முத்தலாக் – உச்ச நீதிமன்றத்தின் சிறப்புமிக்க தீர்ப்பு

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பெண்கள் முத்தலாக்கின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள். உத்தரா க்ண்ட் மாநிலத்தைச் சார்ந்த ஷாய்ரா பானு, மேற்கு வங்க மாநிலத்தைச் சார்ந்த இஷ்ரத் ஜஹான்,  உ.பி. சார்ந்த குல்ஷன் பர்வீன், அப்ரீன் ரஹ்மான் அடியா சப்ரி ஆகிய இவர்கள் தொடுத்த வழக்கு,  பாரதிய முஸ்லிம் மகிளா ஆந்தோலன் என்ற அமைப்பும் தொடுத்த வழக்கு ஆகியவை மீது தீர்ப்பு வழங்கப்பட்டது.  ஆந்தோலன் என்பது தேசிய முஸ்லிம் பெண்கள் அமைப்பாகும்.   இந்த அமைப்பின் பொறுப்பாளரான ஷக்கியா சோமனுக்கு எதிராகவும், வழக்கு தொடுத்த பெண்களுக்கு எதிராகவும், அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம், தங்களது அமைப்பில் உள்ள பெண்கள் மூலமாக 2016 ஜூன் 8 அன்று டெல்லியில் ஒரு கருத்தரங்கம் நடத்தி, அதில் முத்தலாக் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது என புழுதி கிளப்பியது.

ஆந்தோலன், முத்தலாக் நடைமுறையில் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி ஒரு ஆய்வு நடத்தியது. அதன் அடிப்படையில் பாரத பிரதமருக்கு,  ஒரு மனுவை அளித்தார்கள்.  இந்த மனு 65 வருடங்களாக இந்தியாவில் முல்லாகள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டியது; முத்தலாக் மூலம் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள் படிப்பறிவில்லாதவர்கள், பொருளாதார ரீதியாக கணவனையே நம்பி வாழ வேண்டியவர்கள், பெற்றோர்களால் காப்பற்றப்பட இயலாதவர்கள்; அவர்கள் தான் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  இதன்  காரணமாக 92 சதவீத முஸ்லிம் பெண்கள்  முத்தலாக் முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பது தெரியவந்தது.

இந்தியாவில் 1952-ன் ஹிந்து திருமணச் சட்ட திருத்தத்தின் படி, ஹிந்துக்கள் இரண்டாவது திருமணம் செய்ய வேண்டுமானால் முதல்  மனைவியின் சம்மதம் இல்லாமல் மறு திருமணம்  செய்ய இயலாது. இது ஹிந்து பெண்களுக்கு முழு பாதுகாப்பு. இது போன்ற பாதுகாப்பு எங்களுக்கும் வேண்டும்” என்றும் பிரதமருக்கு அந்தோலன் பெண்கள் கொடுத்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மனுவின் மீதான விசாரணையை நடத்து முன், விவாகரத்து வழக்கில் முஸ்லிம் பெண்களுக்கு பாலின பாரபட்சம் காட்டப்படுகிறதா என்பது குறித்து ஆராய, தகுந்த அமர்வை அமைக்குமாறு தலைமை நீதிபதியை உச்ச நீதிமன்ற அமர்வு கேட்டுக்கொண்டது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைய இதுவே காரணம். முத்தலாக் முறையை ரத்து செய்தால், முஸ்லிம்களின் திருமண / விவாகரத்தை முறைப்படுத்த புதிய சட்டம் கொண்டு வரத் தயார் என  மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளது.

முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை மூன்று தலாக்கால் அழிக்க  அனுமதிக்க முடியாது.  அரசியல் அமைப்பின் கீழ் முஸ்லிம் பெண்களுக்கு நியாயம் வழங்க நாட்டின் அரசாங்கமும் மக்களும் பொறுப்பு ஏற்க வேண்டும்” என்று பிரதமர் மோடி கூறியதை அடிப்படையாக வைத்துதான் உச்ச நீதிமன்றத்தில் வாக்கு மூலம் தாக்கல் செய்த அரசு.

