பிரதமர் மோடிக்கு ‘குளோபல் கோல்கீப்பர்’ விருது

பிரதமர் நரேந்திர மோடிக்கு, பில் அண்ட் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை ‘குளோபல் கோல்கீப்பர்’ விருது வழங்கி கவுரவித்தது.

மக்களின் ஆரோக்கியம் மற்றும் நாட்டின் சுகாதார மேம்பாட்டிற்காக ‛துாய்மை இந்தியா’ திட்டத்தை, கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அனைத்து மக்களுக்கும் கழிப்பிட வசதி செய்து கொடுப்பது, கிராமங்கள் மற்றும் நகரங்களை துாய்மையாக பராமரிப்பது போன்றவை இந்த திட்டத்தின் நோக்கம்.

இந்நிலையில் ‛துாய்மை இந்தியா’ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, பிரதமர் மோடிக்கு, அமெரிக்காவின் உயரிய விருது வழங்கப்பட்டது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபரும், உலகின் மிகப்பெரும் செல்வந்தர்களில் ஒருவருமான பில்கேட்ஸின், ‘பில் – மெலின்டா கேட்ஸ்’ தொண்டு நிறுவனம் சார்பில், பிரதமர் மோடிக்கு ‘குளோபல் கோல்கீப்பர்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இவ்விருதினை பில்கேட்ஸிடமிருந்து பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார்.

இந்த விருது எனக்கானது அல்ல. ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை நிறைவேற்றியதுடன், அதனை தங்களது அன்றாட வாழ்வின் ஒருபகுதியாக மாற்றிய கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் 11 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இத்திட்டத்தால், ஏழை மக்களும், பெண்களும் அதிக பலன் பெற்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.