ஹிந்து வாக்கு வங்கி

தேச நலன், நல்லிணக்கம், சமநீதி அகியவற்றை நிலைநாட்ட ஹிந்து வாக்கு வங்கி அவசியம் என்கிறார் தொன்மையான ஆன்மிக பாரம்பரியத்தில் வரும் வணக்கத்திற்குரிய தமிழ் அறிஞர்.

உலகத்திலுள்ள எல்லா நாடுகளிலும் பெரும்பான்மை மக்களுக்கு எல்லா சலுகைகளும் கொடுப்பார்கள். சிறுபான்மை மக்கள் அவர்களை சார்ந்தே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் நேர்மாறாக, பெரும்பான்மை மக்கள் வஞ்சிக்கப்பட்டு, சிறுபான்மை மக்களுக்கு அளவுக்கதிகமான சலுகைகளும் அதிகாரங்களும் வழங்கப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால், சிறுபான்மை மக்களின் கைப்பாவையாகவே மத்திய, மாநில அரசு செயல்படுகின்றன.

கல்வி

கல்வித் துறையை எடுத்துக் கொண்டால், சிறுபான்மை மக்களுக்காக நிறைய சலுகைகள் கொடுக்கப்படுகிறது. சிறுபான்மையினர் கல்விக் கூடங்களைத் தொடங்குவதற்கும் அவைகளில் ஆசிரியர் நியமனங்களிலும் மாணவர் சேர்க்கையிலும் அரசு எந்த தலையீடும் செய்வதில்லை. அவர்கள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். ஆனால் ஹிந்து கல்வி  நிறுவனங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் அவற்றை தொடங்க,  நடத்த பல்வேறு விதிமுறைகள் மூலமாக நெருக்கடி கொடுக்கிறது. அதனால் கல்வி நிறுவனங்கள் மூடப்படுகிறது; அல்லது சிறுபான்மை வசம் ஒப்படைக்கும் சூழ்நிலை உள்ளது.

எந்தக் கல்வி  நிறுவனத்தில் படித்தாலும் சிறுபான்மை இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு முழு கல்விக் கட்டணத்தையும் எந்த வகுப்பு வரை படித்தாலும் அரசு செலுத்துகிறது. அதேபோன்று பெரும்பான்மை மக்களில் உள்ள ஏழை மாணவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நபர்கள் நல்ல கல்வியைக் கற்றிட, தனியார் நிறுவனத்தில் சேரும்போது பெரும் தொகை கல்விக் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. அதற்கு எந்த ஒரு உதவியும் செய்ய முன்வருவதில்லை.

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதேபோன்று மதம் மாறிய ஆதி திராவிட மாணவர்களுக்கு பி.சி என்ற பெயரில் சலுகைகள் வழங்கப்படுகிறது.  அதுவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டிலிருந்து பிரித்துக் கொடுக்கப்படுகின்றது. சாதி இல்லாத சமத்துவத்தை தருவதாகச் சொல்லி மதம் மாற்றிய பிறகு சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கோருவது எந்த வகையில் நியாயம்?

மக்கள் வரிப்பணத்திலிருந்து புனித பயணம் செல்ல (ஹஜ் யாத்திரை, ஜெருசலம் யாத்திரை) என்ற பெயரில் கோடிக்கணக்கான பணம் செலவிடப்படுகிறது. இதில் ஜெருசலேம் யாத்திரை உலகில் எந்த ஒருநாட்டிலும் மேற்கொள்ளப்படாத யாத்திரை.  இதற்கெல்லாம் இந்த அரசு பணம் வழங்குகிறது. ஆனால் மக்கள் காணிக்கையாக செலுத்தும் பல கோடி ரூபாய் உண்டியல் பணத்திலிருந்து கூட ஹிந்துக்களின் அமர்நாத், முக்திநாத், கைலாஸ் புனித யாத்திரைக்கு பணம் முறையாக வழங்கப்படுவதில்லை. அதுவே ஒரு சில மாநிலங்களில் மட்டுமே பெயரளவுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 10% சிறுபான்மை மக்களுக்கு 3,000 கோடி ரூபாய் வழங்குகின்ற அரசு 90% உள்ள ஹிந்து மக்களுக்கு அதேபோன்று 9 மடங்கு தொகையை ஒதுக்கீடு செய்கிறதா?

