ராமன்தான் ஆளவேண்டும்

சமீபத்தில் சில கிராமங்களுக்குச் சென்றிருந்தேன். அம்மாடி… என்னமாகத் தெளிவாகப் பேசுகிறார்கள் பெண்கள்! மைக்ரோ ஃபைனான்ஸ் முதல் இந்திய வங்கிகளின் இருப்பு வரை அத்துனையும் உணர்ந்திருக்கிறார்கள்.

மக்கள் தொகையில் பாதிப்பேர் பெண்கள் என்கிற நிலையில் இந்த நாட்டிற்குத் தேவை நல்ல அரசாங்கம். நல்ல தலைமை என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டாமா?

நிறையப் பெண்கள் இன்றைக்கு அரசியலிலே கொடிகட்டிப் பறக்கிறார்கள். அரசியல் மட்டுமா, நிபுணர்களாக, அமைச்சர்களாக சொல்லிக் கொண்டே போகலாம். ஆளுமையும் உயர் பண்பும் கொண்டு அவரவர் துறையிலே நட்சத்திரம் போல ஜொலிக்கிறார்கள்.

இத்தனை திறமைகள், நுண்ணறிவு இருக்கும் போது பெண்களின் ஓட்டு வரப்போகின்ற அரசாங்கத்தைத் தீர்மானிப்பதாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அந்தப் பார்வையை இப்போதிலிருந்தே ஆரம்பிக்கலாமே.

ஒவ்வொரு பெண்ணும் அரசியலில் ஈடுபட்டுப் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்பதோ, அரசியல் வாதியாகவே ஆகிவிட வேண்டுெமன்பதோ அவசியமில்லை. இத்தனை ஆண்டுகளில் தங்கள் பெற்ற விழிப்புணர்வைக் கொண்டு, தங்களை ஆளப் போகும் அரசாங்கம் எது என்பதை நிர்ணயிப்ப திலும் பயன்படுத்தவேண்டும்.

‘‘ராமன் ஆண்டாலென்ன, ராவணன் ஆண்டா லென்ன?’’ என இனி இருந்துவிடல் முடியாது. எந்த அரசாக இருந்தாலும் அதன் செயல்பாடுகள் நம்முடைய அன்றாட வாழ்க்கையை பாதிக்கும். உப்பு, புளி, பருப்பு விலையிலிருந்து எல்லாமே பாதிக்கப்படக்கூடும். ஒவ்வொன்றிற்கும் அதற் குரிய விலையைக் கொடுத்தாக வேண்டும். தவறான அரசைத் தேர்ந்தெடுத்தால் நாம் கொடுக்கப்போகும் விலை மிகப்பெரியதாகவே இருக்கும்.

நம்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு போக, நல்ல வாழ்க்கையை நாம் வாழ, வழி என்பது நமது கைகளிலேயே இருக்கிறது! ஆம், உங்கள் கையிலுள்ள ஓட்டுதான் அது. அதைச் சரியாகப் புரிந்து பயன்படுத்துங்கள்.