ஒப்பற்ற தத்துவம் தந்தவர், அதேசமயம் இன்றும் சமுதாய மாற்றத்திற்கான அரும்பணியில் நமக்கெல்லாம் ஊக்கம் தருபவர் – ஸ்ரீ ராமானுஜர் பிறந்த ஆயிரமாவது ஆண்டு தொடங்குகிற இந்த வேளையில், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் அவருடைய நினைவை பரிபூரணமாக போற்றி அவருக்கு வணக்கங்களை சமர்ப்பித்துக் கொள்கிறது.
தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர் தலத்தில் அவதரித்த அந்த ஞானி பகவத் கீதைக்கும் பிரம்ம சூத்திரத்திற்கும் உபநிடதங்களுக்கும் உரை இயற்றியுள்ளார். சமுதாயத்தில் தீமைகளை வேரோடு பறித்தெறியும் விதத்திலும் சமுதாயத்தின் உயிரான பண்பாட்டை போற்றும் விதத்திலும் அவர் பணியாற்றினார். காலாவதியாகிப் போன சித்தாந்தங்களை சமுதாயத்திலிருந்து அப்புறப்படுத்த மென்மையாக ஆனால் முழு மூச்சுடன் அவர் பாடுபட்டார்.
படையெடுத்து வந்த முஸ்லிம்கள் மேல்கோட்டையிலிருந்து (கர்நாடகா) திருமாலின் விக்கிரகத்தை திருடிச்சென்று டெல்லிக்கு கொண்டு போனார்கள். பல்லாயிரம் பக்தர்கள் புடை சூழ ராமானுஜர் டெல்லிக்கு விரைந்தார். அந்த சம்பத்குமாரன் விக்கிரகத்துடன் மேல்கோட்டை திரும்பினார். அசாத்தியம் என்று தோன்றுகிற பணிகளை எல்லாம் அவர் சாதித்தார். முஸ்லிம் சுல்தானின் மகள் ஒருத்தி திருமாலிடம் பக்தி கொண்டிருந்தாள். அவள் ராமானுஜரைப் பின்பற்றி மேல்கோட்டை வந்து சேர்ந்தாள். திருமால் கோயிலில் அந்த பெண்மணிக்கு ஒரு மரியாதைக்குரிய இடமளித்து பூஜைக்குரியவளாக்கி புரட்சி செய்தார் ராமானுஜர். பக்தியில் கரைந்த அவள் நாச்சியார் என்ற அடைமொழியுடன் வணங்கப்பட்டு வருகிறாள்.
ராமானுஜருக்கு திருக்கோட்டியூர் நம்பி, ‘ஓம் நமோ நாராயணாய’ என்று கூறி மந்திர தீட்சை அளித்தார். முக்தி தரக்கூடிய அந்த மந்திரத்தை வேறு யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்தார். ராமானுஜரோ எல்லோரையும் அழைத்து அவர்கள் கேட்கும்படி மந்திரத்தை உரக்க உச்சரித்தார். அப்படிச் அவருக்கு நரகம் கிடைக்கும் என்று குருவானவர் கடிந்து கொண்டார். ஆனால் அமைதி தவழும் குரலில் ராமானுஜர், மக்களுக்கு அமைதியும் முக்தியும் இந்த மந்திரத்தின் மூலம் கிடைக்கும் என்றால் நான் எந்த ஒரு சாபத்தையும் ஏற்கத் தயார்” என்று பதிலளித்தார்.
ஜாதி மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும் என்று ராமானுஜர் வற்புறுத்தினார். அதற்குப் பதிலாக, ஞானம் கைவரப்பெற நாம் பாடுபட வேண்டும் என்றார். மனித சமுதாயத்துக்கே ‘நான்’ என்ற ஆணவம் தான் பகைவன் என்பார் அவர். சமுதாயத்தின் எல்லா பிரிவுகளைச் சேர்ந்த அன்பர்களுக்கும் திருக்கோயில் வழிபாட்டில் பயிற்சி கொடுத்தார்.
