சர் வில்லியம்ஸ் மார்க் டுலி இங்கிலாந்து செய்தி நிறுவனமான பி.பி.சி.யின் ஆசிய பகுதிக்கான செய்திப் பிரிவின் தலைவராக இருந்ததை பலரும் அறிவார்கள். ஆனால் அவர் இங்கிலாந்தில் படிக்கும் காலத்தில் பாதிரியாராக விரும்பி லிங்கன் இறையியல் கல்லூரியில் சேர்ந்து கிறிஸ்துவத்தை ஆழ்ந்து கற்றவரும் கூட என்பது சிலரே அறிவார்கள். இங்கிலாந்தில் ‘சர் ‘ பட்டம் (2002) பெற்றது மட்டுமன்றி, இந்தியாவிலும் ‘பத்மஸ்ரீ’ (1992), ‘பத்மபூஷன்’ (2005) விருதுகளைப் பெற்றவர். அவர் தன்னைப் பற்றியும் இந்தியா பற்றியும் மோடி அரசு பற்றியும் பல்வேறு பத்திரிகைகளில் அளித்துள்ள பேட்டிகளிலிருந்து தொகுக்கப்பட்டது இது:
நான் கிறிஸ்தவன். நான் கிறிஸ்துவை விட சர்ச் – ஐ (நிறுவனமான மதம்) தான் மிகவும் நேசிப்பதாக என்னுடைய துணைவியார் கூறுவார். மதப்பற்றுள்ள கிறிஸ்தவர்கள் எதை கிறிஸ்தவ கருத்தியல் என்று கருதுகிறார்களோ அதே கருத்தை நானும் கொண்டிருந்தேன். ஆனால், பணியின் காரணமாக இந்தியாவில் நீண்ட காலமாக வசித்த காரணமாக என்னுடைய கிறிஸ்தவ சிந்தனைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டன.
இறைவனை அடைய இதுதான் வழி, இது மட்டுமே வழி என்று ஹிந்துயிசம் எதையும் குறிப்பிடுவதில்லை. இதுவே அதை மற்ற மதங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இந்த ஏற்றுக்கொள்ளும் தன்மையினால்தான் இங்கு பல்வேறு மத நம்பிக்கைகளும் சம்பிர தாயங்களும் வளர முடிகிறது.
இந்திய வரலாற்றில் மதங்களின் பங்கு என்ன என்பது குறித்து பல்வேறுவிதமான கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், உலகிலுள்ள எல்லா மகத்தான மதங்களுக்கும் இந்தியாதான் தாய் வீடு என்பது வரலாற்று ரீதியான, அடிப்படை உண்மை.
பன்முகத்தன்மையும் உங்களுக்கான தனித்துவ மான சமயச் சிந்தனையை ஏற்றுக் கொள்வதும் பாரதத்திற்கேயான பண்பாட்டுச் சிறப்பாகும்.
ஹிந்துக்களின் கர்மவினைக் கொள்கையும் மறுபிறப்பு என்ற கருத்தும் நம்பமுடியாதவை என்று என்னால் புறந்தள்ள முடியவில்லை. கிறிஸ்தவ சிந்தனையான, இந்த வாழ்க்கைக்கு பிறகு….., சொர்கம்….. போன்ற கருத்துக்களைவிட ஹிந்துக்களின் வினை கொள்கை, மறுபிறப்பு போன்ற கருத்துக்கள் மனித சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமானவையாக எனக்குப்படுகிறது.
நமது செயல்களும் அதன் விளைவுகளும் பற்றி கிறிஸ்தவம் கூறியுள்ளது என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் வினைக் கொள்கையையும் மறுபிறப்பையும் நீங்கள் (கிறிஸ்தவர்கள்) ஏற்றுக்கொண்டால் அது வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். பாவமன்னிப்பு, மீட்பு போன்றவற்றின் கருத்தியல் அடிப்படை தகர்ந்து விடும்.
அதேபோல் இறை நம்பிக்கையும். இறை வனை அடைய பலவழிகள் உள்ளன என்று நான் நம்புகிறேன். இறைவனைப் பற்றி நம்முடைய அறிவு வரம்புக்குட்பட்டதென்றும் நம்புகிறேன். கிறிஸ்தவர்கள் இந்த விஷயத்தில் என்னை ஏற்க மாட்டார்கள்.
என்னை பொறுத்தவரையில் கிறிஸ்தவம் எல்லா விஷயங்களையும் தெளிவாக வரையறுக்கிறது. அதில் ஒரு விஷயத்தை நீங்கள் நம்பாவிட்டாலும் கூட அனைத்தையும் இழந்து விடுவீர்கள். எல்லாவற்றையும் இழக்க நான் தயாரில்லை.
இந்த விஷயத்தில் நான் தனியாக இல்லை. கிறிஸ்தவர்களில் பலரும் இந்த மீட்புக் கொள் கையை, பாவமன்னிப்புக் கருத்தை ஏற்க மறுத்து, அதைப்பற்றி கேள்வி எழுப்பி வருகின்றனர்.
‘இறைவனை அடைய ஒரே ஒரு வழி மட்டுமே உண்டு அது ஏசு மட்டுமே’ என்ற தீவிரமான கிறிஸ்தவச் சிந்தனையுடன்தான் நான் இந்தியா வந்தேன். ஆனால் இன்று, இறைவனை அடைய பல வழிகள் உள்ளன என்பதை ஏற்றுக் கொள்கிறேன். வினைக் கொள்கையையும் பிறப்பு என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன். அதனால் தான் இந்தியாவிலேயே நிரந்தரமாக வாழ வந்து விட்டேன்.
இந்திய நாட்டில் (அரசியலில்) ஒரு கண்மூடித்தனமான மதசார்பின்மை நிலவுகிறது. இங்கு ஹிந்துயிசம் பற்றி யாராவது பேசினால் அவரை ஹிந்து (அடிப்படைவாதி) மதவாதி என்று முத்திரை குத்தி விடுகிறார்கள். அதன் அடிப்படை யிலேயே பிரதமர் மோடியை விமர்சிக்கிறார்கள்.
இந்திரா காந்தி நெருக்கடிநிலையை அறிவித்தது ‘சட்ட விரோதமான செயல் ‘ என்றே நான் கருதுகிறேன். இப்போதுள்ள மோடி அரசை நெருக்கடிநிலையுடன் ஒப்பிட்டு எதிர்க்கட்சிகள் பேசி வருவது தவறு. இன்றுள்ள மத்திய அரசு பெரும்பான்மை பலத்துடனும் கட்சியைத் தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் வலிமையான பிரதமருடனும் இருப்பது ஒரு அச்சுறுத்தலான சூழ்நிலையை உருவாக்கி உள்ளதாக கருது கிறார்கள், குறிப்பாக முஸ்லிம்கள்.
ஆனால், இதை நெருக்கடிநிலையுடன் ஒப்பிடு வது தவறு. நெருக்கடிநிலையில் இருந்ததுபோல் அரசியல் சாஸனம் இன்று முடக்கப்படவில்லை. அடிப்படை உரிமைகள் பறிக்கப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட வில்லை.