விளம்பி ஆண்டு நிறைவு பெற்று விகாரி ஆண்டு பிறக்க இருக்கிறது. சித்திரைத் திங்கள் முதல் நாள், வஸந்த ருது தொடங்கும் நாள். இந்த நாள் ஆண்டின் தொடக்க நாளாக இருப்பது எத்தனை பொருத்தம். இளவேனில் காலத்தில் இயற்கை பொலிவோடிருக்கும். எங்கும் பச்சைப் பசேல் என்று விளங்கும். நறுமலர்களின் மணம் காற்றில் பரவி விளங்கும். மரம் செடி கொடிகள் எல்லாம் பூத்துக் குலுங்கும்.
சூரியன் மேஷ ராசியில் பிரவேசிப்பதால் இதனை நாமும் கேரளீயர்களும் மேஷ மாஸ பிறப்பு என்கிறோம்.
மேஷ ராசி தொடங்கி சூரியன் ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் ஒரு மாதம் எனப்படுகிறது. மீனராசி சஞ்சாரத்துக்குப் பின் சூரியன் மீண்டும் மேஷ ராசியில் பிரவேசிக்கிறான். ராசிகள் பன்னிரண்டு என்பதால் மாதங்களும் பன்னிரண்டு.
இந்த மாத பெளர்ணமி சித்ரா நட்சத்திரத்தன்று வருவதால் இந்த மாதம் சைத்ரம் என்று வட பாரதத்தவர்களாலும் சித்திரை என்று நம்மாலும் அழைக்கப்படுகிறது.
விஷுக்கனி காணல்
வஸந்த ருதுவின் தொடக்க நாளான இன்று வஸந்த ருதுவில் பூக்கும் பூக்கள், காய்க்கும் காய்கள், கனியும் கனிகள், விளையும் தான்யங்கள் ஆகியவற்றை இறைவன் திருமுன்னர் படைத்து அதிகாலை கண் விழிக்கும்போதே தனது முகத்தில் விழிக்கும்படியாக ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியும் வைத்து வீட்டில் உள்ேளார் அனைவரும் அதனைக் கண்டு கண் விழிப்பதையே – விஷுக்கனி காணல் என்பர்.
பஞ்சாங்கம் படித்தல்
பஞ்சாங்கம் படித்தல் என்ற ஒரு செயலில் பல விஷயங்கள் பற்றிய அறிவுபூர்வமான எண்ணங்கள் இடம் பெறுகின்றன.
வானசாஸ்திரம், ஜோதிடம், வானிலை ஹேஷ்யம், அரசியல், பொருளாதாரம், சரித்திரம், esotoric science எனப்படும் சூக்ஷ்ம உலக சக்தியின் செயல்நிலைகள், ஆன்மீக முன்னேற்றம் ஆகியவை இவற்றுள் முக்கியமானவை.
காலையில் பூஜை அறையில் விஷுக்கனி கண்ட பின்னர் நீராடி, புத்தம் புதுத் துணிகளை அணிய வேண்டும். பின்பு பூஜை அறையில் புதிய பஞ்சாங்கத்தை வைத்து அதற்குச் சந்தனம் குங்குமம் இட்டு மலரிட்டு அர்ச்சிக்க வேண்டும்.
பின்னர் பஞ்சாங்கத்தில் உள்ள பலன்களை வீட்டில் உள்ளோர் அனைவரும் கேட்கும்படி உரக்கப் படிக்க வேண்டும்.
இனிப்பும் கசப்பும்
வாழ்க்கை நிகழ்வுகள் எப்போதும் இனியனவாகவே இருப்பதில்லை. சில நேரங்களில் கசப்பான சம்பவங்கள் வாழ்வில் அமைந்தே தீரும். ஆகவே கசப்பும் இனிப்பும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை ஒவ்வோர் ஆண்டின் முதல் நாளிலும் நமக்கு நினைவுபடுத்திக் கொள்ளவே புத்தாண்டு விருந்தில் வேப்பம்பூ பச்சடி இடம் பெறுகிறது.
இப்படிக் காலங்காலமாகக் கொண்டாடப் படும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தையே நம்முடைய உண்மையான புத்தாண்டு தினமாகக் கொண்டாடி, ஜனவரி ஒண்ணாந்தேதியன்று புத்தாண்டு கொண்டாடும் மேற்கத்திய பைத்தியக்காரத் தாக்கத்திலிருந்து முற்றிலுமாக விடுபடுவோமா-?