வென்றே தீருவாள் பாரத அன்னை!

தாயே! பாரத மாதா! நான் எந்தக் கோயிலுக்குச் சென்று வணங்கினாலும் அங்கே உன் எழில் வடிவத்தினையே காண்கிறேன்” என்கிறார் பங்கிம் சந்திரர். அவர் இயற்றிய பாடலில் இருந்துதான் ‘வந்தேமாதரம்’ என்ற சொல் உணர்ச்சிப் பிழம்பான கோஷமாக பிறந்தது.

‘வந்தேமாதரம்’ என்ற கோஷத்திற்கு எவ்வளவு சக்தி இருந்தது என்பதனை, சுதந்திரப் போராட்ட வீரர் ம.பொ. சிவஞானம் மிக அருமையாக விளக்குகிறார்.

சுதந்திரப் போராட்டத்தில் போலீசார் தடியால் தாக்கும்போது ஒன்றிரண்டு அடிகளுக்கு மேல் தாங்க முடியாத ஒருவர், ஒவ்வொரு அடி விழும்போதும்  வந்தேமாதர கோஷம்  போடுவதால் அவரது உடலில் பத்துக்கு மேற்பட்ட அடிகளைத் தாங்கக்கூடிய சக்தி வந்துவிடும்” என்பார்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் மக்களிடையே ‘வந்தேமாதரம்’, ‘பாரத் மாதா கீ ஜே!’, ‘ஜெய்ஹிந்த்!’, ‘மகாத்மா காந்திக்கு ஜே!’ போன்ற கோஷங்கள் மெய்சிலிர்ப்பையும் ஆவேசத்தையும் உருவாக்கியது. ஆனால் நமது துரதிருஷ்டம் சுதந்திரம் பெற்ற பிறகு அனைத்தையும் மறந்தோம். அடுத்து வந்த தலைமுறைக்கு சுதந்திரத்தின் பெருமையையும் அருமையையும் சொல்லிக் கொடுக்கவில்லை. அதனால்தான் இன்று நமது இளைஞர்களில் சிலர் எது சரி, எது தவறு என்று புரிந்து கொள்ளாமல் பிரிவினைவாத சக்திகளுக்குத் துணை போகிறார்கள். இதுதானே டெல்லி (ஒ‡க்) ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடந்தது?

இத்தகைய சூழ்நிலையில்தான் ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத், இளைஞர்களுக்கு ‘பாரத் மாதா கீ ஜெய்’ என்று முழக்கமிட கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார். ‘பாரத் மாதா கீ ஜெய்’ என்றால் பாரத அன்னை வெல்க என்று பொருள்.

உடனடியாக சில முஸ்லிம் தலைவர்கள் எங்கள் மீது இந்தக் கோஷத்தை திணிக்காதீர்கள் என்றார்கள். இதில் திணிப்பு என்பதற்கு எதுவுமில்லை. இது உணர்வுபூர்வமான விஷயம். ரஷ்ய, சீன சிந்தனைகளில் ஊறிய கம்யூனிஸ்டுகளுக்கு இதன் முக்கியத்துவம் தெரியாமல் இருக்கலாம். ஆனால் காங்கிரசுக்கும் புரியவில்லை என்பதுதான் வெட்கக் கேடு.