பூமிக்கு ஜுரம்!

ரு குறிப்பிட்ட இடத்தில், சுமார் 25 முதல் 30 வருடங்களில், வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம், மழை அளவு, காற்றின் வேகம், ஆகியவற்றை கணக்கிட்டு, அவ்விடத்தில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தினை வல்லுனர்கள் கணக்கிடுகிறார்கள்.

பருவநிலை மாற்றத்திற்கு புவி வெப்பமயமாதல் ஒரு முக்கிய காரணம். மனிதனால் இயற்கையின் மேல் செலுத்தப்படும் ஆதிக்க வெறியினால், வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடு எனும் கரியமில வாயுவின் அளவு அதிகமாகி, புவியின் புறப்பரப்பை வெப்பப்படுத்தி விடுகிறது. மேலும் குளிர் சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள் போன்றவற்றிலிருந்து வெளியேறும் சி.எப்.சி. எனும் குளோரோ ப்ளூரோ கார்பன்கள், அதிக அளவிற்கு ஓசோன் படலத்தைத் தாக்கி அழித்து சூரியனின் புறஊதாக் கதிர்களைப் புவிக்கு வரச் செய்துவிடுகின்றன.

page-10-to-12_pic_3பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக, தேவைகள் ஏற்படுகின்றன. இதனால் தொழிற்சாலை மயமாக்கல், தொழில்நுட்ப மயமாக்கல், நிறுவன மயமாக்கல் எனப் பல்வேறு முன்னேற்றத் திட்டங்களால் வெளியேற்றப்படும் கழிவுகள், பருவநிலை மாற்றத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தி விடுகின்றன.

காடுகள் அழிக்கப்படுதல், நீர்நிலைகள் தூர்க்கப்படுதல், தெளிவில்லாத திட்டங்கள் போன்றவற்றால், உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நம்நாட்டின் பல்லுயிர் வளங்கள், அழிந்து வருகின்றன. பருவநிலை மாற்றத்தின் மிகச் சிறு விளைவைக்கூடக் கணித்துவிடும் நம்மைவிட மிகச் சிறிய உயிரினங்கள் அழிந்து வருகின்றன. பல அரிதாகிக் கொண்டே வருகின்றன. இது தாவர இனங்களுக்கும் பொருந்தும்.

புவியைப் பொறுத்தமட்டில் புவியின் புறப்பரப்பு வெப்பநிலையினை, காடுகளும் கடலும் அதன் வளங்களும், உறைபனி இடங்களும் நதிகளும் ஏன் சிறிய அளவிலான குளங்களும் கூட, கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்கின்றன. இவை அழிக்கப்பட்டால், வெப்பநிலை சிறிது சிறிதாக அதிகமாகி, நாம் எதிர்பார்க்காத விளைவுகளை எல்லாம் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும். குறிப்பாக பருவம் தப்பிப் பெய்யும் மழையினால் அல்லது ஏற்படும் வெப்பச் சலனத்தால், உணவு உற்பத்திக்கான பயிரினங்கள் நடத்தும் மகரந்த சேர்க்கையில் மாற்றம் ஏற்படும். உயிரினங்களில் பல, அதிகமாகவும் சில குறைவாகவும் இனப்பெருக்கம் செய்து, புவியின் உயிர்ச் சூழியலில் சமச்சீரற்ற தன்மை உண்டாக்கும். இதனால், உணவு உற்பத்தி குறையும். கடல் வளங்களுக்கும் இது பொருந்தும்.

டூ இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் வெப்பநிலை 0.6 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளதால், அப்பகுதியில் உள்ள மீன்கள் இடம்விட்டு இடம் நகர்ந்துள்ளதை, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தீமைகளை விளைவிக்கும் பூச்சிகள் அதிகமாகிவிடுகின்றன. உதாரணமாக, உணவு உற்பத்தி பெருக வேண்டும் என்ற ஒரே காரணத்தைக் காட்டி தெளிக்கப்பட்ட பூச்சி மருந்துகளும் உரங்களும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் தவளை இனங்கள் அழிந்துவரக் காரணமாகின்றன.

