அடிக்கடி வாக்குச் சாவடிக்கா? அஞ்சு வருசத்துக்கு ஒரு தரமா? செலவு, பாதுகாப்பு, மனசு, தெளிவு

 

தேர்தலும் தேசமும்

பிறவி தேசபக்தரான டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் ஆர்.எஸ்.எஸ்ஸை 1925ல் துவக்குவதற்கு முன் காங்கிரஸ் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட இயக்கங்களில் தீவிரப் பங்கேற்றார். நாகபுரியில் ஒரு தேர்தலின் போது ஹெட்கேவாரின் நண்பரை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர் பிரச்சார மேடையில் ஹெட்கேவாரின் நண்பரை காட்டமாக விமர்சித்தாலும் ஹெட்கேவாரைப் பற்றிக் குறைசொல்ல ஏதுமில்லை என்று ஒப்புக் கொள்ளும் அளவிற்கு ஹெட்கேவார் அப்பழுக்கற்றவராக விளங்கினார். ஹெட்கேவார் சராசரி பாரதக் குடிமகனை சரியாக அடையாளப்படுத்துகிறார். தேர்தல் பிரச்சார மேடையில் காணாமல் போவது இந்த அடையாளம்தான்.

எனவேதான் ஹெட்கேவார் மறைவிற்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ்ஸை 1940 முதல் 1973 வரை வழிநடத்திய ஸ்ரீ குருஜி கோல்வல்கர் தேர்தல் வந்துவிட்டாலே பொது மேடைகளில் கண்ணியம், பண்பு இவை அடிபட்டுப் போவது எனக்குக் கவலை அளிக்கிறது என்று ஒரு முறை குறிப்பிட்டார். நெரிசலான பேருந்தில், ரயிலில், கடைவீதிகளில் சாமானியர்கள் இங்கிதத்துடன் அனுசரித்து நடப்பதுதான் கண்கூடான நடைமுறை. அதென்னவோ தேர்தல் மேடை என்றாலே மக்களைப் பிரித்து மோதவிடுவது வாடிக்கை ஆகிவிடுகிறது.

பாரத மண்ணில் பாமரர்கள் (வி.ஐ.பி அல்லாதவர்கள்) பண்பாளர்களாகவே நீடிக்கிறார்கள். சில உதாரணங்கள் அத்தாட்சி:

** ஆண்டு 1970. தென்கச்சி கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தல். ஊர் மக்கள் ஒன்றுகூடி பஞ்சாயத்துத் தலைவரை ஏகமனதாக அறிவிப்பதுதான் அங்கே பழக்கம். தேர்தலே நடந்ததில்லை. ஆனால் இரண்டு வேட்பாளர்கள் களத்தில் நின்றதால் அந்த ஆண்டு தேர்தல் அவசியமாயிற்று. இதில் அந்த ஊர்க்காரரான திரைப்படப் பாடலாசிரியர் மருதகாசிக்கு சங்கடம் ஏற்பட்டது. வேட்பாளர்களில் ஒருவர் அவர் மகன்; இன்னொருவர் அவர் மருமகன்! ஊரின் நல்லிணக்கத்தை பாதிக்காதிருக்க அவர் ஒரு காரியம் செய்தார். வீடுவீடாகப் போய் வாக்காளர்களிடம், இரண்டு பேருமே எனக்குப் பிரியமானவர்கள்தான். யார் ஜெயித்தாலும் எனக்கு சந்தோஷம்தான் என்று சொல்லிவிட்டு வந்தார். தேர்தலில் மருமகன் ஜெயித்தார். மருதகாசி, மகன் கையில் மாலையை கொடுத்து மருமகனுக்குப் போடச் சொன்னார். அப்போது ஒரு மூதாட்டி வந்து ஜெயித்தவர் தோற்றவர் இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து மங்கல ஆரத்தி எடுத்தபடி கூறினார்: ரொம்ப நல்லதுப்பா. ரெண்டு பேரும் ஒண்ணாவே இருக்கணும்னுதான் ஊர்ல எல்லாருக்கும் ஆசை” தேர்தல் வந்து ஊர் ஒற்றுமையை பாதிக்க விடக் கூடாது என்று அந்த ஊர் மக்கள் மனதார விரும்பியதையே இது காட்டியது (‘இன்று ஒரு தகவல்’ புகழ் தென்கச்சி கோ. சுவாமிநாதன்தான் அந்த மருமகன்!)

