தமிழகத்தில் தமிழே படிக்காமல் தொடக்கப் பள்ளியிலிருந்து துவங்கலாம் என்ற மோசமான நிலையுள்ளது. ஆனால் நமது தாய் மொழி தமிழின்பால் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக அமெரிக்க நாட்டில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தமிழ் மொழியை ஆர்வத்துடன் பயில்கின்றனர்.
அமெரிக்க தமிழ்க் கல்விக் கழகம் 2009ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் முக்கியக் குறிக்கோள் முற்றிலும் ஆங்கிலச் சூழலில் அமெரிக்காவில் வாழும் நமக்கு அடுத்தடுத்த தலைமுறைகளில் தமிழ் முற்றாக துடைத்தெறியப் படுமோ என்ற கவலை இருக்கிறது. தமிழ்க் கல்வியை அமெரிக்க நாடு தழுவிய அளவில் முனைப்பாக வளர்க்க வேண்டுமெனும் நோக்கில் அமெரிக்காவில் தன்னார்வலர்களால் நடத்தப்பட்டு வரும் பல தமிழ்ப் பள்ளிகளின் ஒருங்கிணைப்பு முயற்சி” என்பதாகும்.
அமெரிக்காவில் பல மாநிலங்களில் பல தமிழ்ப்பள்ளிகள் செயல்படுகின்றன. 75க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளில் 10,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் தமிழ்ப்பாடத்தைப் படிக்கின்றார்கள். வார இறுதியில் இப்பள்ளிகள் நடைபெறுகின்றன.
இக்கழகத்தின் மூலம் தமிழ்ப் பாடத்தை போதிக்க ஒரே மாதிரி பாடத்திட்டம், புத்தகங்கள், மென் பொருட்கள், வருடத்திற்கு மூன்று செமஸ்டர் முறையில் தொடர் மதிப்பீடு, ஆசிரியர் பயிற்சி, மற்றும் கட்டமைப்பு வசதிகள் பற்றிய வழிமுறைகள், வகுப்பறைகள் என ஒவ்வொரு விஷயத்திலும் கவனத்துடன் திட்டமிட்டு செயலாக்கம் செய்யப்படுகின்றது.
ஆசிரியர்கள் தாமே முன்வந்து கௌரவ ஆசிரியர்களாகப் பணி புரிகின்றனர். இவர்கள் பெரும்பாலும் பெரிய நிறுவனங்களில் பெரிய பொறுப்பு வகித்தாலும், தமிழ் மீது கொண்ட ஆர்வத்தாலும், அதைப் போதிப்பதற்கு உள்ள ஈடுபாட்டாலும், கௌரவ ஆசிரியர்களாகப் பணியை மிகவும் சிரத்தையுடன் செய்கின்றனர். கௌரவ ஆசிரியராக பணி செய்யும் மனைவிக்குத் துணையாகக் கணவர் அல்லது ஆசிரியக் கணவருக்கு மனைவி உதவிக்கரம் நீட்டுகின்றனர்.
இப்படி ஜே.ப. மார்கன் சேஸ் எனும் நிறுவனத்தில் உதவித் தலைவராகப் பணிபுரியும் அனுஷா கௌரவத் தமிழாசிரியையாகவும் ஆண்டுமலரின் ஆசிரியையாகவும் துடிதுடிப்புடன் இயங்குவது கண்டு பிரமித்துப் போனேன்.
ஆண்டு விழா
ஒவ்வொரு வருட இறுதியிலும் தமிழ்ப் பள்ளி ஆண்டுவிழா என்பது மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. தமிழ்த்தாய் வாழ்த்தான நீராரும் கடலுடுத்த” எனும் பாடலுடன் விழா துவங்குகின்றது. இதற்கு முன்பு, பல போட்டிகள் நடைபெறுகின்றன. சாத்விக் சுவாமி எனும் சிறுவன் 200க்கும் மேற்பட்ட திருக்குறளை அநாயாசமாகச் சொல்லி, அதன் பொருளையும் (சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் என்பதற்கு ஏற்ப) எடுத்துரைத்தது கண்டு வியந்து போனேன்.
சிகாகோவில் வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி” எனும் பாடலைப் பாட ஏராளமான குழந்தைகளுக்கு, இப்பாடலை நன்கு பாடத் தெரிந்த ஒரு பெண்ணின் தந்தை, வேலை விடுப்பெடுத்துக் கொண்டு ஆர்வத்துடன் சொல்லிக் கொடுத்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன்.
டெலவரில் தமிழ்ப்பள்ளி துவங்க மிகக் கடுமையாக உழைத்து, ஒரு நல்ல நிலையில் பள்ளியைத் தூக்கி நிறுத்தியுள்ள துரைக்கண்ணன் சேவையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆண்டு விழாவின் போது அனைத்துப் பெண்களும் தமிழர் கலாச்சார உடையான புடவையிலும், ஆண்கள் வேட்டியிலும் வந்து, வாழையிலையில் தமிழர் மரபுப்படி, பச்சடி, பாயசம், பருப்பு, கூட்டு, கறிவகைகள், பச்சரிசிச் சோறு, சாம்பார், ரசம், தயிர் என்று விருந்து வைத்து தாமே உடனுக்குடன் இலைகளை அப்புறப்படுத்தியது மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆண்டு விழா நிகழ்ச்சியில், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, தப்பாட்டம் என குழந்தைகள் மட்டுமல்லாமல், பெற்றோர்களும் கலந்துகொண்டு ஜமாய்த்தார்கள். பல்லாங்குழி, தாயம், கிட்டிப்புள் பச்சைக் குதிரை என்ற விளையாட்டுக்களைக் கூட விட்டுவைக்கவில்லை.
தமிழ்ச் சங்கம்
அமெரிக்கா, கனடாவில் இயங்கும் அனைத்துத் தமிழ்ச் சங்கங்களின் ஆண்டு தமிழ் விழாக் கொண்டாட்டம் வருடத்திற்கு ஒவ்வொரு ஊரில் நடைபெறுகின்றது. இதில் தமிழகத்திலிருந்து பெயர் பெற்ற எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள், கலைஞர்கள் போன்றோர் கலந்து கொள்கிறார்கள்.