டூ தவளைகளின் எண்ணிக்கைக் குறைவால் கொசுக்களும் பூச்சிகளும் பெருகி நமக்குத் துன்பத்தைத் தருகின்றன. மற்றொரு பக்கம் தவளையை உணவாக உட்கொள்ளும் ஊர்வன வகைகள் அழியும்நிலையில் உள்ளன.

வளர்ந்த நாடுகள் எப்போதும் மற்ற நாடுகளை நோக்கி கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க அறிவுறுத்திக்கொண்டே இருக்கின்றன. ஆனால், உண்மையில் இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் தொகை அதிகம் இருப்பினும், அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, போன்ற நாடுகளை ஒப்பிட்டுப் பார்த்தால், கரியமில வாயுவின் வெளியேற்றம் குறைவே.

2100ம் ஆண்டில் உலக வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர வாய்ப்புள்ளது எனவும் இதனால் துருவ பகுதியில் உறைந்துள்ள பனிக் கட்டிகள் உருகி, கடலில் கலந்து கடல்நீர் மட்டத்தை அதிகரிக்கும். இதனால் ஏற்படும் பேரிடர்களும் மிகவும் பயங்கரமானதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.

பருவநிலை மாற்றம் என்பது ஏதோ ஒரு சுற்றுசூழல் சார்ந்த விஷயம் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அவ்வாறு செய்தால், அது அரசியல், பொருளாதாரம், சூழியியல், சமுதாய அமைப்பு ஆகியவற்றில் மிக பெரிய தாக்கங்களை உண்டாக்கும்.

மின்சாரப் பயன்பாடு, நீர் மேலாண்மை, உரக் கட்டுப்பாடு அல்லது இயற்கை வேளாண்மை, கழிவுகளை முறையாகப் பராமரித்தல், காடுகளைப் பேணுதல், இயற்கை சார்ந்து புதுமைபடைத்தல், அல்லது கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைச் செயல்படுத்தபடுவது மட்டுமில்லாமல் எனது பூமியைப் பாதுகாப்பது எனது கடமை” என்பது மக்கள் உணர்ந்து விழிப்புணர்வு பெற்றால் மட்டுமே, வருங்காலச் சந்ததியினர் எவ்வித பருவநிலை மாற்ற கோளாறுகளுக்கும் ஆளாகாமல் மகிழ்ச்சியுடன் இருப்பர்.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தேவையான அனைத்துத் திறன்களையும் குறிப்பிட்ட ஒரு நாட்டு மக்கள் மட்டும் பெற்றிருந்தாலோ, அல்லது அசுத்தவாயுவை வெளியேறாமல் தடுக்க முற்பட்டாலோ மட்டும் இப்பிரச்சினைகளிலிருந்து நாம் விடுபட முடியாது. உலகிலுள்ள அனைத்து மக்களும் இணைந்து, ஓர் ஆற்றல்மிக்க செயல்பாட்டினை இயற்கையுடன் கைகோர்த்துச் செய்தால் மட்டுமே, பருவநிலை மாற்றத்தின் பயங்கர விளைவுகள் ஏற்படாமல் செய்ய முடியும்.

ஐ.நா.வின் 21வது பருவநிலை குறித்த உச்சி மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்றது. இம்மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும் கலந்துகொண்டு உரையாற்றினார். 150 நாட்டு தலைவர்கள் இதில் கலந்துகொண்டு விவாதித்தனர்.

ஆனால், இம்மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் சுற்றுச்சூழலை சீர்குலைக்காத வகையில் பாதுகாப்புடன் கூடிய வளர்ச்சிக்கான திட்டங்களும், நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்று உலகின் எதிர்பார்ப்புகள் மற்றும் அதில் இந்தியாவின் பொறுப்புகளையும். பூர்த்தி செய்யும் செயல்களும் அடங்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது, சுற்றுச் சூழல்வளர்ச்சி குறித்து ஆறுதலடையச் செய்துள்ளது.