** ஆண்டு 2004. தேதி மே 12. லோக் சபா தேர்தல் நடந்து கொண்டிருந்தது. தொட்டியம் சட்டமன்றத் தொகுதிப் பகுதிக்கான துணை தேர்தல் அதிகாரியாக பணியில் இருந்தார் தொட்டியம் வட்டாட்சியர் ஆறுமுகம். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட வாக்குப் பதிவுக்கான தளவாடங்களை சாவடிகளுக்கு அனுப்பும் பணியை கண்காணித்துக் கொண்டிருந்தார். அப்போது தகவல் வந்தது – துறையூரில் அவரது மாமியார் காலமாகிவிட்டார்கள் என்று. ஆறுமுகம் பாதியில் தேர்தல் பணியை விட்டுவிட்டுப் போய்விடவில்லை. வாக்குப் பதிவு நேரம் முடியும் வரை அங்கேயே இருந்தார். அடுத்து வாக்குப் பதிவு தளவாடங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பப்படுவதை உறுதி செய்தார். அது முடிய இரவு நெடுநேரம் ஆனது. காலையில் அவர் வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் இருப்பது தெரியவந்தது. தகவல் தெரிந்த்தும் மாவட்ட ஆட்சியர் அண்ணாமலை ஸ்தலத்திற்கு வந்தார். ஆறுமுகத்தின் கடமை உணர்வைப் பாராட்டினார். வட்டாட்சியரை உடனே பணியிலிருந்து விடுவித்து அனுப்புமுன் ஆறுமுகத்தை அங்கிருந்த செய்தியாளர்களிடம் அறிமுகம் செய்து சம்பவத்தை விவரித்தார் மாவட்ட ஆட்சியர்.

** பாஜகவுக்குப் பெருவெற்றி தேடித் தந்த 2017 பிப்ரவரி மும்பை மாநகராட்சித் தேர்தலில் மும்பை ’பாண்டுப்’ பகுதி வாக்குச் சாவடி ஒன்றில் ஒரு காட்சி:  அன்றுதான் வாக்காளர்கள் உதய் ஷிண்டே – ஸ்வப்னாலி திருமணம். கல்யாணச் சடங்குகள் தொடங்கின. ஒரு கட்டத்தில் மணமக்கள் இருவரும் எழுந்து வாக்குச் சாவடி நோக்கி நடையைக் கட்டினார்கள். சில உறவினர்கள் ஆட்சேபித்தார்கள். வாக்களிக்கும் கடமைக்குரிய முக்கியத்துவத்தை உதய் எடுத்துக் கூறி சமாதானப்படுத்தினார். வாக்களித்தபின் திருமணச் சடங்குகள் தொடர்ந்தன.

** சங்கரன்கோவில் இடைத்தேர்தல். 2012 மார்ச் 18 அன்று வாக்குப் பதிவு. சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் தெருவைச் சேர்ந்த மாடசாமிக்கும் சங்கரகோமதிக்கும் அன்று காலை சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் வைத்து திருமணம் நடந்தது. அவர்கள் இருவரும் மாலையும் கழுத்துமாக சங்கரன்கோவில் வணிக வைசிய நடுநிலைபள்ளி வாக்குச்சாவடிக்கு மணக் கோலத்தில் சென்று வாக்களித்தனர். வாக்களித்த பிறகு மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

வாக்களிக்கும் சாமானியரும் தேர்தல் நடத்தும் சாதாரண அரசு ஊழியர்களும் தேர்தலின் புனிதத்தை கட்டிக்காத்து வருவதை சங்கரன்கோவில், மும்பை ‘பாண்டுப்’ மணமக்களும் தொட்டியம் ஆறுமுகமும் தென்கச்சி ஊர்மக்களும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டிவிட்டார்கள். தேர்தல் வந்தால் ஊர் இரண்டுபடுவதோ பொதுமேடை கண்ணியம் இழப்பதோ பண்பாளர்களான பாமரர்கள் தேசமான பாரதத்திற்கே அவமானம்.

அதுவும் பொழுது விடிந்து பொழுது போனால் தேர்தல் என்ற நிலை இருக்குமானால் பாமரர்களின் காதும் கருத்தும் என்ன கதி ஆவது?

தேர்தல் செலவு

ஆண்டு 2014 பொதுத்தேர்தல் நடத்துவதற்கு தோராயமாக 3,600 கோடி ரூபாய் செலவாகியிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் செலவிட்ட தொகை 148 கோடி ரூபாய். தேசத்தில் 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன! ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு சுமார் 10,000 கோடி ரூபாய் தேவை என தேர்தல் ஆணையம் கூறியது. மேலும் பாதுகாப்பு படையினரும், வாக்குப் பதிவு இயந்திரங்களும் கூடுதலாக தேவைப்படும்.

தேசப் பாதுகாப்பு

மார்ச் 2017ல் முடிவடைந்த ஐந்து மாநிலத் தேர்தலுக்காக மட்டும் தேர்தல் ஆணையம் ஒரு லட்சம் துணை ராணுவப் படையினர் தேவை என்று அரசிடம் கோரியிருந்தது! ஆண்டு நெடுக எங்காவது தேர்தல் நடந்து கொண்டேயிருந்தால் துணை ராணுவப்  படையினர் அலைக்கழிக்கப்படுவது தேசப் பாதுகாப்புக்கு நல்லதல்ல. அதுவும் மாவோயிஸ்டுகளும் பாகிஸ்தான் ஆதரவுடன் நாட்டுக்குள் அழித்தொழிப்பில் இறங்கும் பயங்கரவாதக் குழுக்களும் பிரிவினைவாதிகளும் ஒடுக்கப்பட வேண்டிய நிலையில் படையினருக்கு இடைவிடாத தேர்தல் பணி என்பது தேசம் பாதுகாப்பை சமரசத்திற்குள்ளாக்குவதில் தான் முடியும்.

