்துள்ளது. நீ்ண்ட நெடியகாலமாக நடந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எல்லா பரிமாணங்களும் ஆராயப்பட்டுள்ளன. எல்லா பக்கங்களின் கருத்துக்களும், விவாதங்களும் ஆதாரங்களும் மதிப்பிடப்பட்டுள்ளன.
அயராமல் இப்பிரச்சினை குறித்து ஆழ்ந்து ஆராய்ந்து சத்யம், நியாயம் இவற்றை உயர்த்திப்பிடித்து தீர்ப்பளித்த எல்லா நீதிபதிகளுக்கும், அனைத்து தரப்பு வழக்கறிஞர்களுக்கும் நாம் நன்றி கூறுகிறோம், வாழ்த்து தெரிவிக்கிறோம்.
இந்த நீண்ட முயற்சியில் பல விதமாக பங்களித்தவர்களையும் உயிர் தியாகம் செய்தவர்களையும், நாங்கள் நன்றியுணர்வுடன் நினைவு கொள்கிறோம்.
பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய மனநிலையையும் சகோரத்துவத்தையும் வளர்க்க முயற்சி செய்த அரசிற்கும் சமுதாயத்தை சேர்ந்த அனைவருக்கும் நாம் நன்றி கூறிக்கொள்கிறோம்.
சற்றும் மனதின் சமநிலை தடுமாறாமல் தீர்ப்பை எதிர்பார்த்துக்கொண்டிந்த மக்களும் பாராட்டுக்குரியவர்கள்.
இந்தத் தீர்ப்பை ‘வெற்றி’ ‘தோல்வி’ என்ற கோணத்தில் நாம் பார்க்கக்கூடாது.“
சத்தியத்தையும் நீதியையும் ஆழமாக ஆராய்ந்து எடுக்கப்பட்ட இந்த முடிவை தேசத்தின் அனைத்து சமூகங்களின் ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்திற்கும் ஊட்டம் அளிப்பதாக பார்க்க வேண்டும், பயன்படுத்த வேண்டும்.
சமநிலை தவறாமலும் சாத்வீகமாகவும் சட்டத்திற்கும் அரசியல் சாசனத்தின் வரம்பிற்கும் உட்பட்டு மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப இந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியை அரசு துரிதமாக மேற்கொள்ளும் என்று நம்புகிறோம்.
இதுவரை நடந்த எல்லா விஷயங்களையும் மறந்து ஸ்ரீ ராமஜென்ம பூமியில் ஒரு பிரம்மாண்டமான ஆலயம் கட்டுவதில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து கடமை ஆற்றுவோம்.