காங்கிரஸ்  கட்சியும் முத்தலாக்கும்

உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னர் பேட்டியளித்த ராகுல் காந்தி, வழக்குத் தொடுத்த முஸ்லிம் பெண்களுக்கு நன்றி தெரிவித்தார்.  ஆனால் உச்ச நீதிமன்றத்தில் முத்தலாக்கிற்கு எதிராக மனு தாக்கல் செய்த அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் சார்பில் வழக்காடிய வழக்கறிஞர்கள், காங்கிரஸ் கட்சியின் மூத்தவர் முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபலும் சல்மான் குர்ஷித்தும் அபிஷேக் மனு சிங்வியும்தான்! கபில் சிபல்   அயோத்தியில் ராமர் பிறந்தார் என ஹிந்துக்கள் நம்புவதை கேள்வி கேட்க கூடாது என்பவர்கள்,  முத்தலாக் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. அதை மட்டும் கேள்வி கேட்க முடியுமா என்று வாதிட்டார்கள் இந்த காங்கிரஸ் பெரும்புள்ளிகள்.

இவ்வாறு உச்ச நீதிமன்றத்தில் முத்தலாக்கிற்கு ஆதரவாக  வாதாடிய கபில் சிபலை அருகில் வைத்துக்கொண்டு, தீர்ப்பை வரவேற்பதாக ராகுல் காந்தி கூறியிருப்பது சரியான கூத்து.  முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைத்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர், குறிப்பாக ராஜீவ் காந்தி.  1978-ல் கணவனால் கைவிடப்பட்ட 62 வயதுடைய ஷா பானுவிற்கு ஜீவனாம்சம் வழங்க மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் உதவி வழங்காமல், முஸ்லிம் அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து,  1986-ல் சட்ட திருத்தம் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சி, முத்தலாக் தீர்ப்பை வரவேற்பதாக கூறுவதுதான் புதிர்.

 

 

 *******************

தலாக் தலாக் தலாக் என்று ஒரே மூச்சில் சொல்லி விவாகரத்து பெறுவதுதான் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளதே தவிர, மாதம் ஒருமுறை வீதம் மும்முறை தலாக் சொல்லும் விவாகரத்து முறையை உச்சநீதிமன்றம் ஒழிக்கவில்லை. முஸ்லிம் பெண்கள் தலைமைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

 *******************

 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் உள்ளது. பெண்ணுக்கு அதிகாரமளித்தல் வகையில் முஸ்லிம் பெண்களுக்கு இந்தத் தீர்ப்பு வலுவான ஆதரவளிக்கிறது”

– பிரதமர் நரேந்திர மோடி

 *******************

 குரானில் முத்தலாக் இல்லை என்பதால் அதை ஒழிக்கிறார்களாம். அப்படியானால் குரானில் உள்ள அநீதிகளும் ஏற்றத்தாழ்வுகளும் இருந்துவிட்டுப் போகட்டும் என்று அர்த்தமா?  – தஸ்லிமா நஸ்ரீன்

 *******************

  பல மதங்களிலும் ‘தனியார் சட்ட’ங்களில் ஊரார் ஒப்புக் கொள்ளாத வழக்கங்களை சட்டம் போட்டுத்தான் சீர்திருத்தியிருக்கிறார்கள். மதம் நம்பிக்கை சம்பந்தப்பட்டது. தர்க்கம் சார்ந்தது அல்ல. உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நஜீர் (ஐவரில் ஒருவர்)

 *******************

 பல முஸ்லிம் நாடுகள் ஒழித்த பழக்கம் முத்தலாக். அது மதம் சார்ந்தது என்று சொல்லி நியாயப்படுத்தப் பார்ப்பது கூடாது.

– நாளிதழில் ஒரு வாசகர் சங்கர்

 *******************

 பிரதமர் மோடி அரசியல் மேடைகளில் மட்டுமல்லாமல் சுதந்திர தினப் பேருரையிலும் முத்தலாக் பிரச்சினையை எழுப்பியிருக்கிறார்.

– ஜே. நந்தகுமார், ஆர்.எஸ்.எஸ். சிந்தனை மேடை பிரக்ஞா பிரவாஹ் பொறுப்பாளர்

 *******************

 இஸ்லாத்தை பின்பற்றும் 9 கோடி இந்தியப் பெண்கள் முத்தலாக் என்னும் கடும் சமூக பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். மதத்தின் பெயரால் அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள். உச்சநீதிமன்றம் அவர்களை அந்த சித்திரவதையிலிருந்து விடுவித்திருக்கிறது. – மூத்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகரும் ராஷ்ட்ரீய முஸ்லிம் மஞ்ச் புரவலருமான இந்திரேஷ் குமார்.

 *******************

 

தேசம் ஒன்றே. தேசத்தின் எல்லா பெண்களுக்கும் ஒரேவித சட்ட பாதுகாப்பு கிடைக்க வழிபிறந்திருக்கிறது. – இந்திரேஷ் குமார்.