கொல்கத்தாவில் இயங்கி வரும் ஆசியாடிக் சொசைட்டி நூலகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நூலக அறிவியல் அறிஞர்கள் வழக்கம் போல நூல்களை ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது, வன்ஹி புராணம் (Vanhi Purana) என்ற ஆறாவது நூற்றாண்டைச் சேர்ந்த சம்ஸ்கிருத நூல் ஒன்றை படித்து, அந்நூல் குறித்து ஆய்வு மேற்கொண்டிருந்தவர்களுக்கு ஒரு சந்தேகம் கிளம்பியது. அந்நூலின் தொடர்ச்சி ஒரு இடத்தில் தடைபட்டு, புதிதாக தஸ கிரிப ரக்ஷஷ் சரித்ரம் வதா” (Dasa Griba Rakshash Charitram Vadha) என்ற காப்பியம் தொடங்கியிருப்பதும் அக்காப்பியத்திற்கும் வன்ஹி புராணத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லாமல் இருப்பதும் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், புதிதாக தாங்கள் படிக்கும் இக்காப்பியம், ஏற்கனவே பல ஆயிரம் ஆண்டுகளாக உயிர்ப்புடன் உள்ள பாரதத்தில் ராமாயணக் கதையாக இருப்பது அவர்களை மேலும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இக்காப்பியத்திலும் ராமன், சீதை, ராவணன் ஆகிய கதாபாத்திரங்கள் வருகின்றனர்.
வால்மீகி ராமாயணத்திற்கும் தற்போது எதேச்சையாக கிடைக்கப்பெற்றுள்ள இக்காப்பியத்திற்கும் ஒரு சில வித்தியாசங்கள் தென்படுகின்றன. வால்மீகி ராமாயணத்தில் ஆறு காண்டங்கள். ஆனால், இக்காப்பியத்தில் மொத்தம் ஐந்து காண்டங்களே உள்ளன. பாலகாண்டமும், உத்தரகாண்டமும் இல்லை. அதேபோல, இக்காப்பியம், ராமபிரான், சீதா பிராட்டி ஆகியோரின் நற்குணங்களை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. ராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்த அந்த கொடுமையான நாட்களை மிகவும் அழகாக சித்திரித்துள்ள இந்த காப்பியம், அவர்களது திருமணம், சீதை ராவணனால் கடத்தப்பட்டது ஆகிய நிகழ்வுகளின் சரியான தேதிகளை விவரிக்கின்றது. இது மிகவும் அதிசயம். இந்த அரிய கண்டுபிடிப்பு குறித்து தகவல் அளித்த ஆசியாடிக் சொசைட்டியின் பொதுச்செயலாளர், இக்காப்பியம் ராமனையும் சீதையையும் இதுவரை கண்டறியாத புதிய பரிமாணங்களில் சித்திரிக்கின்றது. இக்காப்பியம் குறித்து மேலும் ஆய்வு தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.
வன்ஹி புராணத்தின் பிரதிகள் உலகில் இரண்டே இடங்களில் – கொல்கத்தாவிலும் லண்டனில் இந்தியா ஆபீஸ் நூலகத்திலும் – தான் உள்ளன.