தேர்தல் பிரச்சினையில் தெளிவு

அது மட்டுமல்ல. 5 ஆண்டு இடைவெளி கிடைப்பதால் எது தேசியப் பிரச்சினை, எது மாநிலப் பிரச்சினை, எது உள்ளூர்ப் பிரச்சினை என்று பிரித்தறிந்து லோக்சபாவுக்கும் சட்டப் பேரவைக்கும் உள்ளாட்சி அமைப்புக்கும் பிரதிநிதி தேர்ந்தெடுப்பதில் வாக்காளருக்கு பயிற்சி கிடைக்கும். எனவே ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தேசம் தேர்தலை சந்திக்கும் நிலை வருவது வரவேற்கத் தக்கதுதான். டூ

 

*******************************************************************************************************************************************************

தேர்தலின் போதுதான் இது நடந்தது

அஸாமைச் சேர்ந்த காளி தா – ஹிமாக்ஷி தம்பதியினருக்கு பிப்ரவரி 26 அன்று பிறந்த குழந்தை மூச்சு விட திணறி வந்தது. உடனடியாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு குழந்தையை அனுமதிக்க மார்ச் 4 அன்று ஹெலிகாப்டரில் குழந்தை அசாமிலிருந்து டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் தலைநகரில் உள்ள போக்குவரத்து நெரிசல் காரணமாக குழந்தையை குறிப்பிட்ட நேரத்தில் டெல்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியுமா என மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே இந்த பிரச்சினை குறித்து முன்னதாகவே பிரதமர் நரேந்திர மோடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மோடி அப்போது காசியில் உ.பி தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருந்தார். ஆனாலும்  நிலைமையை புரிந்து கொண்டு இந்த விவகாரத்தில் தலையிட்ட மோடி, குழந்தையை விரைவாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வகையில், ஆம்புலன்ஸ் செல்லும் சாலையில் போக்குவரத்தை நிறுத்த உத்தரவிட்டார். இதன் காரணமாக டெல்லி விமான நிலையம் வந்ததும், சரியான நேரத்தில் சாலை வழியாக டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது. மார்ச் 5 அன்று அந்த குழந்தை ஆபத்துக் கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தங்கள் குழந்தையை காப்பாற்றிய  தெய்வம் மோடி என அந்த பெற்றோர்   நன்றி தெரிவித்தார்கள்.

(தினத்தந்தி 2017 மார்ச் 6 )

*******************************************************************************************************************************************************

தேர்தலின் போதுதான் இதுவும் நடந்தது

2011, ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஒரு சம்பவம்: வீடு வீடாக பணம்கொடுத்து செல்லும் அனைத்து அரசியல் வியாபாரிகளும் காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் மளிகைக் கடை வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகரான ஹரிஹரன் வீட்டிற்கும் படையெடுத்தனர். வீட்டின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாக்குக்கான பணத்தைக் கையில் திணித்தனர். ஹரிஹரன் பணம் வாங்க மறுத்து விட்டார். எல்லா அரசியல்கட்சியினருக்கும் ஹரிஹரன் மீது கோபம். பிழைக்கத் தெரியாதவர் என்று தெருவில்உள்ளவர்கள் ஏளனமாகப் பேசினார்கள். 2011 அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல். காஞ்சிபுரம் நகராட்சியில் 47வது வார்டு ஓரிக்கையில் இருக்கும் ஹரிஹரனிடம் இப்போதும் எல்லா கட்சியினரும் வாக்குக்கு பணம் கொடுத்தனர். சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட அனுபவத்தால் மிகவும் யோசனை செய்த ஹரிஹரன் எல்லா கட்சியினரும் கொடுத்த பணத்தையும் பெற்றுக் கொண்டார். தேர்தல் முடிந்த மறுநாளே ஹரிஹரன் தனது வீட்டு வாசலில் தெருச் சாக்கடை மூடி இல்லாமல் தெருவெல்லாம் ஓடுவதையும் துர்நாற்றம் வீசுவதையும் பார்த்து அந்தப் பணத்தை கொண்டு தேவையான பொருட்கள் வாங்கி சாக்கடையை சரிசெய்து மூடி போட்டு மூடினார். பக்கத்தில் உள்ளவர்களுக்கு வியப்பு. என்ன ஹரிஹரன், எங்களிடமும் சொன்னால் இந்த பாவப் பணத்தை பொதுக்காரியத்திற்கு செலவிட்டிருப்போமே!” என்று கோரஸாக சொன்னதைக் கேட்டு, ஹரிஹரன் புன்சிரிப்புடன் சென்றார்.

– ராம. ராஜசேகர்

பெரியவரோ, பிறரோ எந்த ஒரு பாரதப் பிரஜையையும் தேர்தல் எப்படியெல்லாம் பாதிக்கிறது பாருங்கள்.

*******************************************************************************************************************************************************