அனுமதி விவகாரம்

சிறுபான்மையினரின் கூட்டத்திற்கோ ஆர்ப்பாட்டத்திற்கோ ஊர்வலத்திற்கோ அரசு உடனடியாக அனுமதி swamyஅளிக்கிறது. ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற ஊர்வலங்கள், தேர்த் திருவிழாக்கள் போன்றவற்றிற்கு ஏகப்பட்ட கெடுபிடிகளை, விதிமுறைகளை விதித்து ஹிந்துக்களை தண்டிக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு சம்பவத்திற்காக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முற்றுகையிடப்பட்டு தாக்கப்பட்டது. அதைத் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு, சிறுபான்மையினருக்காக வேடிக்கை பார்த்து கண்டும் காணாமல் இருந்தது.  ஆனால் ஹிந்து மதத்திற்கு எதிராக சிறுபான்மையினரின் பிரச்சார மாநாடுகளுக்கு அரசு எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதி கொடுக்கிறது. ஆனால், நமது சமய, விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்த பல இடங்களில் போராடி அனுமதி பெற வேண்டியிருக்கிறது. விழாக்கள் கூட அவர்கள் சொல்லக்கூடிய நாட்களில் கொண்டாடும் வகையில் தேதிகள் மாற்றியமைக்கப்படுகின்றன. ஆனால் நம் கோயில் குடமுழுக்கு விழாவும் பண்டிகைகளும் கூட அரசு நிர்ணயிக்கும் நாட்களில் நடத்த வேண்டியுள்ளது. இதற்கு சமயத் தலைவர்களிடமோ ஆதீனகர்த்தர்கள் மடாதிபதிகளிடமோ ஜீயர்களிடமோ பெயரளவிற்குக் கூட கலந்தாலோசிப்பதில்லை.

ஆலய நிர்வாகம்

 

சிறுபான்மையினரின் தேவாலயங்கள், மசூதிகளை வக்கஃப் போர்டு மற்றும்   பேராயம் போன்றவற்றை கட்டுப்படுத்துகின்ற அமைப்புகளை சிறுபான்மையினரே நிர்வாகம் செய்கின்றனர். ஆனால் ஹிந்து மத கோயில்கள் மடங்களை அரசுத்துறை நிர்வகிப்பதோடு மதச்சார்பின்மை என்ற பெயரில் பல்வேறு இடையூறுகளையும் ஏற்படுத்தி வருகிறது. கோயிலில் பக்தன் செலுத்தும் காணிக்கை ஆலயங்களின் வளர்ச்சிக்காக பக்தர்களின் நலனுக்காக செலவிடப்படுவதில்லை. மாறாக, அரசின் நலத் திட்டங்களுக்கு செலுத்தப்படுகிறது. ஆலயங்களை நிர்வகிக்க ஹிந்து மடாதிபதிகள், சமயச் சான்றோர்கள், ஓய்வுபெற்ற அறநிலையத் துறை அதிகாரிகள், ஹிந்து உணர்வு மிக்கவர்கள் இடத்தில் ஒப்படைக்க வேண்டும்.

 

இத்தனை வசதிகளையும் சிறுபான்மையினர் அனுபவிப்பதற்குக் காரணம், அவர்கள் மதத் தலைவர்களின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு, ஒற்றுமையாக ஓட்டளிப்பது தொடங்கி, தங்களது உரிமைக்காக போராடவும் முயலுகின்றனர். இதே போன்று ஹிந்துக்களும் அரசிடமிருந்து வசதிகளை, சலுகைகளைப் பெற சமயத் தலைவர்கள், ஆன்றோர்கள், சமய அமைப்புகளின் அறிவுரையை ஏற்று, ஹிந்து ஓட்டு வங்கியை உருவாக்கி, ஹிந்து சமய மக்களின் ஒற்றுமைக்காக யார் பாடுபடுகின்றார்களோ, யார் ஆதரவாக இருக்கின்றார்களோ அவர்களுக்கு ஓட்டளிக்க முன்வர வேண்டும்.  நம்முடைய ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் ஹிந்து ஓட்டு வங்கியின் அவசியத்தையும் தெளிவுபடுத்த வேண்டும்.

இனி வரும்காலங்களில் ஹிந்து உணர்வு உள்ளவர்களுக்கு மட்டுமே ஓட்டளிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும். பிற சமய நிறுவனங்களின் மொழி, இறைவன் குறித்து சிறு தேச விரோத இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தெளிவுபடுத்தி நமது இளைஞர்களை எச்சரிக்கை செய்யவேண்டும். ஹிந்துக் கோயில்களிலும் உண்டியல் பணத்தைக் கொண்டு ஹிந்து சமய பிரச்சாரம் திருமுறைகள், சாஸ்திரங்கள், ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை இலங்கை போன்ற நாடுகளில் சொல்லித் தருவதுபோல ஹிந்து அறநிலையத் துறை சமய சான்றோர்களின்  ஒத்துழைப்புடன் செயல்படுத்த வேண்டும்.