முதுமையில் அவர் நடப்பதற்கு ஒருவருடைய தோளைப் பற்றிக்கொண்டு செல்ல வேண்டியிருந்தது. நீராடப் போகும்போது ஒரு பிராமணரின் தோளில் கை வைத்தபடி நடந்து செல்வார். நீராடிவிட்டுத் திரும்பும்போது, ஒரு தலித் அன்பரின் தோளில் கைவைத்து நடந்து வருவார். ஹரிஜன அன்பர்களை அவர் ‘திருக்குலத்தார்’ என்று அன்போடு அழைத்தார். அவர்களுக்கு ‘நித்ய வைஷ்ணவ’ என்ற பட்டம் கொடுத்தார். வைணவ ஆச்சாரியர்கள் ஆகும் அளவுக்கு அவர்களுக்கு அந்தஸ்து கொடுத்தார்.
மாறனேரி நம்பி என்ற தாழ்குல ஞானியாரின் மறைவின் போது பிராமணர்களுக்கு செய்வது போல அவருக்கும் அந்திம கிரியைகள் செய்ததை அங்கீகரித்தார் ராமானுஜர். திருப்பதி கோயிலில் முதல் முறையாக கொல்லா என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தார் ஆலயப் பிரவேசம் செய்ய முடிந்தது அவரால்தான். மேல்கோட்டை பெருமாள் கோயிலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களை வந்து வழிபடும் ஏற்பாடு செய்தார் அவர்.
தனது அறிவாற்றலாலும் வாழ்வாலும் ஆயிரமாண்டுகளுக்கு முன்னதாக அவர் புதியதோர் உலகம் காண வித்தூன்றினார். ஜாதியை தகர்த்து, ஜாதியால் முளைத்த பாரபட்சத்தைக் களைந்து சமுதாயத்தில் புதியதோர் வாழ்க்கை துளிர்க்க பின்வரும் நல்லுபதேசத்தை சமுதாயத்திற்கு வழங்கினார். ந ஜாதி கரணே லோகே குண கல்யாண ஹேதவ” – அதாவது ஒருவருடைய தன்மை அவரது உணரப்படுகிறதே அன்றி, அவரது ஜாதியால் அல்ல.
ராமானுஜர் துவக்கிய அருள் நெறியில் பிரம்மாண்டமான பக்தி இயக்கம் உதயமாயிற்று. சமுதாயத்திலுள்ள தீமைகளை எல்லாம் துடைத்தொழிக்க பல்லாயிரம் சாதுக்களும் துறவிகளும் பக்தர்களும் முன்னணி வகித்த மாபெரும் பக்தி இயக்கம் 13வது நூற்றாண்டில் வளர்ந்தோங்கியது. அந்த பக்தி இயக்கத்தின் துணைகொண்டு கடினமானதொரு காலகட்டத்தை தேசம் கடந்து செல்ல முடிந்தது.
அந்த மாபெரும் மகானின் ஆயிரமாவது ஜெயந்தி கொண்டாடப்படும் ஆண்டு இது. நாம் நம்மையே சோதித்துப் பார்த்துக் கொள்வோம். அவர் அளித்துச் சென்றுள்ள சேதியை வாழ்வில் பதித்துக் கொள்ள ஒவ்வொருவரும் முயற்சி செய்வோம். ‘அனைவரும் நம்மவரே’ என்ற அவரது லட்சியம் நமது சமுதாயத்தின் அஸ்திவாரக் கருத்தாக அமையட்டும். இந்த ஆண்டு நடைபெறும் ஜெயந்தி உற்சவங்களில் கலந்துகொண்டு அவர் தந்து சென்ற கருத்தை பரப்ப முயற்சிப்போம். அந்த மகானுக்கு அதுவே நாம் செய்யும் அஞ்சலி.